டாக்டர்



* மைதாவில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் புற்றுநோயின் மூலக்காரணம் என்பதைப் படித்தவுடன் திடுக்கிட்டேன். இன்றுமுதல் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவை உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய சிறப்பான கட்டுரையைத் தொகுத்துப் படைத்த ‘குங்குமம் டாக்டர்’-க்கு நன்றிகள் பல! - ரீஜா மனோகரன், சூளை.

*‘தூக்கத்தைக் கெடுக்கும் வேலை’, ‘கல்யாணத்துக்கு ரெடியா?’, ‘கதை நல்லது’, ‘உங்கள் குழந்தை பத்திரம்’- போன்ற கட்டுரைகள் கண்டிப்பாக வாசகர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுத்துள்ள பொக்கிஷங்கள். தொடரட்டும் எங்களுக்கான உங்கள் பயணம். - எஸ்.ஜெகன், சாந்திநகர்.

*தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த கட்டுரை பலரின் குறிப்பாக ‘டைனிங் டேபிள்’ கலாச்சாரத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் கவனத்தினை ஈர்த்திருப்பது நிச்சயம்.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

*‘கல்யாணத்துக்கு ரெடியா’ வருங்கால தம்பதிகளுக்கு வாழ்க்கை இனிதாக அமைய ‘ஹெல்த் செக் நோட்களை’ப் பின்பற்ற நல்ல ஆலோசனைகளை அள்ளி வழங்கிவிட்டார் டாக்டர் அகிலாம்பாள். புதுமணத் தம்பதிகளுக்கும், பெற்றோருக்கும் நல்ல அறிவுரை.‘நம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது’ கட்டுரை அருமை. ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையில் உலகின் 15 மாசுபட்ட நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளன என்று கூறி விட்டார்கள். விழிப்புணர்வு இங்கே அரசுக்கும் இல்லை... மக்களுக்கும் இல்லை. இதே நிலை நீடித்தால் நல்ல தண்ணீரைக் காசுபோட்டு வாங்கி கையில் பாட்டில் பிடித்தபடி அலைவதுபோல், இனி நல்ல காற்றை சிலிண்டரில் அடைத்து முதுகில் சுமக்கும் நாளும் வெகுதூரத்தில் இல்லை. - செ.ரா.ரவி, செம்பட்டி- 624707.

* நாம் கண்டுகொள்ளாமல் செல்லும் ஆடாதோடை செடிக்கு இத்தனை மருத்துவப் பயன்களா என நினைத்து வியப்பில் ஆழ்ந்தேன். எல்லா நோய்களுக்கான தீர்வுகளும் இயற்கையிடமே இருக்கிறது. அதை கண்டுகொண்டு பயன்படுத்தினாலே போதும். - கண்ணபிரான், சோழிங்கநல்லூர்.

* பாட்டி வைத்தியத்தில் ஒவ்வொரு வாரமும் பல பயனுள்ள மூலிகைகளின் குறிப்பை சித்த மருத்துவர் திருநாராயணன் கொடுத்து வருகிறார். இந்த வாரம் ஆயுள்வளர்க்கும் நெல்லிக்கனி பற்றிய தகவல்கள் அற்புதம்.
- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

* ‘முதியோருக்கான உணவு முறை’யில் முதியோர்கள் எப்படி சாப்பிட வேண்டும்? என்னென்ன சாப்பிட வேண்டும்? என்று ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி தெளிவாக விளக்கியிருந்தார். முதியோர்களுக்கும், அவர்களை சார்ந்துள்ளோருக்கும் நல்ல பயனுள்ள குறிப்புகள். - கோமளா, பொள்ளாச்சி.