காப்பீடு எடுத்துக் கொள்வோரின் கவனத்துக்கு...



*கவர் ஸ்டோரி

‘‘மருத்துவ செலவுகள் விண்ணைத் தொடும் இந்நாளில் மருத்துவக் காப்பீடு அவசியமானது மட்டுமல்ல, அவசரமானதும்கூட. ஆனால், அது நமக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் நுகர்வோராகிய நாம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரம். காப்பீடு தொடர்பாக பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையும் இங்கே விளக்குகிறார்.

கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் மருத்துவ விஞ்ஞான முன்னேற்றத்தினால் மக்களிடையே உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. மக்களிடையே மருத்துவக் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காப்பீட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. காப்பீடு எடுத்துக்கொள்ளும் நுகர்வோர் தங்கள் மருத்துவத் தேவைகளை அறிந்து கொண்டு, தன் வருமானத்திற்கு உட்பட்டு தன்னால் கட்ட முடிந்த பிரீமியத் தொகையை தேர்வு செய்து, அதற்கேற்ற திட்டத்தை வழங்கும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு வாங்கும் முன் அதன் சட்டங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் ஆணைகளை தெளிவாகப் புரிந்துகொண்டு, பல காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் நிறுவனத்தில் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். உங்கள் உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே, நன்றாக உழைக்கும்போதே, சிறுவயதிலேயே காப்பீடு செய்துகொள்வது பிரீமியத் தொகையை வெகுவாகக் குறைக்க உதவும். மருத்துவக் காப்பீட்டின் முன்னேற்றத்தினால் பணம் இல்லாமலேயே மருத்துவமனைகளுக்குச் செல்லலாம் என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தகுந்தது.

காப்பீட்டு நிறுவனங்கள் அதன் ஒரு வகை திட்டப்படி நேராகவே மருத்துவமனைகளுக்கு, மருத்துவ செலவிற்கான தொகையை வழங்கிவிடுகிறது. மருத்துவக் காப்பீட்டின் மற்றொரு திட்டப்படி, ஒரு தனிநபர் 3 லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு செய்து, அதன் பயனை அவரது குடும்பத்தில் உள்ள மூன்று நபர்களுக்கு, ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் பிரித்துக் கொடுக்கலாம். அந்த மூன்று பேருக்கும் ஏற்படுகிற மருத்துவ செலவிற்கு அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும். மருத்துவக் காப்பீட்டை ‘மருத்துவ செலவு கோரும் உரிமை’ என்றும் கூறலாம். உங்களுக்கு விபத்து அல்லது நோய் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற அந்தத் தொகையை நீங்கள் உரிமை கோரலாம். மருத்துவக் காப்பீட்டிற்கு வருமான வரிச்சட்டம் 80 D பிரிவின் கீழ் சலுகைகள் உண்டு. மேலும் மருத்துவக் காப்பீட்டிற்கான வரிச்சலுகைகள் 80 C பிரிவின் கீழ் வருகின்றன.

மருத்துவக் காப்பீட்டின் நிலை

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவக் காப்பீட்டின் மூலம் சிகிச்சை பெறலாம். தற்போது அரசுப் பணியாளர்களுக்கான தனியான மருத்துவக் காப்பீடுகள் இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிற கூலித் தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீடு Employees’ State Insurance அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பொதுமக்களுக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு அட்டைகளைப் பெற்றிருப்பவர்கள் இதன் பலனைப் பெறலாம்.

மருத்துவக் காப்பீட்டில் சேரும் முன்னர் முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. பரிசோதனைகளுக்குப் பிறகு என்ன மாதிரியான நோய்கள் இருக்கிறது என்பதன் அடிப்படையில் நாம் எடுத்துக் கொள்கிற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும், அதன் பிரீமியத்தையும் காப்பீட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. காப்பீட்டு முகவரின் பொறுப்புகாப்பீட்டு முகவர் அல்லது ஏஜென்ட் என்பவர் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே பாலமாக இருக்கிறார். காப்பீடுகளில் முகவரின் பங்கு மிக முக்கியமானது.

