ஏழூர் திருவிழா ஒரு தெய்வீகத் திருமணத்தின் உற்சாக கொண்டாட்டம்





காவிரியின் வண்டலோடு சங்கீதமும் செழித்து வளர்ந்த பிரதேசம் திருவையாறு. தியாகராஜர் போன்ற ஞானிகள் உலவிய புண்ணிய பூமி. ஐயாறப்பனும் அறம் வளர்த்த நாயகியும் அருட்கோலோச்சும் பெருந்தலம். இவற்றிற்கு இணையாக புராண காலந்தொட்டு வரலாற்று காலங்கள் வழியாக இன்றுவரை சப்த ஸ்தானப் பெருவிழா என்கிற ஏழூர் திருவிழா கொண்டாடப்படும் தெய்வீகத் தலம்.  

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பௌர்ணமி அன்று திருவையாறிலிருந்து ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கிலும் புதுமணத் தம்பதிகளான நந்தியம் பெருமானும் சுயசாம்பிகையும் வெட்டிவேர் பல்லக்கிலும் ஆறு ஊர்களுக்கு புறப்படுவார்கள். அன்று காலை கிழக்கு கோபுர வாசலில் நிகழும் இந்நிகழ்வுக்கு கோபுர தரிசனம் என்று பெயர். இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அங்கிருந்து இரண்டு பல்லக்குகளும் அடுத்தடுத்த ஆறு ஊர்களுக்கும் செல்லும். அதில் முதல் பல்லக்கு திருப்பழனத்திற்கு செல்லும். பிறகு திருப்பழனத்து பல்லக்கோடு திருச்சோற்றுத்துறைக்குச் செல்லும். அதற்கடுத்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, தில்லை ஸ்தானம் என்று தொடர்ந்து பயணித்து திருவையாற்றை அடைவார்கள். காவிரியின் இருமருங்கிலும் உள்ள தலங்களுக்கு காவிரியில் இறங்கிச் செல்வார்கள். வாருங்கள்... நாமும் அந்தந்த தலத்தின் மகிமைகளை பார்த்துக் கொண்டே பல்லக்கோடு பயணிப்போம்.

சிலாத முனிவர், யாகம் புரிய நிலத்தை சமன் செய்தார். மண்ணை அள்ளி முகர்ந்தார். நெய் மணமும் அரசுச் சுள்ளியின் சுகந்தமும் ஒரு சேர வீச இதுவே யாகசாலைக்கான இடம் எனத் தீர்மானித்தார். மண்ணை தன் கரத்தால் அகழ்ந்து வெளியே கொணர சட்டென்று சூரியப் பிரகாசம் கண்ணை கூசச் செய்தது. பொன்னால் செய்த பெட்டியொன்றைக் கண்டார். திறந்து பார்க்க, அருணோதயமாக ஒளிர்ந்தது ஒரு குழந்தை. வாரி அணைத்து வீடு நோக்கி நடந்தார். ஆன்றோர்களை கூட்டி ஹோமம் புரிந்து, குழந்தைக்கு ஜப்பேசன் என்று திருப்பெயர் சூட்டினார். ஜப்பேசன், ஈசனின் நாமத்தை ஜபித்தும் திருவையாறு ஐயாறப்பனை அகத்தில் இருத்தியும் பிழம்பாக வளர்ந்தான். ஈசனின் அருளால் கயிலாயக் காட்சியுற்றான். ஜப்பேசனுக்கு நந்நீசன் எனும் தீட்சா நாமம் சூட்டினார், பிறைசூடனான ஐயாறப்பன். நந்தீசன் சிவகணத்திற்கெல்லாம் அதிபதியானார். எந்நாளும் ஈசனின் எதிரே இருக்கும் பெரும்பேறு பெற்றார்.

