தேர் வடிவில் ஆதவனின் ஆலயம்



கொனார்க், ஒடிசா மாநிலம்

அடர்ந்த வனப்பகுதியில் பக்தியோடு தவம் செய்து கொண்டிருந்தான் சாம்பன். ஆமாம் யார் இந்த சாம்பன்.? ராமாயணத்து ஜாம்பவான், தனது மகள் ஜாம்ப தியை  கண்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அந்த ஜாம்பவதி அம்மையாரின் சீமந்த புத்திரன் தான், இந்த சாம்பன். கண்ணனின் மகன் தவம் செய்வதை அறிந்து  அதைக் காண ஆவலோடு தேவர்கள் வானத்தில் கூடினார்கள். கூடியவர்கள் அனைவரும் சாம்பனின் நிலையைக் கண்டு முகம் சுளித்தார்கள். அதற்கு காரணம்  இருக்கத்தான் செய்தது. தீவிரமான குட்ட நோயின் தாக்கத்தால் சாம் னின் உடலில் இருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது.

போதாத குறைக்கு , கொடிய துர்நாற்றம் வேறு ,அவன் மீது வீசியது. அழகு தெய்வமான கண்ணனின் மகனுக்கா இந்த நிலை? ஆம். செய்த கர்மத்தின் பலனை  தெய்வத்தின் மகனாக இருந்தாலும் அனுபவித்துத் தானே தீரவேண்டும். சாம்பனும் அதற்கு விதிவிலக்கு இல்லை என்பதை, அவனது நிலை சொல்லாமல்  சொல்லியது. சரி சாம்பன் செய்த பாவச் செயல் தான் என்ன? அதை அறிய நாம் பன்னிரண்டு வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். பன்னிரெண்டு  வருடங்களுக்கு முன் துவாரகா நகரம். செல்வச் செழிப்பிற்கு பஞ்சமே இல்லை.

கண்ணனின் ராஜ்ஜியத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா? அற்புதமான அந்த நகரத்தில் நுழைந்தார் தேவ ரிஷி நாரதர். தொந்தியும் தொப்பையுமாக அவர் வந்த  விதமே வேடிக்கையாக இருந்தது. அவரைக் கண்டு உறக்க சிரித்து விட்டான் சாம்பன். அதை நாரதர் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் நாரதருக்குத் தான் அதை  ஜீரணிக்கவே முடியவில்லை. “ அழியும் உனது உடல் அழகால் ஆணவம் கொண்டு ரிஷி முனிவர்களையே நிந்திக்கிறாயா? மூடனே!  உன் அழகு மொத்தம்  அழிந்து போகட்டும். உன் கட்டான உடலை, குட்ட நோய் வாட்டி வதைக்கட்டும்.  

உன் உடலில் வழியும் சீழும் அதிலிருந்து வீசும் துர் நாற்றமும் உனக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்கும்.” என்று சாம்பனை சபித்து விட்டார் நாரதர். அரும்  தவசி அல்லவா நாரதர்.? அவரது சாபம் உடனே பலித்தது. சாம்பனை குட்ட நோய் தாக்கியது. சாம்பன் அப்போது தான் அவன் செய்த தவறை உணர்ந்தான்.  சற்றும் தாமதிக்காமல் நாரதர் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு மன்றாடினான்.  தனது வழிபாட்டு தெய்வத்தின் மகனையே சபித்து  விட்டதை அப்போது  தான் அவர் உணர்ந்தார். இந்த அபசாரத்தை எப்படி சரி கட்டுவது என்று புரியாமல் திணறினார்.

அப்போது, எதற்கும் அஞ்சாதே, என்பது போல் கண்ணனின் முகம் அவரது மனதில் நிழலாடியது. உடன் சாம்பனையும் அழைத்துக் கொண்டு கண்ணனிடம் ஓடினார்.  விஷயம் அறிந்த கண்ணன், ஒரு கள்ளப் புன்னகை பூத்தான். அதற்குப் பின் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது என்பதை உணரும் மன நிலையில் நாரதரும்,  சாம்பனும் இல்லை. மெல்ல தனது மலர் வாய் திறந்து பேச ஆரம்பித்தான் அந்த மாயக் கண்ணன். “மகனே சாம்பா! உன் சாபம் நீங்க, நீ  சூரிய நாராயணனை  நோக்கி தவம் செய்வாய்.! அந்த சூரிய நாராயணின் அருளால் உன் குட்ட நோய் நீங்கும். கால தாமதம் வேண்டாம். உடனே புறப்படு” என்றபடி தனது மகனை  துரிதப் படுத்தினான் மாயவன்.

