இறந்தவர்களின் திருமணம்



மொகேர் இனத்தவரின் விநோத நம்பிக்கை

இந்தியாவில் ஒரு திருமணம் உலகம் முழுதும் உள்ள மானுடவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் பதியடுக்கா பஞ்சாயத்தைச் சேர்ந்த உக்கினடுக்கா கிராமத்தின் உமேஷ் மற்றும் பள்ளத்தடுக்காவைச் சேர்ந்த சுகன்யா ஆகிய இருவருக்கும் நடைபெற்ற திருமணம்தான் அது.

சரி; யார் இவர்கள்?

இருவருமே மொகேர் என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அது மட்டும் இல்லை. இந்த புதுமணத் தம்பதிகள் இருவருமே இப்போது உயிரோடு இல்லை!ஆமாம்; மணமகன் உமேஷ் இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டு வயதிலேயே அகால மரணமுற்றார். மணமகள் சுகன்யா தனது ஒன்றரை வயதில் இருபது வருடங்களுக்கு முன்பு இறந்தார்.

இந்த இருவருக்கும்தான் நாள் பார்த்து, நட்சத்திரம் குறித்து, ஒரு உண்மையான திருமணம் போலவே எல்லா சடங்குகளும் செய்து ஓர் ஆவி திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள் மொகேர் மக்கள். இவர்கள் இதை, ‘இறந்தவர்களின் மதுமே’ என்கிறார்கள். மதுமே என்றால் திருமணம்.

இந்தியச் சமூகம் பல்வேறு விநோதமான நம்பிக்கைகள், சடங்குகள் கொண்ட பல்லாயிரம் இனக்குழுக்களின் பெருந்தொகுப்பு என்பார்கள் மானுடவியலாளர்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தங்களுக்கென சில வித்தியாசமான சடங்குகள், சம்பிரதாயங்களைக் கொண்ட இனக்குழுக்களும் இங்கு ஏராளம். அதில் ஒன்றுதான் மொகேர்.  

மொகேர் இனத்தவர்களின் தாய்மொழி என்றால் அது துளுதான். கர்நாடக மாநிலத்தின் எல்லைப்புறங்களில் அதிகம் வசிக்கும் இவர்கள் இன்று காலப்போக்கில் தங்கள் தாய்மொழியைக் கொஞ்சம் மறந்துவிட்டாலும் தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களை இன்னமும் கைவிடவில்லை.
துளு கலாசார பாரம்பரியத்தின் மிச்சங்களை, பௌதிகமும் பௌதிகத்துக்கு அப்பாற்பட்டதுமான வாழ்க்கையையும் இணைக்கும் ஆசாரங்களை இவர்கள் இன்றும் பின்பற்றிவருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான், இறந்தவர்களின் திருமணம்.

இறந்தவர்களின் மதுமேவில் ஈடுபடும் மணமகளுக்கு, ‘மதிமால்’ என்று பெயர். ‘மதிமாய்’ என்றால் மணமகன். மணமாகாமல் இறந்துபோனவர்கள் எவ்வளவு சிறிய வயதினராய் இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் வளர்ந்து திருமணப் பருவத்தை எய்துவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. இப்படி, திருமண வயதடைந்து மரித்தவர்களுக்கு பொருத்தமான ஆன்மாவைக் கண்டுபிடித்து திருமணம் செய்து
வைக்க வேண்டியது அவசியம் எனக் கருதுகிறார்கள்.  

இந்த சடங்கு மூலம் இறந்தவர்களின் ஆன்மா நிறைவடைகிறது என்று கருதுகிறார்கள். மேலும் இதன் மூலம் இறந்தவர்களின் வீட்டாரும் நெருங்கிய உறவினர்களுமேகூட தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பாரம் மற்றும் சவால் நிறைவேறியதைப் போல நிம்மதியடைகிறார்கள்.

ஏனோ நமக்குப் புரியாத காரணங்களால் படைத்தவன் நம்மிடமிருந்து அந்த இளம் குருத்துகளைப் பறித்துக்கொள்கிறான். எங்கோ தம்மை மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த திக்கற்ற ஆன்மாக்களுக்கு உதவுவது நமது கடமை. இது படைத்தவன் நமக்கு வைக்கும் சோதனை என்று நம்பும் இவர்களுக்கு இந்த இறந்தவர்களின் மதுமே பெரும் ஆறுதலாக, விடுதலையாக இருக்கிறது.