ஐயாறப்ப பெருமான் அதோடு நில்லாது நந்தீசனுக்கு மணமுடிக்க விரும்பினார். நந்திக்கு இணையான நங்கையாக சுயசாம்பிகை எனும் குமரியைத் தெரிவு செய்தார்கள். திருமழபாடியிலேயே திருமணம் முடிக்கலாம் என்றும் தீர்மானித்தார்கள். நந்தீசனுக்கு திருமணம் என்றவுடன் திருவையாறைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஊரிலிருந்தும் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வந்து சேர்ந்தன. அதை நினைவூட்டும் விதமாகவும் திருமணத்திற்கு உதவிய ஏழூர் கடவுள்களுக்கும் நன்றி செலுத்தும் வண்ணமாகவும் இன்று வரை ஈசன் ஏழு தலங்களுக்கும் பல்லக்கில் எழுந்தருள்கிறார். இதுதான் சப்த ஸ்தான பெருவிழா.



திருவையாறிலிருந்து கண்ணாடிப் பல்லக்கில் ஐயாறப்பனும் அறம்வளர்த்த நாயகியும் ஆரோகணிக்க, புதுமணத் தம்பதிகளான நந்தியம்பெருமானும் சுயசாம்பிகையும் வெட்டிவேர் பல்லக்கில் பவ்யமாக அமர்ந்து புறப்படுகிறார்கள். இந்நாளில் திருவையாறே திருவிழாக் கோலம் பூணும். இந்த இரு பல்லக்குகளும் அருகேயுள்ள திருப்பழனம் எனும் தலத்தை அடையும். அதற்கு முன் இத்தலத்தின் மகாத்மியத்தை அறிந்து கொள்வோம்.

ஒரு பக்தருக்கு பேராபத்தான மரண பயம் அறுத்து சகாயம் செய்ததால் இத்தல ஈசனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்தில்தான் வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி, விபூதி நாதனைச் சரணடைந்த அப்பூதியடிகள் அடியார்களுக்கு அன்னமும் மோரும் கொடுத்து இன்சுவை அமுது பரிமாறினார். அப்பரடிகளின் திருவடிகளை உள்ளத்தில் ஏந்தி அந்த வாக்கீசரை வாழ்நாளெல்லாம் பேசிப்பேசி களித்தவர் அப்பூதியடிகள். அவர் துணைவியாரும் புதல்வனும் அப்பூதியடிகளின் பாதையில் பயணித்தனர். முகமறியாத அப்பரை மானசீகமாக பக்தி செய்த அற்புதக் குடும்பம் அது. திருப்பழனத்திற்கு திருக்குழாமோடு வந்திருந்த அப்பரடிகள் எங்கு காணினும் நாவுக்கரசரின் புகழ்பாடும் மானிடர்களும் திருநாவுக்கரசர் திருநாமம் தாங்கி நிற்கும் தண்ணீர் பந்தல்களைக் கண்டு அகமகிழ்ந்தார். அப்பூதியடிகளின் மாறாத பக்தியை ஊரார் மெச்சிப் பேசுவதை செவியுற்றார்.

 நாவுக்கரசர் சாதாரணராய் நடந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்று அப்பூதியடிகளின் தன்மையை கண்ணுற்றார். மெல்ல நகர்ந்த வரிசையில் நாவுக்கரசரான அப்பரடிகளும் நகர்ந்தார். அப்பூதியடிகள் யார் முகமும் பார்க்காது நீளும் கரம் மட்டுமே பார்த்து அமுதும் மோரும் இட்டு நிரப்பும் மாண்பு கண்டு மகிழ்ந்தார். அடுத்து அப்பரடிகளின் கரம் நீண்டது. ‘உழவாரப்பணி செய்து செய்து தேய்ந்த கைகளல்லவா இது!’ அப்பூதியடிகளின் மனதில் பட்டென்று மின்னல் கீற்று வெட்டியது. ஏதோ இனம் புரியாத பேரின்பப் பெருக்கு ஏற்படுகிறதே என்ற திகைப்பில் நிமிர்ந்து முகம் பார்த்தவர் ஆனந்த அதிர்ச்சியடைந்தார். ‘‘ஐயனே... ஐயனே’’ என்று கதறி, தடேரென்று அப்பரின் திருவடியில் விழுந்தார். ‘‘இந்த எளியேனை காண வந்தீரே...’’ என விம்மினார். ஞானத்தாமரை முகம் மலரச் சிரித்தது. அப்பூதியடிகளுக்குள் ஞான ஊற்று கொப்பளித்தது. திருக்கூட்டம் பழனப்பிரானின் சந்நதியை நெருங்கியது. பதிகங்களை மழையாகப் பொழிந்தது. திருப்பழனமே ஈசனின் இணையற்ற அருளாலும் அப்பரடிகளின் பதிகத்தாலும் அப்பூதியடிகளின் சிவத்தொண்டாலும் மணத்தது.

