ஹெல்த் இன்ஷூரன்ஸ்… எப்போ? யாருக்கு? எப்படி?



நாற்பது வயதை நெருங்கும் நண்பர் ஒருவருக்கு திடீர் என மாரடைப்பு. அடித்துப் பிடித்து அவசர அவசரமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். நான்கைந்து நாட்களாக மருத்துவமனை வாசம். எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., ஆஞ்சியோகிராம் என்று அனுமார் வால் போல் சிகிச்சையும் பில்லும் நீண்டன.
குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வைத்திருந்த தொகை, மனைவியின் நகை என்று புரட்டி எப்படியோ செலவை சமாளித்துவிட்டு வெளியே வந்தார். அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பற்றிச் சொன்னபோது, ’ஏன் சார் நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா?’ என்றார். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்தாலே ஏதாவது நோய் வந்துவிடும் என்பது ஒரு மூடநம்பிக்கை.

‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். நம் பாட்டன்கள்; அப்பாக்கள் வாழ்ந்த வாழ்வு அல்ல நாம் வாழ்வது. இன்று நாம் உண்ணும் உணவு மாறிவிட்டது. உறங்கும் நேரம் மாறிவிட்டது. மக்கள்தொகைப் பெருகிவிட்டது.

வாகனங்கள் பெருகிவிட்டன. அதன் விளைவாய் விபத்துகளும் பெருகிவிட்டன. தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை விதவிதமான நோய்கள் வாயில் நுழையாத பெயருடன் நம் உடலில் நுழைந்து உயிரைக் கொள்ளையிட எத்தனிக்கின்றன. இது எல்லாம் நம் முந்தைய தலைமுறைக்கு நேராத பிரச்சனைகள். வாழ்க்கைமுறை மாறும் போது வாழ்க்கை பற்றிய நம்பிக்கைகள் மட்டும் மாறாது இருப்பது நல்லது அல்ல. எனவே, தயக்கத்தையும் குழப்பத்தையும் தவிர்த்திடுங்கள். மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்
வாருங்கள்.

ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடும்

இந்தியாவில் காப்பீடு எனும் துறை நெடுங்காலமாக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உலகமயமாக்கல், புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் ஆகியவற்றின் விளைவாக இன்ஷூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை ஐஆர்டிஏ (IRDAI - The Insurance regulatory and development authority of India) அனுமதித்தது. எல்.ஐ.சி மட்டுமே  மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமாக கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் வாகனக் காப்பீடு, தொழில்சார் காப்பீடு தவிர ஆயுள் காப்பீடு மட்டுமே தனிநபருக்கான காப்பீடாக இருந்துவந்தது. தனியார் நிறுவனங்கள் காப்பீட்டுத் துறைக்குள் நுழைந்தபோது இந்த நிலை மாறியது. காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டோடு மருத்துவக் காப்பீடும் தர முன் வந்தன.

ஒருவர் குறிப்பிட்ட மாத இடைவெளியில், குறிப்பிட்ட வருடங்களுக்கு ப்ரீமியம் தொகையைக் கட்டிவர பாலிசி முடிவடையும் தருவாயில் கட்டிய மொத்த தொகையுடன் ஈட்டுறுதித் தொகை சேர்த்துத் தருவதும்; பாலிசி முடிவடையும் காலத்துக்குள் காப்பீட்டாளர் இறந்தால் காப்பீட்டுத் தொகையாக ஒரு பெரிய தொகையைத் தருவதும் ஆயுள் காப்பீடு எனப்படுகிறது.

மருத்துவக் காப்பீடு என்பது இதில் இருந்து மாறுபட்டது. பெரும்பாலான மருத்துவக் காப்பீடுகளில் பாலிசி முடிந்தால் ப்ரீமியம் தொகை திரும்பத் தரப்படுவது இல்லை. ஆனால், பாலிசி நடப்பில் இருக்கும் காலத்தில் காப்பீட்டாளர் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர் காப்பீடு செய்திருந்த தொகை முழுமையாக அவருக்கு வழங்கப்படும்.

இதுதான் பொதுவாக, மருத்துவக் காப்பீடு எனப்படுகிறது. அதிலும் பெரும்பாலான மருத்துவக் காப்பீடுகள் மருத்துவமனைகளில் உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே தரப்படுகின்றன. புறநோயாளியாக சிகிச்சை பெற்று உடனே திரும்பினால் அந்த நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு பெரும்பாலும் கிடையாது.

தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் மெடிக்கல் இன்ஷூரன்ஸ்

மெடிக்கல் இன்ஷூரன்ஸில் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் என இருவகை உள்ளன. தனிநபர் மருத்துவக் காப்பீடு என்பது யாரின் பெயரில் காப்பீடு எடுக்கப்படு
கிறதோ அவர்களுக்கு மட்டுமே பயன்படும். ஃப்ளோட்டர் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் என்பது ஒரு குடும்பத்துக்கானது. அதில் காப்பீடு எடுப்பவருடன் அவரின் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் அந்தக் காப்பீட்டால் பயனடைய உரிமை உள்ளது.

டாப் அப் பிளான்ஸ்

தற்போது பல பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக்காப்பீடு அளித்துவருகின்றன. அவ்வாறு தாம் பணிபுரியும் நிறுவனம் அளிக்கும் காப்பீட்டுத் தொகை போதாது என்று ஒருவர் கருதினால் கூடுதல் தொகையை காப்பீடாகப் பெற அதே பாலிசிக்கு ஒரு குறிப்பிட்ட கூடுதல் தொகையை ப்ரீமியமாகச் செலுத்தலாம். இந்த வசதியை டாப் அப் என்பார்கள். தற்போது பல தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்த டாப் அப் வசதியை தந்துவருகின்றன.

இதைத் தவிர, ஃப்ளோட்டர் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த ஒருவர் அதன் க்ளெய்ம் தொகையை முழுமையாகப் பயன்படுத்திய பிறகு மீண்டும் அதே அளவு காப்பீட்டு தொகை வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையைப் ப்ரீமியமாக செலுத்தி அந்த சலுகையைப் பெறலாம். இதுவும் ஒருவகை டாப் அப் திட்டம்தான். இந்த வகை சேவையும் சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவருகின்றன.

கூடுதல் சலுகைகள்

சில மருத்துவக் காப்பீடுகள் பிரசவம், புதிதாய் பிறந்த குழந்தைக்கான கவரேஜ், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய செலவுகள், டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஏற்படும் பராமரிப்பு செலவுகள் (நர்ஸிங் ஃபீஸ், டாக்டர் ஃபீஸ், பிசியோதெரப்பி போன்றவை) போன்ற இதர செலவுகளுக்கான தொகையைத் தருவதற்கும் காப்பீடு அளிக்கின்றன. Daily cash போன்ற திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால், இதன் விதிகளை கவனமாகப் படித்துவிட்டு நன்கு புரிந்துகொண்டபின் காப்பீடு எடுப்பது நல்லது.

ஏற்கெனவே உள்ள நோய்களுக்கான பாலிசி

ஏதேனும் நோய் இருந்தால் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என்பது எல்லாம் அந்தக் காலம். இப்போது குறிப்பிட்ட சில நோய்கள் உள்ளவர்களுக்கு என்றே பிரத்யேக மெடிக்கல் இன்ஷூரன்ஸ்கள் வந்துவிட்டன. சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் போன்ற உறுப்புகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு உட்பட பல்வேறு வகையான நாட்பட்ட நோய்களுக்கான இன்ஷூரன்ஸ் வசதிகளை சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.

ஆனால், இவற்றுக்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை காத்திருப்பு காலம் உள்ளது. அதாவது, இந்த பாலிசி எடுத்த தேதி முதல் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரையிலும் இவை செயல்பாட்டுக்கு வராது. நோய் வருவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே அனுமானிக்க முடிந்தால் இந்த பாலிசியை எடுக்கலாம். உதாரணம், ப்ரீ டயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை நோய்க்கான சிறப்புப் பாலிசியை எடுக்கலாம். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கல்லீரலுக்கான சிறப்பு பாலிசியை எடுக்கலாம்.

சீனியர் சிட்டிசன் பாலிசிகள்

முதுமையை நோய்களின் வேட்டைக்காடு என்பார்கள். சாதாரண சளி முதல் உயிர் வாங்கும் புற்றுநோய் வரை எல்லாவகை நோய்களுக்கும் முதுமை திறந்த வாசலாகவே இருக்கிறது. எனவே, முதுமையில் மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது இந்தக் காலத்தின் தேவையாக இருக்கிறது. தற்போது 65 வயதைக் கடந்த முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீடுகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றிலும் சிலவற்றுக்கு காத்திருப்புக் காலம் உண்டு.