சாம்பன் மெல்ல, தன் தந்தைக்கு வந்தனங்கள் செய்து விடை பெற்றான். அவன் செல்லும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார் நாரதர். “கவலை வேண்டாம்  நாரதா இதுவும், என் திருவிளையாடல் தான். உன்னாலும், என் மகனாலும் இந்த பாரத தேசத்தின் பெருமை உயரப் போகிறது. கவலைப் படாதே!” என்றபடி  கண்ணன் மர்மப் புன்னகை பூத்தான். நாரதருக்குத்தான் அதன் மர்மம் விளங்கவில்லை. திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்தார்..... பன்னிரெண்டு ஆண்டுகள்  நொடி போல ஓடிவிட்டது. சாம்பன் திட சித்தனாக தவம் செய்து கொண்டிருந்தான். அவன் செய்த மந்திர ஜபம் அந்த வனத்தையே தெய்வீகமான மாற்றி இருந்தது.

அவனது விடா முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரம் நெருங்கி விட்டது. கருணை சூரியனாக உதித்தே விட்டேன் சூரிய பகவான். “சாம்பா! கண்களைத் திறந்து  என்னைப் பார். “என்று இனிமையாக பேசினார் சூரிய பகவான். சாம்பன் கண்களைத் திறந்து பார்த்தான். உள்ளம் பூரித்துப் போய் ஆதவனை வணங்கினான்.  மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். ஆதித்தனின் கருணை ஒளி பட்டே அவனது உடல் நோய் தீர்ந்து ஒழிந்தது. முன்பை விட பிரகாசமாக மின்னினான் சாம்பன். “  சாம்பா! உன் உடல் நோயை தீர்த்து விட்டேன். ஆனால், நீ வேண்டும் மற்றொரு வரத்தையும் என்னிடமிருந்து கேட்டுப் பெறலாம்.”

தன்னை வணங்கி நிற்கும் சம்பனை நோக்கி சொன்னார் சூரியன். பிரபோ! உங்களுக்கு அற்புதமான ஆலயம் அமைக்கும் பாக்கியத்தை நான் பெற வேண்டும்.  அதற்குத் தாங்கள் எனக்கு கருணை செய்ய வேண்டும்.” என்று இருகரம் கூப்பி மன்றாடினான்  சாம்பன். அதைக் கண்ட சூரியன் புன்னகைத்த படியே மின்னலைப்  போல மறைந்து போனார். அவர் இருந்த இடத்தில் ஒரு தங்க சூரிய விக்ரகம் பள பளத்தபடி இருந்தது. அந்த மின்னும் தங்கச் சிலையை பக்தியோடு ஆரத்  தழுவிக் கொண்டான் சாம்பன். பிறகு, விண்ணை முட்டும் ஒரு கோயில் சூரியனுக்கு அவனால்  எழுப்பப்பட்டது.

அங்கு சூரியன் எழுந்தருளி அருள் மழை பொழிந்த படி இருந்தார். காலங்கள் உருண்டோடியது. உலகம் மாறியது மனிதர்களும் மாறினார்கள். ஆனால் அந்த சூரிய  பகவான் கோயில் மட்டும் அருளை வாரி வழங்கியபடி இருந்தது. காலம் செய்த கோலமாக அந்த கோயில் சிதிலம் அடைந்து போயிருந்தது. அங்கே சூரியனை  நெக்குருகி வழிபட்டுக் கொண்டிருந்தார் மாமன்னர் நரசிம்ம தேவர். ராஜ கம்பீரமாக அவர் நின்றிருந்த தோரணையே அலாதியாக இருந்தது. உலகையே வென்ற  களிப்போடு, இப்போது ஆண் மகவு ஒன்று பிறந்த களிப்பும் சேர்ந்துவிட்டது. ஆகவே மன்னனின் முகத்தில் ஆனந்தம் தாண்டவம் ஆடியது.

ஆனால் ,இத்தனைக்கும் காரணம் அவர் வணங்கும் கொனார்க் சூரிய பகவானின் தனிப் பெரும் அருள் தான் என்பதை அவரது உள்ளுணர்வு சொல்லியது.சாம்பன்  பூஜித்த அந்த பகவான்  அவரது வாழ்வையே வளமாக்கி விட்டார் என்றால் அது மிகையாகாது.  எனவே அந்த தெய்வத்தின் ஆலயத்தை உலகமே வியக்கும்  வண்ணம்  புனரமைக்க வேண்டும் என்ற ஆசை அவரது உள்ளத்தில் உதித்தது. உடன் , தனது அமைச்சர் சிபி சத்ரனை அழைத்தார். “ என் இதய தெய்வம்  ஆதவனுக்கு அவனது தேரின் வடிவத்திலேயே ஒரு கோயில் கட்ட வேண்டும். அதற்கு ஆவண செய்யுங்கள்.”