நந்தியம் பெருமானின் திருமணத்திற்காக இத்தலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்சுவை கனிகளை மலைமலையாக அனுப்பி வைத்தது. இத்தலத்திற்கு கதலிவனம் என்ற பெயரும் உண்டு. வயலும் வாழையும் சூழ்ந்து நிற்கும் எழில் கொஞ்சும் கிராமம். சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் என்று மூவராலும் பாடல் பெற்ற தலம். அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் அழகுற காட்சியளிக்கிறார். சந்நதியின் சாந்நித்யத்தால் மனமும் உடம்பும் சட்டென்று குளுமை கொள்கின்றன. அப்பர், ‘‘பழனம் பழனம் என்பீராகில் பயின்றெழுந்த பழவினை நோய்பாற்றலாமே’’ என்று தனித் திருந்தாண்டகத்தில் தெளிவாகக் கூறுகிறார். மெய்யன்பர்கள் நாள்தோறும் ஓதும் ‘மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை’ என்று தொடங்கும் நிகரற்ற பதிகம் பெற்றவரே பழனப்பிரானான ஆபத்சகாயேஸ்வரர்.



வாழ்வினில் வரும் ஆபத்தைக் களைவதில் அசகாயச் சூரன் இப்பிரான். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் பிரஹன்நாயகி எனும் பெரியநாயகி முகத்தில் கொப்பளிக்கும் புன்னகையோடு நின்ற கோலத்தில் நல்லன செய்ய காத்திருக்கிறாள். ஆபத்து என்று ஓடோடி வருவோரை அஞ்சேல் என அபயக்கரம் காட்டி நிற்கிறாள், அன்னைப் பெரியநாயகி.

தஞ்சாவூரிலிருந்து திருவையாறை அடைந்து அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 6 கி.மீ. தொலைவில் திருப்பழனம் உள்ளது.

திருப்பழனத்தின் பல்லக்கோடு சேர்ந்து மூன்று பல்லக்குகள் சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருச்சோற்றுத்துறையை அடையும். ‘சோழநாடு சோறுடைத்து’ என்பது இத்தலத்தைக் கருத்தில் வைத்தே சொல்லப்பட்டது எனலாம். இத்தலம் சப்தஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இங்கிருந்து சகல உணவு வகைகளும் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தல நாயகரும் எழுந்தருளுகிறார். கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் சோறுடையான் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

நான்கு வீதிகளோடும் இரு பிராகாரங்களோடும் கிழக்கு பார்த்த கோயில் எழிலார்ந்து நிற்கிறது. இருதளக் கற்றளியாக சதுர விமானமுடைய கோயில். முதலாம் ஆதித்தசோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்பு லிங்கங்கள் என்பார் ஆன்றோர். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்பு லிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. சுயம்புப் பிழம்பின் ஈர்ப்பு காந்தமாக அருகே வருவோரை தமக்குள் ஏற்றுக்கொள்கிறது.

சோறு என்பது உண்ணும் சோற்றைக் குறிப்பிடும். அதே சோறு என்பது வெண்மையின் அடையாளம், பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று என இரு வேறு பொருளுண்டு. அடியார் மனதிற்கிணங்க பேரின்பத்தையும் உயிர்காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள், ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பேசுகிறார். முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். ஓதனம் என்றால் அன்னம் என்று பெயர். இவருக்கு தொலையாச் செல்வர் எனும் திருப்பெயரும் உண்டு. தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன்.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில் கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் அன்னபூரணியெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள் குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். அன்னபூரணி அன்னம்
மட்டுமல்லாது வாழ்வில் அனைத்தையும் அளிக்கும் பூரண சொரூபி.

