ஆங்கிலேயர்கள் உடுத்தும் குளிர்கால ஃபேஷன் ஆடைகள் இந்தியாவின் கொளுத்தும் வெயிலுக்கும் தேவை!



சமத்து. அப்படித்தான் கேள்வி கேட்க வேண்டும். சரியான வினாவும் கூட!யெஸ். ட்வீட் உடைகள் என்பது உல்லன் துணிகளால் ஆனவைதான்! போலவே இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற வருடம்தோறும் குளிர்காலம் இருக்கும் நாடுகளில் ஒட்டிப் பிறந்த இரட்டை வாழையாக ஸ்வெட்டருடனேயே நடமாட விதிக்கப்பட்டிருக்கும் மக்கள், உல்லன் மெட்டீரியலில் ஆடைகளை விதம் விதமாக அணிந்து ஆபீஸ், பார்ட்டிகளுக்கு எல்லாம் செல்கிறார்கள்.

ஸோ, இதற்காகவே உல்லனில் டிசைன் செய்யப்படும் ஆடைகள் ட்வீட் டிரெஸ் என்றழைக்கப்படுகின்றன... இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்... குவெஸ்டீன் இஸ்... இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நாங்கள் ஏன் இந்த ட்வீட் உடைகள் பற்றி அறிய வேண்டும்... அதை எப்படி அணியலாம்... என்ன டிரெண்ட் என்றெல்லாம் எதற்காக தெரிந்துகொள்ள வேண்டும்..?

நியாயமான கேள்வி. அதேநேரம் இந்தியாவுக்கும் ட்வீட் டிரெஸ் தேவை என்பதுதான் இன்றைய டிரெண்ட்.வருடத்தில் மூன்று, நான்கு மாதங்களாவது இந்தியாவில் குளிர்காலமாக இருக்கிறது. தலைநகரான தில்லியில் பகலில் வெயில் காய்ந்தாலும் இரவில் எலும்புகளில் குளிர் ஊடுருவுகிறது.
இந்நிலையில் எல்லா துறைகளிலும் சாதனை செய்து வரும் பெண்களின் எண்ணிக்கை வருடந்தோறும் நம்நாட்டில் அதிகரித்து வருகிறது.

உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல பிராஜெக்ட் விஷயமாக வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் நாள் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் பயணப்படும் ஆண்களும் பெண்களும் இந்தியாவில் அதிகரித்து வருகிறார்கள்.

அவர்கள் எல்லாம் குளிர்காலங்களில் வெறும் ‘அந்தக்கால’ மாடல் ஸ்வெட்டரை மட்டும் அணிந்து நடமாட முடியுமா..? ஒரு கெத்து காட்ட வேண்டாமா..?அதனால்தான் இந்தியாவிலும் இப்போது ட்வீட் ஆடைகள் பிரபலமாகி வருகின்றன... இந்த உடைகளை எப்படி அணிய வேண்டும் என்றும் இங்கு விளக்குகிறார் டிசைனர் ஃபரிதா நவாஸ்!

ப்பா! எவ்வளவு பெரிய இன்ட்ரோ! போதும். இத்துடன் நிறுத்திவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆக மேட்டருக்கு செல்வோம்!
‘‘இந்தியாவுல இருக்கிற பல பிராண்டட் கடைகள்ல இப்ப இந்த ட்வீட் உடைகள் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு! டிரெண்டியா நிறைய வெரைட்டிகளையும் பார்க்க முடியுது. வின்டர் கலெக்‌ஷன்னாலே ட்வீட் டிரெஸ்ஸைத்தான் காண்பிப்பாங்க!