மதிமாலையும் மதிமாவையும் உருவமாகச் செய்து அலங்கரித்து, அவர்களின் ஆன்மாவை அவற்றில் வரவழைத்து, பல நுட்பமான சடங்குகள் செய்கிறார்கள். வழக்கமான திருமணங்களைப் போன்றே எல்லா முக்கியத்துவமும் இதற்கும் கொடுக்கப்படுகிறது. அபூர்வமும் விசித்திரமுமான இந்தச் சடங்குகளில் கலந்துகொள்ள அனைவருமே ஆர்வமாகக் கூடுகிறார்கள்.

இறந்தவர்களின் உருவங்களை பலாமரக் கட்டையில் செதுக்குகிறார்கள். அவற்றுக்குப் புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிவிக்கிறார்கள். ஆண் உருவத்துக்குத் தலைப்பாகையும் வேட்டியும் ஜிப்பாவும், பெண் உருவத்துக்குப் புடவையும் உடுத்துகிறார்கள். இறந்தவர்களின் துக்கத்தையும் தனிமையையும் நிச்சயமான உண்மையென்றே அறியும் இவர்களுக்கு, இவையெல்லாம் மிகவும் முக்கியமான சடங்குகளாகும்.

மண நாளன்று காலையில், மாப்பிள்ளையின் ஆன்மா சிற்பத்தின் மேல் வரவழைக்கப்படுகிறது. அதற்குப் புத்தாடையும் தலைப்பாகையும் அணிவித்து பொட்டுவைத்து மற்ற அலங்காரங்களும் செய்து, மணப்பெண் வீட்டுக்குப் புறப்படுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் மொகேர் இனத்தவரின் புரோகிதரும் மாப்பிள்ளையின் தந்தையும் மாமாவும் நெருங்கிய உறவினர்களும் அவசியம் இருக்க வேண்டும்.

மணமகள் வீட்டில் எளிமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். சிறிய வீட்டின் வாசலில் தார்பாய் இழுத்துக் கட்டி பந்தலமைத்து, நாற்காலிகள் போடுவார்கள். மற்றொருபுறம் விருந்துக்கான சமையல் கணஜோராக நடந்துகொண்டிருக்கும். சிலை உருவத்தில் வந்த மதிமாவையும் அவரது உறவினர்களையும் பெண் வீ்ட்டார் வரவேற்று அமரவைக்கிறார்கள்.

பலா மரத்தின் கிளையைப் பந்தல் காலாகக் கற்பித்து, சேற்றில் புதைத்து நடுகிறார்கள். அதன் கீழே சாணம் மெழுகிய தரையில் பாய் விரித்து, உதவிப் புரோகிதர்களும் மதிமால் - மதிமாய் ஆகியோரின் பெற்றோரும் எதிரெதிரே அமர்ந்து திருமண ஒப்புதல் பரிமாறிக்கொள்வதுதான் முதலாவது சடங்கு.

இதில் மாப்பிள்ளை வீட்டார், ஒரு இலைத் துண்டில் வெற்றிலை பாக்கும் பணமும் வைத்து பெண் வீட்டாருக்குச் சமர்ப்பிக்கிறார்கள். அடுத்ததாக மாப்பிள்ளை வீட்டார், தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்று பெண் வீட்டாரிடம் சொல்கிறார்கள். இந்த உரையாடல்கள் அனைத்துமே துளு மொழியில் நடக்கும்.

மதிமாலும் மதிமாயும் இனி கண்டனியும் (கணவன்) படுதியுமாக (மனைவி) அதீத உலகில் மகிழ்ச்சியாய் சேர்ந்திருக்கட்டும் என்று மரித்த ஆன்மாக்களுக்காகப் படைத்தவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்பாக கடவுள்களுக்கு மது படைத்து வழிபடுகிறார்கள்.

அலங்கரிக்கப்பட்ட மணமகள் சிலையை, மாப்பிள்ளையின் சிலைக்குப் பக்கத்தில் வைக்கிறார்கள். பிறகு மாலையணிவித்தல், தாலி கட்டுதல் ஆகிய சடங்குகள் நடைபெறுகின்றன. தாலி கட்டும்போது உறவினர்கள் செத்திப்பூக்களும் அரிசியும் தூவி மணமக்களை ஆசீர்வதிக்கிறார்கள். பிறகு, அனைவருக்கும் திருமண விருந்து பரிமாறப்படுகிறது.