இத்தலம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.  
     
திருச்சோற்றுத்துறையிலிருந்து நான்கு பல்லக்குகள் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு செல்லும். திருவேதிக்குடி, ஆதியில் முக்காலமும் மறையோதும் அந்தணர்கள் புடைசூழ்ந்த தலமாக இருந்தது. சிவநெறிச் செல்வன் நந்தீசனுக்கு திருமணம் என்றவுடன் வேதிக்குடியே மகிழ்ச்சியில் திளைத்தது. திருமழ பாடியில் நடந்த நந்திதேவனின் திருமணத்திற்கு வேதிக்குடியே வேரோடு பெயர்ந்து சென்றது. கிணறுகளோ என்று ஐயுறும் வண்ணம் பிரமாண்ட யாககுண்டங்களில் நெய்வார்த்து தீ வளர்த்து, விண்ணுயரும் பிழம்பின் முன் பிரவாகமாக வேத மந்திரங்களை மழையாகப் பொழிந்தனர். திருமணம் முடித்து மகிழ்ந்த வேதியக் கூட்டம் வியந்துபோய் வேதிக்குடிக்கு வந்தது. இப்படி நந்தீசனின் மணநாளில் வேதியர்களை அனுப்பி வைத்தார் வேதபுரீஸ்வரர். வேதியர்களால் நிறைந்த ஊராதலால் திருவேதிக்குடி என்றனர். அதை சத்தியமாக்கும் வகையில் சம்பந்தரும் ‘‘சொற்பிரிவிலாத முறை பாடி நடமாடுவர் பயில்’’ என்று இவ்வூர் வேதகோஷத்தை கோடிட்டுக் காட்டுகிறார். அன்று முதல் இன்றுவரை சப்த ஸ்தான விழாவின்போது திருவேதிக்குடிப் பெருமானும் பல்லக்கில் எழுந்தருள்வார்.

மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே போனால் நேரே வேதபுரீஸ்வரர் சந்நதி உள்ளது. அதற்கு முன்பு நீண்ட குறுகிய மண்டபம். இன்னும் உள்ளே நகர வேதபுரீஸ்வரரின் சந்நதி காணக்கிடைக்கிறது. சோழர்கால பாணியில் செதுக்கிய துவார பாலகர்கள். அருகே விநாயகர் செவிசாய்த்து வேதத்தைக் கேட்ட நெகிழ்ச்சியூட்டும் சிற்பம். அருகே, பேரருளாளன் வேதநாயகன், வாழைமடுநாதன், வேதபுரீஸ்வரரின் சந்நதியை நெருங்க மனம் விண்டு போகும். வேதத்தின் வலிமை அச்சந்நதிகளில் வலையாகப் பின்னி சாந்நித்யம் நிறைத்து அருகே வருவோரை திணறடிக்கிறது. அம்பாளின் நாமம் மங்கையர்க்கரசி. அரசியைப்போல் இத்தலத்தில் அருள்கிறாள். அபயம் ஒன்றே எனது பணி என்று நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். கருணை விழிகளில் இவளுக்கு நிகர் எம்மங்கையும் இல்லை. அவள் உதட்டோரம் பொங்கும் சிரிப்பில் நம் சிரமங்கள் சுக்கு நூறாகின்றன. வாழ்வில் சகல மங்கலத்தையும் கூட்டுவிப்பதால் மங்களநாயகி என்றும் அன்னைக்குப்பெயருண்டு.

இத்தலம் தஞ்சாவூர்-பாபநாசம் வழியில் நெடாரி லிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் திருக்கண்டியூரிலிருந்து மூன்று கி.மீ. இரு வழிகளிலும் செல்லலாம்.