கர்ப்ப கால காப்பீடு

கருவுற்ற நாள் தொடங்கி, பிரசவம், குழந்தைப் பிறப்பு மற்றும் பிறந்த குழந்தைகான கவரேஜ் வரை கர்ப்ப கால காப்பீடு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ட்ரைமஸ்டரின் போதும் ஏற்படும் மருத்துவச் செலவுகள், நார்மல் டெலிவரி அல்லது சிசேரியன் டெலிவரி போன்றவற்றுக்கான மருத்துவ செலவுகள், மருத்துவமனை படுக்கை வாடகை, பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்கான செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

தினசரி மருத்துவமனைச் செலவுகள்

சிலவகை நோய்களுக்கு தினசரி அல்லது அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டியது இருக்கும். உதாரணம், டயாலிசிஸ் நோயாளிகள், பிசியோதெரப்பி எடுப்பவர்கள். இப்படியான நோயாளிகளுக்கான சிறப்புத் திட்டமாக Daily Cash பாலிசிகள் இருக்கின்றன. இந்த பாலிசி படி ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த சிகிச்சைகளைப் பெறுவதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

தீவிர நோய்களுக்கான காப்பீடு (Critical illness plans)

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் படி ஒருவர் பாலிசி எடுக்கும்போது அது நடப்பில் இருக்கும் காலத்தில் இதயநோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற தீவிரமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் மொத்தமாக ஒரு பெரிய தொகை காப்பீடாக வழங்கப்படும். பொதுவான, மெடிக்கல் இன்ஷூரன்ஸில் வழங்கப்படும் தொகையை விடவும் பல மடங்கு அதிக தொகையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நோய்களுக்கான திட்டங்கள்

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் என்பது மாரடைப்பு, புற்றுநோய் போன்ற அதிதீவிர நோய்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று இல்லை. தற்போது டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் போன்ற அந்தந்த சீசனில் தோன்றும் தீவிரமான பருவகால நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வந்துவிட்டது. இவ்வகைத் திட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டுமே கவரேஜ் அளிக்கின்றன. அந்த குறிப்பிட்ட நோயை கண்டறிவதற்கான சோதனை, மருத்துவமனை கட்டணம், டாக்டர் ஃபீஸ், மருத்துவச் செலவுகள் உட்பட அனைத்துக்கும் கவரேஜ் தருகின்றன. இதிலேயே ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கவர் செய்வதற்கான ஃப்ளோட்டர் திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளன.

ப்ரோ ஆக்டிவ் ப்ளான்ஸ்

இது கொஞ்சம் வித்தியாசமானது. இவர்கள் உங்களுக்கு நேரடியாக எந்தக் காப்பீடும் அளிப்பது இல்லை. உங்களது ஹெல்த் நிலவரம், உங்கள் வாழ்க்கைமுறை, வாழ்க்கைச்சூழல் போன்றவற்றை அவதானித்து இன்ஷூரன்ஸ் துறையின் தற்போதைய போக்குகளைக் கவனத்தில்கொண்டு இந்தவகை மருத்துவக் காப்பீடு உங்களுக்குச் சிறந்தது என்ற அறிவுரையை இவர்கள் வழங்குவார்கள். மேலும், அந்த குறிப்பிட்ட மருத்துவக் காப்பீட்டையும் சேர்த்தே வழங்கும் நிறுவனமும் உள்ளன.

விபத்துக் காப்பீடு

ஆக்சிடென்ட் பாலிசி என்பது மருத்துவக் காப்பீட்டில் இருந்து வேறானது. பயணம், பணியிடத்தில் வேலை செய்தல் போன்றவற்றின் போது ஏற்படும் சிறிய மற்றும் பெரிய விபத்துகளுக்கான சிகிச்சைகளுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், அந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.

பாலிசி தொகை மற்றும் கவரேஜ்

மெடிக்கல் இன்ஷூரன்ஸுக்கான பாலிசி தொகை குறைந்தபட்சம் 500 ரூபாயில் தொடங்கி பல்வேறு நிலையில் உள்ளன. இதற்கான கவரேஜ் சுமார் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலும்கூட உள்ளன. என்ன மாதிரியான நோய், என்ன மாதிரியான சிகிச்சை, எவ்வளவு ரிஸ்க் என்பதற்கு ஏற்ப கவரேஜ் தொகையும் மாறுபடும். பொதுவாக, பாலிசி தொகை அதிகரிக்கும் விகிதத்துக்கு ஏற்ப அதன் கவரேஜ் தொகையும் அதிகரிக்கும். அதுபோலவே, பெரும்பாலான மருத்துவக் காப்பீடுகள் அதிகபட்சம் ஒரு வருடத்துக்கான
கவரேஜ் மட்டுமே அளிக்கின்றன.

வருமான வரி விலக்கு

மெடிக்கல் இன்ஷூரன்ஸில் ப்ரீமியமாகச் செலுத்தப்படும் முழுத்தொகைக்கும் வருமான வரிச்சட்டம் 80 D - ன் படி முழு விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகையை ஆண்டு வருமானத் தொகையில் கழித்துக்கொள்ளலாம். (வரியில் அல்ல வருமானத்தில் மட்டுமே கழிக்க முடியும். செலுத்தியதற்கான ரசீது ஆதாரம் முக்கியம்.

- இளங்கோ கிருஷ்ணன்