காய்ச்சலும் கடந்து போகும்!



கவர் ஸ்டோரி

காய்ச்சலை இனம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் தவறான கண்டறிதல், தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும் சிக்கலும் உண்டு. எனவே, காய்ச்சல்களின் தன்மையை அறிந்துகொள்வோம்.

நிமோனியா

மழை மற்றும் குளிர் காலங்களில் உலர்ந்த அல்லது குளிர்ந்த காற்றை தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் மற்றும் தொண்டைப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நுரையீரலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஃபுளு காய்ச்சல்

ஃபுளு எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற முக்கியமான நோய். இதில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை, கால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் ஆகிய தொல்லைகள் இருக்கும்.

காய்ச்சலைக் குறைக்கவும் தும்மல், மூக்கு ஒழுகுதல் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவும்தான் மருந்துகள் உள்ளனவே தவிர, இதற்கெனத் தனி சிகிச்சை எதுவுமில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பன்றிக் காய்ச்சல்

H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸ் கிருமி நம்மைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் உண்டாகிறது. மற்ற பருவ காலங்களைவிட, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் இந்தக் கிருமி அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும்.

ஃபுளு காய்ச்சலுக்குரிய அத்தனை அறிகுறிகளும் இதிலும் காணப்படும். சிலருக்கு மட்டும் அந்த அறிகுறிகளுடன் மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற ஆபத்துகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் டாமிஃபுளு மாத்திரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும். ஃபுளு காய்ச்சலையும் பன்றிக் காய்ச்சலையும் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine - TIV) உள்ளது. இதை இப்போதே போட்டுக்கொண்டால் நல்லது. இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும் திறனுடையது.

எலிக்காய்ச்சல்

எலியின் சிறுநீர் கலந்த மழைநீரின் மூலமாக மனிதர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எலியின் சிறுநீரில் லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பாக்டீரியா இருந்தால் அதன் மூலம் லெப்டோபைரோசிஸ் என்கிற இந்த நோய் உண்டாகிறது.

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். மழைக் காலங்களில் வெளியே சென்று வீடு திரும்பியதும் வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவுவதும், வீட்டைச் சுற்றி வெளியே நடக்கிற பொழுது கால்களை மூடியவாறு காலணி அணிந்து செல்வதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும்.

டைபாய்டு காய்ச்சல்

சால்மோனெல்லா (Salmonella) எனும் பாக்டீரியா மூலம் டைபாய்டு காய்ச்சல் உண்டாகிறது. இந்தக் கிருமி அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி கால்வலியுடன் நோய் தொடங்கும்.

ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும், பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, உடல் சோர்வு போன்ற தொல்லைகள் உண்டாகும். இந்த காய்ச்சலைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு வராது.

மலேரியா

மழைக்காலத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர், கொசுக்கள் உற்பத்திக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அனோஃபிலஸ் (Anopheles) என்கிற பெண் கொசு கடிப்பதால் மலேரியா காய்ச்சல் உண்டாகிறது. இந்த நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி உடலுக்குள் சென்று சாதகமான காலம் வரும் வரை காத்திருந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் நோயை உண்டாக்குகிறது. காய்ச்சல், நடுக்கம், தசைவலி மற்றும் சோர்வு போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகள்.

டெங்கு காய்ச்சல்

வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய் சரடுகள், ஓடுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் தேங்கும் மழைத் தண்ணீரிலிருந்து உற்பத்தியாகும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்கிற கொசுவால் டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.

இது மலேரியாவுக்கு அடுத்தபடியாக நாட்டையே அச்சுறுத்தும் நோயாக திகழ்கிறது இந்த டெங்கு காய்ச்சல். ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி மற்றும் தடிப்புகள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள். டெங்கு நோயை உண்டாக்கும் கொசு சாக்கடை போன்ற அசுத்தமான நீர் நிலைகளிலிருந்து உற்பத்தி ஆவதில்லை. எனவே நம் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால், டெங்கு காய்ச்சலை நம்மால் தவிர்க்க முடியும்.

Yellow fever

ஏடிஸ் ஏஜிப்டி கொசுவால் Dengue fever, Chikungunya, Zika மற்றும் Yellow fever போன்ற காய்ச்சல்கள் உண்டாகிறது. காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் வருவது போன்றவை Yellow fever-ன் அறிகுறிகள். இந்த காய்ச்சல் ஏற்பட காரணமான ப்ளேவி வைரஸ் ஏடிஸ் ஏஜிப்டி கொசு மூலமாக பரவுகிறது.

சிக்குன்குனியா காய்ச்சல்

காய்ச்சல் மற்றும் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி போன்ற அறிகுறிகளை உடையது சிக்குன்குனியா காய்ச்சல். இந்த காய்ச்சலுக்குக் காரணமான ஏடிஸ் கொசுக்கள் வீட்டிலுள்ள சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. தண்ணீர் தொட்டிகளை சுத்தப்படுத்தி, கொசுக்களை அழிக்கும் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தவிர்க்கலாம்.

- க.கதிரவன்