நோயாளியை பார்க்க மருத்துவமனை போகிறீர்களா...
ஆறுதலும், கண்ணீரும் மருத்துவமனை வளாகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும் மிக மிக மலிவாக நம்மிடம் கேட்காமலே பார்க்கிறவர்கள் அனைவரும் உடனுக்குடன் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். எங்கு எல்லாம் போக பயந்தோமோ, அங்கு எல்லாம் இன்றைக்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கிறார்கள். தன்னை நோயாளி என்று கூறி விடுவார்களோ என்று பயந்து, ஹாஸ்பிடல் பக்கமே போகாத உடம்புடா என்று பெருமையாக மார்தட்டிக் கொள்ளும் சமூகமாக இருந்திருக்கிறது.
ஆனால், இன்றைக்கு அது தலைகீழ். எங்கு யாரைப் பார்த்தாலும், சுகர், பிரஷர், வயிறு வலி, மூட்டு வலி, தசை வலி என்றும், சில நேரங்களில் மனம் சார்ந்தும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன், பைபோலார், ஓசிடி, போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று கூறும் நபர்களைத் தொடர்ந்து பார்க்கின்றோம். அல்லது உறவினர்கள், நண்பர்கள் வழியாக கேட்கின்றோம்.
நோயைப் பற்றியும், நோய்க்கான சிகிச்சை பற்றியும் பல இடங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது அத்தியாவசியமானதும் கூட. அதனோடு மற்றொரு விஷயமும் இங்கிருக்கிறது என்பதையும் ஞாபகப்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.இன்றைக்கு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை இருக்கும் அளவை விட, அவர்களை பார்க்க வரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. நோயாளியை நலம் விசாரித்தல் என்பது ஒரு வகையான மனிதர்களின் பண்பாடும், மனித நேயமும் கூட. இன்றைக்கு அது, கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. எதுவுமே அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அல்லது சிகிச்சையுடன் வீட்டிலிருக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வருவதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதைத்தான் நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம் அல்லது அதீத உரிமையில் அதிகமாக பேசி விடுகிறோம். அது சில நேரங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.
இன்றைய மக்களால் அதிகம் வாங்கப்படும் பொருட்களில் உடுத்தும் உடைகளும், அதற்கேற்ப வாசனை திரவியங்களும், அழகு சாதனங்களும் தான் இருக்கும். சமீபத்தில் துல்கர் சல்மான் அவர்கள் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் வரும் வசனம் போல், நம்மைப் பற்றிய வசதி தெரிய வேண்டுமென்றால், அது நம் மீது இருக்கும் பொருட்களை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்பது போல் கூறுவார். நம்மிடமும் அதற்கேற்றவாறு உடைகள் இருப்பதால், எந்த இடத்திற்கு எதை உடுத்திச் செல்வது என்பதை மறந்து விடுகிறோம்.
ஒரு நோயாளியை பார்க்க வரும் போது, வாசனை திரவியங்களின் வாசனை ஒரு பக்கம், கண்ணைப் பறிக்கும் உடைகள் மற்றொரு பக்கம் என்று வரும் போது, நோயாளின் மனநிலை பாதிக்கப்படும். சிலருக்கு மூச்சு விடுவதில் பிரசனை இருக்கும் போது, நம் மேல் இருக்கும் வாசனை திரவியங்களால் கஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.
அதனால் உடுத்தும் உடையில் இருந்து வாசனை திரவியங்களின் தன்மையையும் பார்த்து தான் நாம் சிகிச்சையில் இருப்பவர்களை பார்க்கச் செல்ல வேண்டும். அதிலும் குழந்தைகளையும், வயதானவர்களையும் பார்க்க வரும் போது, இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இன்றைக்கு குழந்தைகளும் பலவித நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். முதலில் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகளை பார்க்க வரும் போது, ஏற்கனவே தங்களுடைய உடலின் நோய்களுக்காக மாத்திரைகள் எடுக்கும் பெரியவர்கள் கொஞ்சம் கவனமெடுத்து, குழந்தைகள் சரியாகும் வரை விலகி நிற்பதே சிறந்தது.