திருவேதிக்குடியிலிருந்து ஐந்து பல்லக்குகள் புறப்பட்டு திருக்கண்டியூரை அடையும். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. பிரம்மனின் அகங்காரத்தை அறுக்கும் பொருட்டு அவருடைய ஐந்தாவது தலையை இத்தல ஈசன் கொய்ததால் பிரம்மசிரகண்டீசர் எனும் திருப்பெயர் ஏற்பட்டது. நந்தீசனின் திருமணத்தின்போது கட்டு சாதக் கூடை கொடுத்த தலம் இது.

சாதாரணமாக பிரம்மாவுக்கு வெறெங்கும் இத்தனை புராணச் சிறப்பு மிக்கக் கோயில் இல்லை எனலாம். பொதுவாக தேவ கோஷ்டத்தில் தனியே வீற்றிருப்பார் பிரம்மா. ஆனால், இத்தலத்தில் பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கும் சந்நதி காண்போரை பரவசப்படுத்தும். திருக்கண்டியூரின் கடைத்தெரு நெரிசலுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கிறது கோயிலின் ராஜகோபுரம். உள்ளே இடப்புறம் மங்களாம்பிகை சந்நதி தெற்கு நோக்கி உள்ளது. அமைதி தவழும் முகம். அபய, வரத, அக்க மாலையோடு, தாமரை மொக்கை கைகளில் ஏந்தி அருளமுதம் பொங்கி வழியும் முகத்தோடு நிற்கிறாள், அன்னை. தனக்குள் தான் ஆழ்ந்து நிற்கும் நிலையாக யோக மாதா போல் இருக்கிறாள். தனக்குள் பொங்கி வழியும் ஆத்ம சக்தியில் தான் பூரித்து திளைப்பதை அவளது மெல்லிய புன்னகை வெளிப்படுத்துகிறது.

பிரம்மாவின் தலையைத் திருகி எடுத்ததால் பிரம்மசிரகண்டீசர் எனும் திருநாமம். வில்வத்தின் கீழ் அமர்ந்ததால் ஆதிவில்வநாதர். பிரம்மனின் அகங்காரத்தை அறுத்த சக்தி நம் அகத்துள்ளும் ஊடுருவும் அற்புதச் சந்நதி. தெள்ளிய ஓடைபோல குளுமை அவ்விடத்தைச் சூழ, மன மாசுகளை கரைக்கும் கங்கை இங்கு அருவமாகப் பாய்கிறாள். நல்ல கட்டமைப்பு கொண்ட ஜீவக்கலை ததும்பி நிற்கும் சிலை. வேறெங்கும் காணமுடியாத திகைப்பூட்டும் அதிசயம். நான்கு கரங்கள் துலங்க, கணவரோடு அடக்கமாக சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கல்வியும் ஞானமும் சேர்ந்திழைத்துத் தரும் ஞானவாணி. பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரியிறைக்கும் வெண்ணிற நாயகி.

தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்டியூர்.

திருக்கண்டியூரிலிருந்து ஆறு பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் ஆலயத்தை அடையும். திருப்பூந்துருத்தி உபசாரம் என்றே ஒரு பழமொழி உள்ளது. இங்குதான் திருஞானசம்பந்தருக்காக நாவுக்கரசர் முத்துச் சிவிகை சுமந்தார். நந்தியம் பெருமானின் திருமணத்தின்போது அனைத்து விதமான புஷ்பங்களும் இங்கிருந்து தான் திருமழபாடிக்கு வந்து சேர்ந்தன.

ஆற்று மண்ணும் வண்டலும் பூ போல மென்மையாக படிந்ததாக காணப்பட்ட இடமாதலால் ‘பூந்துருத்தி’ என அழைக்கப்பட்டது. பொதுவாக ஆற்றிடைக்குறையில் உண்டாகும் பகுதிக்கே துருத்தி என்று பெயர். அப்பரடிகள், ‘‘பொருத நீர்வரு பூந்துருத்தி’’ எனக் கூறுவார். வண்டல் நிலமாதலால் பூஞ்செடிகள் நிறைந்து, மலர் வனமாயிற்று. ஈசன் சோழமன்னன் ஒருவனுக்கு உலைக்களத் துருத்தியையே சிவலிங்கமாகக் காட்டி பூஜிக்கச் செய்தார். பின்னர் அத்துருத்தியே சிவலிங்கமாக மாறியதால் திருப்பூந்துருத்தி என ஆயிற்று என்று கூறுவர். அதனாலேயே இத்தல நாயகருக்கு புஷ்பவனேஸ்வரர் என்று பெயர். தேவர்கள் மலர் கொண்டு ஈசனை அர்ச்சித்ததை அப்பர், ‘‘வானோருலகமெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும் வித்தானை’’ என்கிறார்.  
 
