பழங்குடி மக்கள் கற்றுத்தரும் பாடம்!



ஆராய்ச்சி

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதில் தான்சானியா நாட்டின், ஹட்சா(Hadza)  என்ற வேட்டையாடும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையில் பல உண்மைகள் புலப்பட்டது.ஹட்சா பழங்குடியின மக்கள் சுறுசுறுப்பாகவும்,  சீரான ரத்த அழுத்தம், சீரான கொழுப்பு குறைந்தவர்களாகவும், நல்ல வளர்சிதை மாற்றத்துடனும், நல்ல இதய ஆரோக்கியத்துடனும் இருப்பதை  ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அவர்களின் ஆரோக்கியத்திற்கான காரணத்தை அறிய முற்பட்டனர். அதற்காக குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து  அவர்களை Active Tracker -ஐ அணிய வைத்து, எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்? எத்தனை மணி நேரம் ஓய்வெடுக்கிறார்கள் எனவும்  சோதனை செய்தனர்.

ஹட்சா பழங்குடியினரின் ஓய்வு நேரம், கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள வேலைக்குச் செல்லும் நமது ஓய்வு நேரத்தோடு பொருந்துகிறது  என்பதும் தெரிந்தது. ஆனால், நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசம்... ஹட்ஸா பழங்குடியினர், உட்கார்ந்து வேலை செய்கிற  சூழலிலும் பெரும்பாலும் தரையிலேயே உட்கார்ந்துகொள்கின்றனர். நாம் நாற்காலிகளில் சௌகரியமாக அமர்வது போல, அவர்கள் உயரமான  இடங்களிலும் சௌகரியமாகவும் அமர்வதில்லை. முக்கியமாக தரையில் அவர்கள் குந்த வைத்துத்தான் உட்கார்கின்றனர்.ஓய்வெடுக்கும்போதும்  இதேமுறையிலான அமர்வு வழியைப் பின்பற்றுகிறார்கள். ஒரு நாளின் ஓய்வில் இருக்கும் கிட்டத்தட்ட 20 சதவீத செயலற்ற நேரத்தை  முழங்கால்களை வளைத்து, தரையில் இருந்து மேலெழும்பிய, குந்த வைத்து உட்காரும் நிலையிலேயே செலவிடுகிறார்கள்.

ஓய்வெடுப்பதற்கான இந்த அணுகுமுறை முக்கியத்துவம் பெற்றது என்பதை உணர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை இன்னும் ஆழமாக ஆராய  முயன்றார்கள். பழங்குடியினரை தசைச் சுருக்கங்களைக் குறிக்கும் சென்சார்களை அணிந்துகொள்ளச் சொல்லி கண்காணித்தார்கள். நடக்கும்போதும்,  உட்காரும்போதும் இருந்ததைவிட குந்தவைத்து உட்காரும்போதும் அவர்களின் தசைகள் 40 சதவீதம் அதிகமாக சுருங்குவது சென்சார் ரீடிங்கில்  தெரிந்தது. நாற்காலியில் உட்காரும்போதும், குந்த வைத்து உட்காரும்போதும் ஏற்படும் தசைச்சுருக்கங்களின் வேறுபாடுகளே நம் உடல்  ஆரோக்கியத்தில் வெளிப்படுகிறது என்பதையும் உணர்ந்துகொண்டனர்.நாகரிக வாழ்வை வாழும் நமக்கும், இயற்கையோடு இயைந்து வாழும்  பழங்குடியினருக்கும் இடையே இந்த வேறுபாடுதான் நமது வளர்சிதை மாற்றம் மற்றும் இதய ஆரோக்கியத்தில் வெளிப்படுகிறது’ என்பதை  கண்டுகொண்டது இந்த ஆராய்ச்சி.

- இந்துமதி