உடனே, கேள்வி கேட்காதீர்கள். நாங்க எல்லாம் குழந்தைகளை வளர்க்கவே இல்லையா, நோய் வந்து அவர்களை கவனிக்கவே இல்லையா என்று கேள்விகளை அடுக்காதீர்கள். நீங்க பார்த்து, வளர்ந்த குழந்தைகளின் நோயின் தன்மைகள் எல்லாம் குறைந்தது 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். அன்றைய பருவ காலச்சூழல் வேறு, நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை வேறு, சிகிச்சையின் முறைகள் வேறு. இன்றைக்கு அனைத்துமே தலைகீழாக மாறியிருக்கிறது. அதனால் நாம் செய்யும் சில அலட்சிய நடவடிக்கைகளால், எளிதில் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனாலேயே குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று கேள்விப்பட்டால், நமது உடல் நலனையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு நாம் போய் பார்க்க வேண்டும். இது நமக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பையே கொடுக்கும்.
அடுத்தபடியாக, காசநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், வறட்டு இருமல் இவை எல்லாம் ஒருவருக்கு இருக்கும் போது, அவர்களை பார்க்கச் செல்லும் போது, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை அழைத்துச் செல்லக் கூடாது.
எளிதாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.பொதுவாக நோய் ஒருவரைத் தாக்கும் போது, அவரும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லையே என்ற எண்ணங்கள் இயல்பாக அவர்களுக்கு ஏற்படும். அந்நேரத்தில் நாம் நமது வாழ்க்கையில் பார்த்த மனிதர்களின் அனுபவங்களை எல்லாம் கூறியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.
ஏனென்றால், இன்றைய மனிதர்கள் நோயால் பாதிக்கப்படும் போது, அறுவை சிகிச்சை கூட, வலியில்லாமல் செய்வதற்கு பல அட்வான்ஸ்டு டெக்னாலஜி வந்து விட்டது. அதே நேரத்தில், உடலில் வலிகள் குறைவாக இருந்தாலும், மனதால் மிகவும் பலகீனமானவர்களாக மாறி வருகிறார்கள். அதனால் சில நேரம், நோயாளிகளை பார்க்க வரும் போது, நமது கதைகளை கூறுவதால், மிகவும் பலவீன மனநிலையில் இருப்பவர்கள், உடனே உடலளவிலும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
மனநல ஆய்வாளர் லக்கான் அவர்கள் கூறுவது, நமது மொழியால் மனிதனை பலமுள்ளவனாகவும் மாற்ற முடியும், பலமற்றவனாகவும் மாற்ற முடியும். அதனால், பார்க்க வரும் மனிதர்கள் சொல்லும் கதைகளால், பாதிப்படைகின்ற நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இவை எல்லாம் போக, இறைவி படத்தில் ஒரு சீன் வரும். வடிவுக்கரசி கோமாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அங்கு வரும் மகன்கள் எஸ்.ஜெ. சூர்யா, பாபி சிம்ஹா, கணவர் ராதாரவி அனைவரும், குடும்ப பிரச்னைகளைப் பற்றி பேசி, கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
பொதுவாக மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது என்பது உடலிலுள்ள மூட்டு, நரம்பு, தசைகள் அனைத்துமே பலவீனமாக இருக்கும் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இம்மாதிரி சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் முன், குடும்ப உறவினர்கள் கத்தி சண்டை போடும் போது, அவர்களின் நரம்பு பலவீனமாகி, கை, கால்கள் எல்லாம் இன்னும் நடுக்கமடைய ஆரம்பிக்கும்.