திருமழபாடியில் நந்திதேவர் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து பூக்கள் மலை மலையாக சென்று குவித்ததைப் பாராட்டும் வகையில் நந்தியம் பெருமானும் ஐயாறப்பரும் இத்தலத்திற்கு எழுந்தருள்வர். சோழர் காலத்தில் ரத்தினமாக ஜொலித்த ஊர்களில் இதுவும் ஒன்று. அவர்கள் ஏழூரையும் பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளனர். அவற்றில் மலர்வனத்தால் சிருங்காரமாக விளங்குகிறது, திருப்பூந்துருத்தி.

பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. முதல் ஆதித்தசோழன் முதல் ராஜேந்திரன் வரை மாமன்னர்கள் கற்றளி கோயிலாக எடுப்பித்தனர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வலப்புறம் ஏழூர் பல்லக்குகளும் எழுந்தருளும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது.

கருவறையில் புஷ்பவனநாதர் எனும் பொய்யிலியார் சந்நதி அருள் மணம் பரப்பி அருகே வருவோரை நெக்குருகச் செய்கின்றது. துருத்தி என்றால் காற்றுப்பை எனும் பொருள் உண்டு. அதாவது, உயிர்ச் சக்தியான பிராணனை சகல உயிர்களுக்கும் பரவச் செய்யும் ஆதாரமாக இவர் விளங்குகிறார். இன்னொரு காற்றுப்பை எடுக்கவொட்டாது அதில் சிவனருள் எனும் மலர்கொண்டு பிறவிப்பிணியை நீக்குகிறார். அதனாலேயே பூந்துருத்தி உடையார் எனும் நாமத்தை ஏற்றுள்ளார். பூவைப்போல் மென்மையும் கருணையும் கொண்ட அவர், வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு தம் அருள்மலர்களால் இதமாக நீவி இடர் களைகிறார்.

இறைவி அழகாலமர்ந்தநாயகி எனும் இனிய நாமம் கொண்டவள். அமுதூறும் தெள்ளுத் தமிழில் அவள் பெயர் சொல்ல மங்களத்தைக் கூட்டித்தரும் கொடைநாயகி. சௌந்தர்யத்தை கூட்டுவிக்கும் புன்னகை தவழும் தேவி. அப்பர் சுவாமிகள், ‘‘அழகாலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொருபாலுல காயு நின்றான்’’ என்று இவள் பெருமை பேசுகிறார். இத்தலத்திலேயே மகான் தீர்த்த நாராயணரின் ஜீவசமாதியும் உள்ளது.

இந்த திருத்தலம் தஞ்சாவூர்- திருக்காட்டுப்பள்ளி-கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திருப்பூந்துருத்தியிலிருந்து ஏழு பல்லக்குகள் புறப்பட்டு திருநெய்த்தானம் என்கிற தில்லை ஸ்தானத்தை அடையும். இத்தலத்தைக் கடக்கும் காவிரியின் பணிவைப் பாடாத அடியார்களே இல்லை எனலாம். நந்திதேவரின் திருமணத்திற்காக வேதிக்குடி அந்தணர்கள் புடைசூழ, பூந்துருத்தி மலர் குவிக்க, பழனநாதர் கனிகள் கொணர, நெய்த்தானத்திலிருந்து மாபெரும் கொப்பரைகளில் தளும்பத் தளும்ப உருக்கிய நெய் கொண்டு செல்ல, அந்த அன்பில் மகாதேவன் கரைந்தார். நெய் வார்ப்பால் அக்கினி குதூகலமாக வளர்ந்தான். தேவர்கள் நெய்யுருவில் வந்ததை அவிர்பாகமாக ஏற்றனர். சகல காரியத்திலும் நெய்யோடு நெய்யாடியப்பரின் பேரருளும் சிவந்தெழுந்தது.

