தமிழ்நாட்டு நீதிமான்கள்



-கோமல் அன்பரசன்

ஆர்க்காடு ராமசாமி முதலியார்
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்தபோது, இப்போது இருப்பதைப் போன்ற ஒன்றுபட்ட இந்தியா இல்லை. சமஸ்தானங்களும், குட்டி ராஜ்ஜியங்களுமாக பிரிந்து கிடந்த பகுதிகளை எல்லாம், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தார் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல். அதில் ஐதராபாத் மட்டும் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தது. ராணுவத்தை வைத்து சுற்றி வளைத்த சூழலில், ஐதராபாத்தை ஆண்ட நிஜாம் ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு பிரச்னையைக் கொண்டுபோனார்.

இந்தியாவுக்கு இது கௌரவப் பிரச்னையானது. எப்படியும் ஐதராபாத் பகுதியை இந்தியாவோடு தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு நியாயங்களை முன் வைத்து, உலக நாடுகளிடம் வாதிட வேண்டும். அதற்கு சரியான நபர், ஏ.ஆர்.முதலியார் என்றழைக்கப்பட்ட ஆர்க்காடு ராமசாமி முதலியார்தான் என நேரு அரசாங்கம் கருதியது. படேல் உறுதியாக நம்பினார்.

அதனை நிரூபிக்கும் விதத்தில் ஐ.நா. சபையில் அதிரடி வாதங்களை முன்வைத்து, ‘ஐதராபாத்தை இந்தியா ஆள்வதே சரி’ என உலக நாடுகளின் பிரதிநிதிகளை ஒப்புக்கொள்ள வைத்தார் முதலியார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க நினைத்த நாடுகளை தன் வாதத்தால் வாயடைத்துப் போக வைத்தார். இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.

அதன் பரம எதிரியான நீதிக்கட்சியின் முக்கிய தலைவராக முதலியார் இருந்தார். அதைவிட முக்கியமாக மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்துகொண்டு, இந்தியாவுடன் மைசூரை இணைப்பதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவரும் அவரே! ‘மவுன்ட்பேட்டன் கொடுத்தாலும், முதலியார் கொடுக்க மறுக்கிறாரே!’ என்று கன்னடத்தில் ஒரு சொல் வழக்கே அந்நாளில் இருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மைசூர் மகாராஜா இந்தியாவிடம் இணங்கிப் போக முடிவெடுத்த பிறகு, திவான் பதவியிலிருந்து ராமசாமி விலகி விட்டார். இந்தப் பின்னணியில் இந்தியாவுக்காக வாதிட அவரை ஐ.நா. சபைக்கு அரசு அனுப்பியதென்றால், வழக்காடுவதிலும் நம்பகத்தன்மையிலும் எவ்வளவு நற்பெயரை அவர் சம்பாதித்து வைத்திருந்திருக்கிறார்! பழைய சென்னை மாகாணத்தின் கர்னூல் பகுதியில், தமிழ்க் குடும்பத்தில், குப்புசுவாமி - சித்தம்மா தம்பதியரின் இரட்டைக்குழந்தைகளில் மூத்த பிள்ளையாக 1887 அக்டோபர் 14ல் பிறந்தவர் ராமசாமி.

உடன் பிறந்தவர் லட்சுமணசுவாமி. இரண்டு வயதானபோது தாயை இழந்த இரட்டையரை, தந்தையே தாயுமானவனாக இருந்து வளர்த்து ஆளாக்கினார். உதவி ஆட்சியராகப் பணியாற்றிய குப்புசுவாமி, பிள்ளைகளுக்கு அறிவு, ஒழுக்கம், உழைப்பு என நற்பண்புகளைக் கொட்டிக் கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், தந்தையின் அன்பும் அவர்களுக்கு நிலைக்கவில்லை. மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்தனர்.

