தலை முதல் பாதம் வரை!



சமீப  காலமாகவே மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம்மை சுற்றி ஆரோக்கியமற்ற சூழலே பெரும்பாலும் நிலவிவருகிறது. இந்த சூழலிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும்.  
அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களே போதுமானது. எனவே, நமது உணவு முறையில் கவனம் செலுத்தினாலே,  ஆரோக்கியமாக வாழமுடியும். மூளை : நம் உடலில்  உள்ள முக்கியமான உறுப்புகளில்  மூளையும் ஒன்று. நாம் இயங்குவதற்கான  கட்டளைகளை மூளைதான் செயல்படுத்துகிறது.

கறிவேப்பிலைத் துவையலை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்  மூளையின் செயல்பாடு சீராகி சுறுசுறுப்புடன்  இருக்கலாம்.வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி  சுடுசாதத்துடன்  இரண்டு கவளம் சாப்பிட்டு வர  மூளைக்கு  பயன்தரும்.கண்கள்: இந்த உலகத்தைப் படம் பிடித்து மூளைக்கு அனுப்பும் பணியை கண்கள் செய்கின்றன.  கண்ணை பாதுகாக்க வேண்டியது நமது
கடமையாகும்.வெண்டைக்காய்  அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது கண்களுக்கு  நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய்  ஜூஸ் குடித்து  வந்தால் கண் தொடர்பான  பிரச்னைகள்  வராது.கீரைவகைகள் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை பார்வைத்திறனை மேம்படுத்தும்.

பற்கள்: பளிச்  பற்கள்  புன்னகைக்கு  மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. மாவிலையை உலர்த்தி  பொடியாக்கி  அதைக்கொண்டு பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

செவ்வாழைப்பழத்தை தினமும் இரவில்  சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு பல்சொத்தை  ஆகியவை வராது.

நரம்புகள்: அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர நரம்புகள்  பலப்படும். சேப்பங்கிழங்கு  வாரத்திற்கு ஒருமுறை யாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.  மாதுளம்பழச்சாறில் தேன் கலந்து குடித்து வர நரம்பு பலம் பெறும்.

ரத்தம்: உடல்  முழுவதும்  பிராண வாயுவை எடுத்துச் செல்லும் முக்கியமான பணியை ரத்தம் மேற்கொள்கிறது.  

திராட்சைப்பழ ஜூஸ்ஸில், ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு,  சிறிது தேன் கலந்து குடித்துவந்தால் ரத்தம்  சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் தயிர்  சாப்பிட்டு  வருவது ரத்தக் குழாய்களுக்கு மிகவும் நல்லது.அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டுவந்தால்  ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
சீரகத்தை  போட்டு நீரைக் கொதிக்க  வைத்து அந்த தண்ணீரை நாள்  முழுவதும் குடித்துவந்தால் ரத்தம் சுத்தமாகும்.

சருமம்: சருமம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ தேநீர் குடித்து வரலாம்.  

ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.வறண்ட சருமம் உள்ளவர்கள் பால் மற்றும் தேன் கலந்து தினமும் குடித்து வர, சருமம் பொலிவாகும். எந்தவித  தோல்  நோய்களும் அண்டாமல்  இருக்க வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து  
வந்தால்  சருமம் மின்னும்.

நுரையீரல், இதயம்: தேனில்  ஊறவைத்த நெல்லிக்கனியை தினசரி  சாப்பிட்டு வர  நுரையீரல்  மற்றும் இதயம்  பலமாகும்.

முசுமுசுக்கை இலையை  மாதம் இருமுறை  சாப்பிட்டுவந்தால் நுரையீரல் புற்றுநோய்க்கு  சிறந்தது.சுண்டைக்காய் வற்றலை  உணவில் அடிக்கடி  சேர்த்துக்கொள்ள  நுரையீரல்  ஆரோக்கியத்துடன்  இருக்கும்.திராட்சை  ஜூஸ்,  உலர் திராட்சையை  சாப்பிட  இதயம்  பலம் பெறும்.ஆளி விதைகள், பாதாம், வால்நட்  ஆகியவற்றில் ஓமேகா 3 நல்ல  கொழுப்பு  இருப்பதால் இதயத்துக்கு  நல்லது.

வயிறு: நாம் உண்ணும் உணவை  செரிக்கச்செய்து ஆற்றலாக மாற்றித் தரும் முக்கியமான பணியை  வயிறு மேற்கொள்கிறது. வயிறு நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக  இருக்கும்.
காலையில் எழுந்ததும்  இரவு ஊறவைத்த ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சாப்பிட்டுவந்தால் வயிறு சுத்தமாகும்.மாதுளம்பூவை  தேநீராக்கிக் குடித்து வந்தால்  வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

புதினாத் துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் வயிறு நோய்கள்  அகலும். வாழைப்பூ, மணத்தக்காளி கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட, வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

கணையம்: பாகற்காய், அவரைப்பிஞ்சு,  நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால்  கணையத்தின் செயல்பாடு சீராக  இருக்கும்.ஆவாரம் பூவை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால்  கணையத்தின்  செயல்பாடு சீராக இருக்கும்.

கல்லீரல் மண்ணீரல்: கீழாநெல்லியை அரைத்து புளியங்கொட்டை  அளவு வெறும்  வயிற்றில்  வாரத்துக்கு ஒருநாள் சாப்பிட்டு  வர கல்லீரல்  மண்ணீரல் பலம் பெறும்.மாதத்தில்  இரண்டு  நாள்கள்  வேப்பம்பூ  ரசம் வைத்து சாப்பிட வேண்டும்.திராட்சைப் பழச்சாற்று அருந்தி வந்தால்  கல்லீரல், மண்ணீரல்  உறுப்புகளுக்கு நன்மை செய்யும்.

மலக்குடல்: முட்டைக்கோஸ்  வாரம் ஒரு நாள்  சமைத்து சாப்பிட  மலக்குடல்  சுத்தமாக  இருக்கும்.பப்பாளி பழத்தை  தொடர்ந்து சாப்பிடுவது  நல்லது. மாதுளைப் பூச்சாறு  15 மி.லி. பனங்கற்கண்டு சிறிதளவு  சேர்த்து  குடித்தால்  மலக்குடல்  சுத்தியாகும்.

பாதம்: உடலின்  மொத்த  எடையை  தாங்கி  நிற்பதற்கும்  நடப்பதற்கும் உதவுவது பாதங்கள்தான். பாதங்களின் ஆரோக்கியமே  இயல்பான  வாழ்க்கைக்கு  அஸ்திவாரம்.வாழைப்பூவை  அடிக்கடி உணவில் சேர்த்து வர,  பாதங்கள் பலம் பெறும்.விளக்கெண்ணெய், தேங்காய்  எண்ணெய் சமஅளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால்  பாதம் மிருதுவாக  இருக்கும்.

- இரா.அருண்குமார்.