எல்லோரையும் அணைத்தது.     
திருநெய்த்தானம் ஆதித்தசோழனால் எடுப்பிக்கப்பட்ட இருதளக் கற்றளியாகும். காவிரிப் படித்துறைக்கு அருகிலேயே நெடிதுயர்ந்த ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. நெய்யாடியப்பரின் சந்நதியை அடையும்போது மனம் நெய் மணத்தில் தன்னை மறக்கிறது. ஐந்தடி உயர துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று காக்க ஆனந்த ஊற்றொன்று பிரவாகமாக நம்மை ஊடுருவிப் பாய்கிறது. நெய்யும் வீபூதியின் மணமும் ஒரு சேரக் குழைந்து எப்போதும் இனிய சுகந்தம் அச்சந்நதியை நிறைவிக்கிறது. ஜென்ம ஜென்மமாக சேர்ந்து, திடப்பட்ட தீவினைகள் நெய்யாடியப்பரின் தாண்டவத் தழலில் பொசுங்கி உருகிக் கரையும் களிப்பூட்டும் சந்நதி அது.

அம்பாளின் திருநாமம் பாலாம்பிகை. பாலை என்று சரஸ்வதிக்கு ஒரு திருநாமம் உண்டு. அதையே பால்யம் என தொனித்தால் இளமை என்று இன்னொரு பொருள் பிறக்கும். அழகுத் தமிழில் இளமங்கையம்மன். எழிலார்ந்த நெடிய உருவுடையாள் இந்நாயகி. விஷ்ணு துர்க்கையின் கம்பீரம் கொண்டவள். வலக்கரத்தில் சக்கரம், இடக்கரத்தில் சங்கு ஏந்த, கீழ் வலக்கரம் அபயமும் கீழ் இடக்கரம் ஊருஹஸ்தமும் காட்டுகின்றன. பொதுவாகவே பாலா என்று நாமமுடைய நாயகி உயிர்ச்சக்தியான குண்டலினியின் ஆதாரமாக விளங்குபவள். யோக வாழ்வினில் மனதைத் திரட்டி பெரிய காரியங்களை அநாயாசமாக முடித்துத் தருவதில் பாலா மிகப் பெரியவள். பிராண சக்தியைப் பெருக்கி மனதை அதிகூர்மையாக்குவாள். அப்பரடிகள் நெய்த்தானத்து நாயகியை ‘‘ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’’ என அகங்குழைகிறார்.

திருநெய்த்தானம் எனும் தில்லை ஸ்தானம்
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தில்லை ஸ்தானத்து பல்லக்குகள் உட்பட எட்டு பல்லக்குகளும் திருவையாறை அடையும். கூட்டம் அலைமோதும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சூழ்ந்திருப்பார்கள். கயிலையில் கூட ஒரு சிவனும் பார்வதியும்தான். ஆனால், இங்கோ ஏழு தலங்களின் ஈசன்கள், அம்பாள்கள். சிவலோகமாகவே திருவையாறு மாறிவிட்டிருக்கும். ஏழு கயிலையின் காட்சியை அப்போது தரிசிக்கலாம். தேரடித் திடலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சியை அப்போது நடத்துவார்கள். இது முடிந்ததும் பல்லக்குகள் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திற்குள் செல்ல தீபாராதனை காட்டுவர். அதன் பிறகு ஒவ்வொன்றாக தத்தமது தலத்திற்குத் திரும்பும்.
இந்த மாபெரும் அரிய விழாவினை கண்டோர் சிவமாவர் என்பது ஆன்றோர் வாக்கு. ஏழு தலத்து பல்லக்குகளினூடே பயணிப்போரின் பிறவி அறுபடும். எனவே, வருடா வருடம் கலந்து கொள்வோம். சிவனருள் பெறுவோம்.
- கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்