மூத்த சகோதரரின் அரவணைப்பில் சென்னைக்கு குடிபெயர்ந்த இரட்டையர்கள் ராமசாமியும், லட்சுமணசுவாமியும் கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தனர். கல்லூரிக் காலத்திலேயே மேடைப் பேச்சில் இருவருமே பின்னி எடுத்தனர். எங்கே பேச்சுப் போட்டி நடந்தாலும் வெற்றிக்கோப்பை அவர்களுக்குத்தான். பட்டப்படிப்புக்குப் பின்னர் ராமசாமி  சட்டம் படித்தார். அன்றைக்கு சென்னையில் புகழ் வாய்ந்த பாரிஸ்டர்களில் ஒருவரான தாமஸ் ரிச்மண்டிடம் ஜூனியராக சேர்ந்தார். நுட்பமாக சட்ட விவரங்களைக் கவனித்து, அதனை அற்புத பேச்சாற்றலால் வெளிப்படுத்தும் கலையை வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டார்.

கூடவே கடின உழைப்பும் கைகொடுத்தது. தனியாக வக்கீல் தொழில் நடத்தத் தொடங்கிய முதலியாரிடம் வழக்குகள் குவிந்தன. செல்வமும் சேர்ந்தது. இதைத் தாண்டி ஆர்வம் அரசியல் மீது அதீதமாக இருந்தது. பிராமணர்களுக்கு எதிரான  அமைப்பாக அறியப்பட்ட நீதிக்கட்சியில் சேர்ந்தார். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் எந்தப் பொறுப்புக்கும் வந்துவிடலாம். இட ஒதுக்கீட்டின் வழியாக சட்டம் அதற்கான வழிகளைச் செய்து தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, தனித்திறமையாலும் மேலே வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு மட்டுமல்ல, சாதிக்க நினைக்கும் யாரும் சாதிக்கு அப்பாற்பட்டு சமுதாய அங்கீகாரம் பெறுகிறார்கள். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் நிலைமை அப்படியில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் பெருமளவில் பிராமண சமூகத்தவர்களே பொறுப்புகளில் இருந்தனர். கிராமப் பஞ்சாயத்துகளில் தொடங்கி, ஆட்சிமன்றங்கள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் அவர்களது கொடியே பறந்தது.

அப்போது மற்ற சமூகங்களிலிருந்து படித்து வந்த சிலர், அந்த நிலையை மாற்ற நினைத்து உருவாக்கியதே பிராமணரல்லாதோர் சங்கம்!  அதன் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டதே ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ எனப்பட்ட நீதிக்கட்சி. அதில் சேர்ந்த ராமசாமி முதலியார், சில ஆண்டுகளிலேயே கட்சியின் முன்னணி பேச்சாளராக உயர்ந்தார். அவரது எழுத்துத் திறமையும் அபாரமானது. நீதிக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஜஸ்டிஸ்’ இதழுக்கு ஆசிரியரானார். அதில் இவர் எழுதிய கட்டுரைகள் பெரிய அளவில் பேசப்பட்டன.

‘சனாதன தர்மம்’ என்ற பெயரால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுதல், மனு நீதியின் பாதிப்புகள், மதத்தையும் கடவுளையும் தவறாகப் பயன்படுத்தி நடக்கும் அக்கிரமங்கள் ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துகளால் தோலுரித்தார். கட்டுரைகளில் இருந்த ஆங்கில நடையழகு, சொல்வளம் எல்லாம் எதிர்க் கருத்து உள்ளவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்தன. அப்போதுதான்  அரசியல் கேலிச்சித்திரம் எனும் புதுமையை ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையில் அவர் அறிமுகப்படுத்தினார்.

அந்த வகையில் இன்றைய கார்ட்டூன்களுக்கு முன்னோடியானார். இவையெல்லாம் சேர்ந்து பத்திரிகையை வளர்த்தது மட்டுமின்றி, சமூக நீதி பற்றிய சிந்தனையையும் விதைத்தது. இதனால் ‘நீதிக்கட்சியின் மூளை’ என்று சொல்லுமளவிற்கு  முதலியார் வளர்ந்தார். வட இந்தியாவில் செயல்பட்டு வந்த பிராமணரல்லாதோர் இயக்கங்களின் தலைவர்களிடமும் தன் அறிவுத்திறமையால் நன்மதிப்பு பெற்றிருந்தார். அனைத்திந்திய பிராமணரல்லாதோர் மாநாடுகளில் முதலியாரின் பேச்சுகள் அனைவராலும் வரவேற்கப்பட்டன.