இன்றைக்கு நரம்பியல் துறையில் தான் அதிக எண்ணிக்கையிலான நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அது தெரியாமல், நாம் நமது கோபம் மற்றும் வெறுப்பால் ஏற்படும் நடவடிக்கையால், மருத்துவர்களின் உதவியோடு உடல் சரியாகிக் கொண்டிருக்கும் போது, நம்முடைய நடவடிக்கையால், நோயாளி இன்னும் தீவிர சிகிச்சைக்கு ஆளாவார்.
நோயாளிகளை பார்க்க வரும் போது, அள்ளித்தட்டி பிரெட், பழங்கள், ஹார்லிக்ஸ் என்று வாங்கிட்டு வருவதை குறைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் நோயாளிக்கு மாத்திரைகளின் விளைவால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும் போது, அவரால் பிரெட் எல்லாம் சாப்பிட முடியாது.
மேலும், சுகர் மற்றும் டயபெடிக் பிரச்னையால் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையுடன், டயட்டீஷியன் ஆலோசனையும் இன்றைய மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது.
அதன்படி, நோயாளியின் சாப்பாடு இருக்கும். அதனால், நாம் நமது பாசத்தைக் காட்டுகிறோம் என்று, இம்மாதிரியான சாப்பிடும் பொருட்களை வாங்குவதை முடிந்தளவிற்கு தவிர்த்து விடுங்கள். அல்லது அவர்களிடமே கேட்டு, நோயாளியின் வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். யார் யார்க்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பது தான் சரியான முறையாகும்.
கடைசியாக கூறுவது, மருத்துவமனையில் நோயாளி சிகிச்சையில் இருக்கும் போது, அவருடன் இருப்பவர் மீதும் நாம் அக்கறை கொள்ள வேண்டும். இங்கு பெரும்பாலும் மனிதர்கள் மருத்துவமனைகளில் சிரமப்படுவது, மாற்றி விட ஆள் இல்லாமல் இருப்பது தான்.
நாம் சிகிச்சையில் இருப்பவர்களை பார்க்கச் செல்லும் போது, அங்கு கூட இருப்பவர்களை பார்த்து காபி குடிக்கவோ, சாப்பிடவோ செல்லுமாறு முதலில் கூற வேண்டும். அதன்பின், அவர்களுக்காக சில மணி நேரங்கள் நோயாளியை நாம் கவனித்துக் கொள்ள வாய்ப்பிருந்தால், இவ்வளவு நேரம் கூட இருந்தவர்களை தூங்கப் சொல்லலாம். அவர்களின் உடல் நலனின் மீதும் நாம் கவனம் செலுத்தலாம். மிக முக்கியமாக, இன்றைய சூழலில் சிகிச்சையில் இருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளை கேட்கவே கூடாது. அது அவர்களின் மனநிம்மதிக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவற்றில் சில கேள்விகள், பெண் குழந்தைகள் இருந்தால், இன்னும் வயதிற்கு வரவில்லையா, திருமணம் ஆகவில்லையா, திருமணம் செய்து வைக்கவில்லையா, குழந்தைகள் இல்லையா, இன்னும் கர்ப்பமாகவில்லையா, இன்னும் வேலைக்கு செல்லவில்லையா என்பதோடு, சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரைப் பார்த்து, கல்வியைப் பற்றியோ அல்லது குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றியோ பேசுவதையும், கேட்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களோடு இருப்பவர்களின் உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், நாம் நமது நடவடிக்கைகளையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது சாப்பிடுவதற்கு ஒரு மேனர்ஸ் இருக்கு என்று சொல்வது போல், இதற்கும் ஒரு மேனர்ஸ் இருக்கிறது.
இதனை எல்லாம் நாம் செய்யும் போது, அவர்களுக்கு மிகவும் உதவியாகவும், பக்கபலமாகவும் நம்மால் இருக்க முடியும். ஏனென்றால், இந்த உலகில் பிறந்த அனைவரும் சரியான வாழ்விற்கு தகுதியானவர்கள் தான். அவர்கள் நோயாளிகளாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் ஒரு பிரைவசியும், அவர்களுக்கும் விருப்பு, வெறுப்பும் இருக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
|