குறிப்பாக மருத்துவக் காப்பீடுகளில் அவருடைய வேலை தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஏனென்றால் நுகர்வோர் அவர் சொல்லைக் கேட்டே மருத்துவக் காப்பீடு செய்து கொள்கின்றனர். சொல்லப்போனால் அவர் நுகர்வோருக்கு ஆலோசகராக இருப்பதுதான் முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் விற்பனையாளராக இருந்தாலும் அவர், நுகர்வோருக்கு மிகத் தெளிவாக மருத்துவக் காப்பீட்டின் விவரங்களை முழுமையாக ஒன்று விடாமல் சொல்ல வேண்டும். இதனால் நுகர்வோர் மருத்துவக் காப்பீட்டுத் தொகை பெறும்போது எந்த மனவருத்தமும் இருக்காது.

ஏனென்றால் பெரும்பாலான நுகர்வோர்கள் சிறிய உடல்நலக் குறைவிற்குக்கூட மருத்துவக் காப்பீடு உதவி செய்யும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். எனவே, நுகர்வோரின் நோக்கங்களையும், வருமானத்தையும் பொறுத்து அவருக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்ய முகவர்கள் உதவ வேண்டும்.முகவர் நுகர்வோருடன் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவதோடு, அவர்கள் எளிதில் காப்பீட்டுத் தொகை பெற வழிவகை செய்ய வேண்டும். நுகர்வோரின் மனநிறைவு, பாதுகாப்பு, மகிழ்ச்சி போன்றவையே காப்பீட்டு நிறுவனங்களின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து அவர்கள் செயல்பட வேண்டும்.

முகவர்களே காப்பீட்டு


நிறுவனங்களின் வியாபாரத்திற்கு ஆணி வேராக இருக்கின்றனர். இந்தியாவில் இந்த நூற்றாண்டில் மக்களிடையே காப்பீடு பற்றி மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டதற்குக் காரணமே இவர்கள்தான். அதே சமயம் தவறான முகவரைத் தேர்ந்தெடுக்கும்போது, நுகர்வோர் மட்டுமல்ல காப்பீட்டு நிறுவனங்களும் மனவேதனைக்கு ஆளாகிறார்கள். எனவே, நுகர்வோராகிய நாம் சரியான முகவரைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

காப்பீடு தொடர்பான புகார்களுக்கு...மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வகையான காப்பீடுகளின் மூலம் உரிய பலன் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடுக்கும் வழக்குகள் மற்றும் புகார்களை தீர்த்து வைக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு காப்பீட்டு சட்டம் 1938 பிரிவு 114(1) ல் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் குறை தீர்க்கும் விதிகளை 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி முதல் அமலாக்கம் செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையைப் பட்டுவாடா செய்வது தொடர்பாக எழும் புகார்களை அதிக செலவு இல்லாமல் நடுநிலையோடும், திறமையோடும் தீர்வு காண்பதே இந்த விதிமுறைகளின் குறிக்கோள்.

அரசு மற்றும் அனைத்து வகை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். காப்பீட்டு சேவையில் குறைபாடு ஏற்படும்போது அந்தக் காப்பீட்டு நிறுவனத்தின் குறை தீர்க்கும் அதிகாரியை அணுகி நாம் நிவாரணம் பெறலாம். அதில் சரியான நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் மத்திய அரசு நியமித்துள்ள ஓம்புட்ஸ்மேன் என்கிற மத்தியஸ்தரை அணுகி தீர்வு காணலாம். அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் நாம் செய்துள்ள காப்பீட்டுத் தொகையின் அளவுக்கேற்ற நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெறலாம்!

இவற்றை மறக்காதீர்கள்

* காப்பீடு எடுத்துக்கொள்ளும்போது உண்மையான தகவல்களை அளிக்க வேண்டும்.
* விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் பூர்த்தி செய்யாமல் காலியாக இருந்தால் கையெழுத்து இடக்கூடாது.
* உங்களது தேவைகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கேற்ற காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
* உங்களால் எவ்வளவு பிரீமியத் தொகை செலுத்த முடியுமோ அதற்கேற்ற திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
* ஆவணங்கள் எழுத்து வடிவிலேயே அமைய வேண்டும்.
* உங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்தை அணுகுவதே சிறந்தது.
* உங்கள் பிரீமியத் தொகையை குறிப்பிட்ட கால அளவிற்குள் செலுத்திவிட வேண்டும். பிரீமியத் தொகை செலுத்துவதற்கான நோட்டீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம்.
* உங்கள் முகவரி மாறினால் அது குறித்த தகவல்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
* காப்பீடு குறித்த ஆவணங்கள் தொலைந்துவிட்டால் உடனே காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.

* க.கதிரவன்