சென்னையிலும் அமராவதியிலும் இத்தகைய மாநாடுகளை அவரே முன்னின்று நடத்தினார். சென்னை மாநாட்டில், ‘‘பம்பாயிலிருந்து மெட்ராசுக்கு இந்த இயக்கம் பரவியது மட்டும் போதாது; விந்திய மலையிலிருந்து குமரி முனை வரை நாடெங்கும் உடனடியாகச்  சென்று சேர வேண்டியது அவசியம்’’ என்று பொறி பறக்கப் பேசினார் முதலியார். இதற்காக அடுத்த நாள் ‘தி ஹிந்து’ பத்திரிகை அவரைக் கண்டித்தது.

இங்கே நடந்த மாநாடுகளில் மட்டுமல்ல; வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி, இந்திய சீராய்வுக்குழு லண்டனில் நடத்திய விசாரணையில் நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயருடன் முதலியாரும் பங்கேற்றார். சைமன் கமிஷன் முன்பும் நீதிக்கட்சியின் மற்றொரு தலைவரான ஏ.டி.பன்னீர்செல்வத்துடன்  கலந்து கொண்டார்.

இன்னொரு பக்கம் ஆட்சிப் பணிகளிலும் சிறந்து விளங்கினார். 1920-23 காலத்தில் சென்னை மாகாணத்தில் பொப்பிலி அரசர் தலைமையில் அமைந்த நீதிக்கட்சி அரசின் அமைச்சரவை செயலாளராக ராமசாமி இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்களுக்கு வடிவம் கொடுத்தார். அதில் சென்னை பல்கலைக்கழக சட்டம் குறிப்பிடத்தக்கது. 

சென்னையின் மேயராக 1928 முதல் 1930 வரை சிறப்பாகப் பணியாற்றினார். பிறகு ‘இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில்’ என்று அழைக்கப்பட்ட டெல்லி ராஜாங்க அவையின் உறுப்பினராக இருந்தார். அதைத் தொடர்ந்து டெல்லி மத்திய சட்டசபைக்கு (அதாவது, இப்போதைய நாடாளுமன்றம்) தேர்வானார். அங்கெல்லாம் ஆங்கிலத்தில் முதலியார் நிகழ்த்திய உரைகளும் விவாதங்களும் கேட்டோரைச் சுண்டி இழுத்தன.

அதன் விளைவாக லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். நாடெங்கும் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று வந்த நேரத்தில், 1934ல் மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. அதில் நீதிக்கட்சியின் சார்பில் ராமசாமி முதலியாரும் காங்கிரஸ் சார்பில் தீரர் சத்தியமூர்த்தியும் போட்டியிட்டனர். இதில் முதலியார் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆயினும் முதலியார் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அமைத்த ‘வார் கேபினட்’ எனப்படும் போர் ஆலோசனைக்குழுவில் இந்தியாவின் இரண்டு உறுப்பினர்களில் ஒருவராக ராமசாமி நியமிக்கப்பட்டார். போர் முடிந்த பிறகு ஐ.நா.சபையின்  பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு பதவிக் காலத்தில் ராமசாமி முதலியாரின் முன்முயற்சியில் 61 நாடுகளின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டதுதான் இன்றைக்கு ஐ.நா.வின் முக்கிய அங்கமாக இருக்கும் உலக சுகாதார நிறுவனம் (W.H.O). ‘முதலியார் இடம் பெறாத அவைகள், குழுக்கள் வெகு சிலவாகத்தான் இருக்கும்’ எனும் அளவுக்கு அறிவால் அத்தனை சபைகளையும் வென்றார்.