நொடியில் மன்னனின் இதழில் இருந்து அற்புத ஆணை பிறந்தது. அந்த ஆணையை சிரமேற்கொண்டு கோயில் கட்ட ஆவண செய்ய ஆரம்பித்தார் அமைச்சர்.  ஆனால், கோயில் கட்ட தீர்மானித்த இடத்தில் ஒரு சிறு தடாகம் இருந்தது. அது கோயில் கட்டும் பணிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதை அறிந்தார்  அமைச்சர். உடன் தன் சேவகர்களை அழைத்து அந்த தடாகத்தை வற்றச் செய்ய கற்களை அதன் நடுவே வீசி ஏறிய ஆணையிட்டார். பல வீரர்கள் பல மணி  நேரம் பல பாறாங்கற்களைத்  தடாகத்தில் வீசி எறிந்தும் பயனில்லாமல் போனது. அத்தனை கற்களும் மூழ்கிப் போனதே ஒழிய தாடாகத்தை வற்றச் செய்ய  வில்லை.

இதைக் கண்ட அமைச்சர் சிபி சத்ரன் , என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார். போதாத குறைக்கு பசி மயக்கம் வேறு. அவருக்கு தலை சுற்ற ஆரம்பித்து  விட்டது. ஏதாவது உணவு கிடைத்தால் போதும் என்ற நிலை. ஆனால் அந்த நடுக் காட்டில் உணவுக்கு எங்கு போவார் அவர்.?ஆனால், அப்போது அங்கு ஒரு  மூதாட்டி கூழ் பானையை தலையில் சுமந்துபடி சென்று கொண்டிருந்தாள். அமைச்சரின் நிலையை கண்ணுற்ற அவள் அவரது அருகில் வந்தாள். தான் கொண்டு  வந்திருந்த கூழை ஒரு குவளையில் ஊற்றிச் சுட சுட அவரிடம் நீட்டினாள். அவரும் பசி மயத்தால் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அதைப் பெற்றுக் கொண்டார்.

ஆர்வ மிகுதியில் கொதிக்கும் அந்த கூழின் நடுவில் கையை விட்டு சுட்டுக் கொண்டார். அதைக் கண்ட அந்த மூதாட்டி மெல்ல நகைத்தாள். ‘‘அப்பனே நீ  அமைச்சன் என்று வெளியில் சொல்லிக்கொள்ளாதே. கொஞ்சம் கூட புத்தியை பயன் படுத்த மாட்டேன் என்கிறாய். தடாகத்தை வற்ற வைக்க வேண்டும் என்றால்  அதன் ஓரத்தில் இருந்து கல்லை அடுக்கிக் கொண்டு வர வேண்டும். அதே போல் கூழ் பானையிலும் ஓரத்தில் தான் உஷ்ணம் குறைவாக இருக்கும். இவை  எதுவும் தெரியாமல் எப்படி நீ அமைச்சன் ஆனாய்.” அந்தக் கிழவி ஒரு கேலி சிரிப்பு சிரித்தாள்.

அது அமைச்சரை, கூரம்பால் குத்துவது போல் இருந்தது. கோபத்தோடு அவளை சுட்டு விடுவது போல் பார்த்தார் அவர். அதற்குப் பதிலாக மர்மப் புன்னகை  பூத்தாள் அந்த மூதாட்டி. பிறகு கற்பூரம் கரைவது போல் கரைந்து மறைந்து போனாள். அப்போது தான் அந்த அமைச்சருக்கு உரைத்தது மூதாட்டியாக வந்து  ஞானம் போதித்தது அந்த சூரிய பகவான் என்று. பக்தியில் புல்லரித்துப் போனார். விஷயம் அறிந்த மன்னன், ஆதவன், கருணையை எண்ணி எண்ணி  வணங்கினான். பிறகென்ன பன்னிரெண்டு ஆண்டுகளில் விண்ணை முட்டும் ஆலயம் சூரியனுக்கு எழுப்பப் பட்டது.

அதில் நடு நாயகமாக சாம்பன் பூஜித்த தங்க சூரிய விக்ரகம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. சூரியனின் தேரின் வடிவில் அமைந்திருந்த அந்தக் கோயிலை , ஏழு கல்  குதிரைகள் இழுத்துக் கொண்டிருந்தது. அந்த ஏழு குதிரைக்கும் வானவில்லின் ஏழு வர்ணங்கள் பூசப் பட்டிருந்தது. (சூரிய ஒளி ஏழு நிறங்களால் ஆனது என்பது  spectrum theory. இந்த theoryயை பல வருடங்களுக்கு முன்பே இந்தியர்கள் உணர்ந்திருந்ததை இது காட்டுகிறது) அன்று அந்த மன்னனால் கட்டப்  பட்ட அந்த அற்புத ஆலயம் கொனார்க் சூரியனார் கோயில் என்று, இன்று வரை அருளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது.

அந்நிய படையெடுப்பால் கோயில் நாசமாக்கப் பட்டிருந்தாலும் இன்றும் அங்கு சென்றால் சாம்பனின் தவ வலிமையாலும் மன்னனின் பக்தியாலும் உருவான ஒரு  தெய்வீக அதிர்வலையை உணர முடிகிறது. பக்தியோடு செல்பவர்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டும் இல்லை உலக சரித்திர  முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கோயில் என்று இது UNESCO வால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

(தொடரும்)
ஜி.மகேஷ்