உள்ள(த்)தைச் சொல்கிறோம்
 தை அமாவாசையும், திருநாங்கூர் தரிசனமும், கோகுலாச்சாரியாரின் முத்துக்கள் முப்பது மூலம், தை அமாவாசை வரலாறும், அதன் சிறப்புகளும், அன்று அபிராமி அந்தாதி தோன்றிய வரலாறும், அமாவாசை பௌர்ணமியாக மாறியதையும் அறிந்துக் கொண்டேன். மேலும், மது ஜெகதீஷ் அவர்களின் ``லெபாஷி வீரபத்திர சுவாமி’’ ஆலயத்தின் சிறப்பையும், பிரம்மாண்டமான சிற்பங்களையும் பார்த்து, வியந்து போனோம். - லட்சுமி சங்கர், வேலூர்.
``ஆன்மிகத்தின் மையப்புள்ளி அன்புதான்!’’ என்பதை வள்ளுவர், வள்ளலார் ஆகியோரின் கருத்துக்களை மேற்கோள்காட்டி, பாரதிநாதன் எழுதியுள்ள ‘‘அன்பும் கடவுளும்’’ என்ற கட்டுரை, அன்பின் பெருமையை அழகுற விளக்குகிறது. - வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
நானா ஸாஹோப், தான் ஒரு அறிவாளி என்ற கர்வத்தை அடித்து நொறுக்கி; தன் ஞானத்தின் மூலம் புத்திப்புகட்டிய சீரடி சாய்பாபா, மனித வடிவில் தெய்வம் என்பதை உணர்ந்தோம். - கே.எல்.பகவதி, சென்னை.
‘சிவனை பூஜித்த விலங்குகள்’ என்ற தலைப்பில், 18 வித தரிசனச் சிறப்புகளைத் தொகுத்திருப்பது, 27-ஆம் பக்கத்தை காந்த மலை ஜோதியாகத் தரிசிக்க வைத்தது. - வி.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
ஜகத்தை காத்தருளும் தெய்வமாகத் திகழ்கின்ற பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் வரலாறு, அதன் மகத்துவங்கள், அதிசய தகவல்கள் மற்றும் அழகான வண்ணப் படங்கள் இவைகளைத் தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரையை கண்டு, பூரிப்பும், பிரமிப்பும் ஏற்பட்டது ஜகத்தை ஆளும் ஜகந்நாதப் பெருமாளை தரிசித்த மகிழ்வும், மன நெகிழ்வும் ஏற்பட்டது என்றால் மிகையாகா! நன்றி. நிறைந்த பாராட்டுக்கள். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
தை அமாவாசையன்று வழிபட வேண்டிய திருத்தலங்கள், திருநாங்கூர் கருட சேவை தரிசனம், நீர்நிலைகளோடு ஐக்கியப்பட்ட நீத்தார் கடன் தீர்க்கும் மகத்தான ஆலயங்கள், எப்படி பீதுர்கடன் செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை முத்துக்கள் முப்பது பகுதியில் தெளிவுபடுத்தி, கோகுலாச்சாரியார், பக்தர்களை மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வைத்து விட்டார். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
போற்றி வணங்க ‘‘கருட சேவை’’ வண்ண அட்டைப்படம். அகம் தெளிய ``அகத்திய ரகசியம்’’ ஆசிரியர் தலையங்கம்; நினைவுடன் நீத்தார் கடன் நிறைவேற்று ‘‘தை அமாவாசை’’ வழிபாடு; சித்தமெல்லாம் சிவமயமாக்க ‘‘பிரதோஷ வகைகள்; சிந்தைக்கு விருந்தாகும் ``திருக்குறள்’’; கண்டு மகிழ தெய்வீக ‘‘லெபாஷி சிற்பங்கள்’’; இறையின்பத்தை காணும் வழிகளை எடுத்துக்கூறும் ‘‘சீரடி சாய்பாபா, கேபா-பாமா-பாபா’’ கட்டுரைகள்.. இப்படி திருப்பிய பக்கங்கெல்லாம் ஆன்மிகத் தித்திப்பு. இதனால்தான் இவ்விதழ் ‘‘அருள் தரும் ஆன்மிகம்’’ எனப் பெயர் பெற்றதோ! - எஸ்.வஜ்ரவடிவேல், கோவை.
‘ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்’ என்னும் கட்டுரையில் அவிநாசி அப்பரின் சிறப்புகளை முனைவர் ஸ்ரீராம் வெளிப்படுத்தி, எம்பெருமானை சென்று அடி பணிய வைத்துவிட்டார். - கே. பிரபாவதி, கன்னியாகுமரி.
‘ஜகத்தைக் காக்கும் பூரி ஜகந்நாதர்’’ என்ற கட்டுரையை கண்டேன். ஜகந்நாதர் கோயிலை அழகாக படம் பிடித்து காட்டியது, கிருஷ்ணன் ஜகந்நாதராக மாறியது, கோயில் பிரசாதம், தேர்த்திருவிழா என அனைத்தையும் மிக அழகாக விவரித்ததை, இனி என் வாழ்வில் மறக்க முடியாதது. நேரில் சென்று தரிசித்தது போல இருந்தது. - வண்ணை கணேசன், சென்னை.
ஏகபாத திரிமூர்த்தி, திரிபாத திரிமூர்த்தி, மும்மூர்த்திகளின் வடிவமாக விளங்கும் சிவலிங்கத் திருமேனியின் நவதத்துவம் ஆகியவற்றை அருள்தரும் ஆன்மிகம் இதழில் அறிந்து மகிழ்ந்தேன். - லாவண்யா, பெங்களூரு.
|