இறுதியாக இரு வீட்டு உறவுகளும் விடைபெறும் முன்பு, மணமகள் சிலையை, மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒப்படைப்பார்கள். மணமகள் மற்றும் மாப்பிள்ளை சிலையுடன், மாப்பிள்ளை வீட்டுக்கு வந்துவிட்டால் பிறகு குடிவைக்கும் சடங்கு. இரவில்தான் குடிவைப்பார்கள்.

பால் உள்ள மரத்தின் அடியில்தான் குடிவைக்க வேண்டும். வீட்டு வளாகத்தில் இருக்கும் பலா மரத்தின் அடியில் தரையைச் செதுக்கிச் சுத்தமாக்கி, மதிமாலும் மதிமாயும் குடியிருக்க ஆயத்தம் செய்திருப்பார்கள். சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்து அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பிரார்த்தித்துத் திரும்புகிறார்கள். அப்போது உறவினர்களின் முகத்தில், ஏதோ மிகக் கனமான இதய பாரமொன்றை இறக்கி வைத்த நிம்மதி.

அகாலத்தில் இறந்தவர்களின் குடும்பங்களில் விரும்பத் தகாத சம்பவங்கள் நடக்கும்போது ஜோதிடம் பார்க்கையில், திருமண வயதுக்கு முன்பே இறந்தவர்களின் சாபம்தான் காரணம் என்று சிலர் சொல்வார்கள். இதற்கான பரிகாரமாகவும் ‘இறந்தவர்களின் மதிமே’வை நடத்துகிறார்கள். 

தங்களுடைய மதிமாய்க்காகப் பொருத்தமான மதிமாலைப் பல இடங்களில் விசாரித்துத் தேடிக் கண்டடைகிறார்கள். இதுதான் பெரிய சவால். ஏனெனில் இந்த மதிமால் சொந்த இனமாகத்தான் இருக்க வேண்டும். வேறு சில இனக்குழுக்களிலும் இப்படியான மரித்தவர் திருமணம் உண்டென ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சடங்குகள், பிரார்த்தனைகள், இறந்தவர்களை வரவைப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றில் சிற்சில மாற்றங்களோடு இந்தச் சடங்கு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நாம் காணும் இந்த பௌதிக உலகம் போன்றே பௌதிகத்துக்கு அப்பாற்பட்ட உலகமும் உண்மைதான் என்ற ஆதி மக்களது நம்பிக்கையின் தொடர்ச்சியே இத்தகைய சடங்குகள்.

மரணம் ஓர் ஆன்மாவின் பயணத்தில் நிகழும் சிறு மாற்றம்தானே தவிரவும் அது அப்பயணத்தின் முடிவல்ல. இதுவே இந்தத் திருமணங்களின் ஆதார நம்பிக்கை. இத்தகைய சடங்குகள் வழியே மரணம் என்ற புதிரைக் கடந்து செல்ல விரும்புகிறான் மனிதன்.                              

உலகம் முழுக்கவே இது இருக்கு!

உலகம் முழுதுமே இப்படியான இறந்தோர் திருமணங்கள் பரவலாக உள்ளன. ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா போன்ற பழங்குடிச் சமூகங்கள் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமல்லாது நாகரிகத்தில் மிகவும் முன்னேறிய சமூகங்களிலும் இது அதிகம். குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் இறந்தோர் திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதனை Posthumous Marriage என்று விளிக்கிறார்கள். முதலாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் பல்லாயிரம் வீரர்கள் உயிரிழந்தார்கள்.

இந்த இளைஞர்களை ஏற்கெனவே மணமுடிக்க நிச்சயிக்கப்பட்ட மற்றும் மணம் செய்ய முடிவெடுத்திருந்த பெண்கள் அவர்களைத் திருமணம் செய்ய விரும்புவதாக அரசிடம் மன்றாடினர். தொடர்ந்து பலர் இவ்வாறு கோரவே பிரான்ஸ் அரசு இவர்களின் உணர்வுபூர்வமான கோரிக்கையை ஏற்று இந்த இறந்தோர் திருமணத்துக்கு ஆதரவளித்துள்ளது. சீனாவிலும் வட கொரியாவிலும்கூட இது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இன்றும் நடைபெற்றுவருகிறது.

என்.யுவதி