ஆக்சுவலா இதனோட உண்மையான பேரு ‘ட்வில்’. வியாபாரத்துக்கு ஒரு பெயர் வைக்கணுமேனு ஸ்காட்லாந்து வியாபாரிகள் லண்டன்ல இருந்து ஒரு லெட்டர் அனுப்ப... ட்வில் என்கிற பெயரை ட்வீட் நதியிலேந்து எடுத்துக்கிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க... ட்வில் மறைஞ்சு ட்வீட் நிலைச்சுடுச்சு!ட்வீட் வியாபரம் நடந்தது என்னவோ இங்கிலாந்துலயும் ஐரோப்பிய நாடுகள்லயும்தான். அப்படியிருக்க ஆஸ்திரேலியாவுல ஓடும் நதியின் பெயர் இதுக்கு வந்தது இப்பவும் ஆச்சர்யமான புதிர்தான்!

ஆரம்பத்துல வெறும் ஓவர் கோட்லதான் டிசைன்ஸ் செஞ்சாங்க. அப்பறம் ஆண்களுக்கான கோட், சூட்னு அப்டேட் ஆகி இப்ப பெண்களுக்கான கோட், அதுக்கு மேட்சிங்கா ஸ்கர்ட் அல்லது பேன்ட்னு வளர்ந்து டிரெண்டாகிடுச்சு!இந்த ட்வீட் கோட்களை ‘ஷெர்லாக் ஹோம்ஸ்‘ படத்துல பேசில் ராத்போன் அதிகம் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்திருக்கலாம். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டௌனி சமீப காலமா பல படங்கள்ல இந்த ட்வீட் கோட்தான் பயன்படுத்தறார்.

பெண்களுடைய ட்வீட் கோட்களை 007 படங்கள்ல பார்க்கலாம். இங்கிலாந்துல பணக்காரர்கள் மட்டுமில்ல, நடுத்தர பெண்களும் இந்த ட்வீட் ஆடைகளைப் பயன்படுத்தறாங்க. நம்மூர் பட்டுப் புடவை மாதிரி இந்த டிரெஸ்ஸும் கொஞ்சம் காஸ்ட்லி!’’ என்கிற ஃபரிதா நவாஸ், ட்வீட் உடைகளில் மூன்று ரகங்கள் இருக்கின்றன என்கிறார்.

‘‘கைகளால நெய்யப்பட்ட சுத்தமான உல்லன் கூட மர டையை பயன்படுத்தற மெட்டீரியல், ஹாரிஸ் ட்வீட்.அயர்லாந்துல டொனீகல் பகுதிகள்ல வைக்கோலில் இருந்து உருவாக்கப்படுகிற மெட்டீரியல், டொனீகல் ட்வீட். டை புளூ பெர்ரி, ஃபச்ஸியா பூக்கள், யூலெக்ஸ் பூக்கள்ல இருந்து இதை தயாரிக்கறாங்க.  

ரா சில்க் மெட்டீரியல்கள்ல உருவாக்குறதுதான் சில்க் ட்வீட். பாலிஸ்டர் பாணில ஃபேக்டரிகள்ல இந்த வகை மெட்டீரியல்களை தயாரிக்கறாங்க...’’ என்று விளக்கிய ஃபரிதா நவாஸ், பெண்கள் எப்படி ட்வீட் சூட்களை உடுத்த வேண்டும் என்றும் டிப்ஸ் தருகிறார்.

‘‘இது வெஸ்டர்ன் ரக உடை. அதனால பூட்ஸ், கிளட்ச் பர்ஸ், முடிஞ்சா மேட்ச்சிங்கான தொப்பி, கைகளுக்கு கிளவுஸ்... இதை எல்லாம் பயன்படுத்தலாம். முடியலையா, ஃபார்மல் உடைகள் மேல ஓவர்கோட் மாதிரி போட்டுக்கலாம்.

இந்த மெட்டீரியல் நம்ம உடலுக்கு ஏத்த மாதிரி விரிவடையும். அதனால தைக்கும்போது லூஸா ஸ்டிச் பண்ணக் கூடாது! லாங் ஸ்கர்ட், ஷார்ட் பென்சில் ஸ்கர்ட் அல்லது காக்டெயில் கவுன்... இப்படி எப்படி வேணும்னாலும் ட்வீட் மெட்டீரியல்களை பயன்படுத்தலாம்!’’ என்கிறார் ஃபரிதா நவாஸ்.

ஷாலினி நியூட்டன்