ஐ.நா. சபை பணி முடிந்து வந்த அவருக்கு மைசூர் சமஸ்தானத்தின் திவான் பதவி (முதல் அமைச்சர்) காத்திருந்தது. அதிலும் தன் முத்திரையைப் பதித்த முதலியார், 1950களுக்குப் பிறகு மெல்ல அரசியலில் இருந்து விலகி, சட்டத்துறை அறிவைத் தொழிற்துறையின் பக்கம் திருப்பினார். இந்திய ஸ்டீம் ஷிப்பிங் கம்பெனி மற்றும் டியூப் இன்வெஸ்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு கடைசி வரை தலைவராக இருந்தார்.

டி.ஐ. சைக்கிள்ஸ் நிறுவனம் உருவாவதற்கு உதவிகளைச் செய்தார். பிரிட்டிஷ் இந்திய அரசின் கே.சி.ஐ.இ. மற்றும் ‘சர்’ பட்டங்களைப் பெற்ற முதலியாருக்கு, விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது. உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியது. அப்படி கௌரவிக்கப்பட்ட முதல் இந்தியர் இவர்தான்!  வழக்கறிஞராக வாழ்வைத் தொடங்கி, உலகம் போற்றிய மேதையாக நீடு புகழ் பெற்று, நிறை வாழ்வு வாழ்ந்து, 1976 ஜூலை 17ல் மறைந்த ஏ.ஆர். முதலியாரின் பணிகள் வரலாற்றின் பக்கங்களில் மறையவே மறையாது! 

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்


அபூர்வ இரட்டையர்கள்

இரட்டைப்பிறவிகளான ஆர்க்காடு ராமசாமி முதலியாரையும் அவரது தம்பி ஆர்க்காடு லட்சுமணசுவாமி முதலியாரையும்  அடையாளம் காணுவது கடினம். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக  பிற்காலத்தில் அண்ணன் ராமசாமி மீசை வைத்துக்கொண்டார். தம்பி மீசை இல்லாமல் இருந்தார். கால் வைத்த துறைகளில் எல்லாம் நாட்டிய வெற்றிக்கொடிகள், அவர்களை ‘அபூர்வ இரட்டையர்கள்’ என அழைக்க வைத்தது. அண்ணன் வக்கீல். தம்பி டாக்டர். இருவருமே அசத்தும் ஆங்கிலச் சொற்பொழிவாளர்கள்.

சென்னை மாகாண சட்டசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். இருவருமே ஐ.நா. அவையின் அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகித்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியது. அதோடு சேர்த்து அண்ணன் 6, தம்பி 15  என கௌரவ டாக்டர் பட்டங்களை வாங்கிக் குவித்தனர்.

ராமசாமி, திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகளும், லட்சுமணசுவாமி இங்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகளும் துணைவேந்தராக இருந்தனர். அதிக காலம் துணைவேந்தராக இருந்த தம்பி ஏ.எல். முதலியாரின்  சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. ராமசாமி 89 வயது வரையிலும் தம்பி 87 வயது வரையிலும் ஆயிரம் பிறை கண்டு வாழ்ந்தார்கள்.

அண்ணாவின் ஆசிரியர்

* ராமசாமி முதலியார் ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அவருடன் உதவி ஆசிரியராக அறிஞர் அண்ணா பணியாற்றினார். பத்திரிகைத்துறையின் ஆரம்ப கட்ட பயிற்சியை மட்டுமின்றி, அரசியலைப் பற்றியும் இவரிடமே அண்ணா கற்றுக்கொண்டார். அதன்பிறகே பெரியாரின் ‘விடுதலை’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து, தி.க.வின் முக்கிய தலைவராகி, பின்னர் தி.மு.கவையும் உருவாக்கி, ஆட்சியைப் பிடித்தார்.

* யார் கடிதம் எழுதினாலும் உடனுக்குடன் பதில் கடிதம் எழுதும் நல்ல பழக்கம் ராமசாமி முதலியாரிடம் இருந்தது. வைணவ நெறிகளில் ஆழ்ந்த பற்றும் இறை நம்பிக்கையும் வைத்திருந்தார். சுறுசுறுப்பும், தோல்விகளில் துவளாத பண்பும் கொண்டிருந்த ராமசாமி, தன் தம்பி லட்சுமணசுவாமி மீது அளப்பரிய பாசம் வைத்திருந்தார்.