COFFEE TABLE



ஸ்கேன் செய்யும் கடிகாரம்!

‘‘இனி ‘இசிஜி’ ரிப்போர்ட் எடுக்க ஸ்கேன் சென்டருக்குப் போக வேண்டாம். எங்களின் கைக்கடிகாரமே அந்த வேலையைப் பார்க்கும்...’’ என்ற விளம்பரத்துடன் வெளியாகியுள்ளது ‘வித்திங்ஸ்’ நிறுவனத்தின் இசிஜி ஸ்மார்ட் வாட்ச். 12 மாதங்களுக்குத் தாங்கும் பேட்டரி திறன், இதய செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளும் வசதி, கவர்ச்சியான வடிவமைப்பு என அசத்துகிற இந்த வாட்ச்சின் விலை ரூ.9,200.

வெகேஷன் மூன்!

டோலிவுட்டில் இரண்டு படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா. படப்பிடிப்புக்கு இடையே சில வாரங்கள் பிரேக் கிடைக்க, கணவர் நாக சைதன்யாவுடன் ரிலாக்ஸ் ட்ரிப்பாக நெதர்லாந்து பறந்து வந்திருக்கிறார். அங்கே ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்பெற்ற ‘ஹய்னிகென் (heineken)’ மியூசியம் தந்த அனுபவங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்!

கடுகு சிறுத்தாலும்..!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரமெங்கும் அலிஜாவைப் பற்றித்தான் பேச்சு. அலிஜாவின் தந்தை ஓர் அழகுக் கலை நிபுணர். அவர் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்துவதை நான்கு வயதில் இருந்து கவனித்து வருகிறார் அலிஜா.

இப்போது தந்தையின் ப்யூட்டி பார்லருக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் அலிஜாவின் கைப்பக்குவத்தைக் கண்டு வியந்து போயிருக்கின்றனர். ‘‘இவ்வளவு கச்சிதமாக யாரும் எனக்கு முடி வெட்டியதில்லை...’’ என்று பிரமிக்கிறார் இளைஞர் ஒருவர்.
இத்தனைக்கும் அலிஜாவின் வயது 7தான்!

ஆபத்து அதிக தூரமில்லை!

‘‘இன்னும் முப்பது வருடங்களில் உலக மக்கள் தொகை எங்கேயோ போய்விடும். அதற்கு ஏற்றாற்போல நாம் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை எனில் பெரும் ஆபத்து காத்திருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ‘லேன்செட்’ என்கிற பிரபல மருத்துவ இதழின் ஆய்வு.

‘‘எல்லோருக்கும் சரிவிகித உணவு இல்லாததால் உலகளவில் பசியும் பிணியும் இறப்பும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது...’’ என்று கவலைப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.‘‘தவறான உணவுப்பழக்கம், காய், பழங்களை சேமித்து வைக்கக்கூடிய வசதியின்மை போன்றவற்றால் இந்தியர்கள் உடலளவில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்...’’ என்கிறது அந்த ஆய்வு.

குங்குமம் டீம்