பணம் இருந்தாலும் பிரச்னை...



பணம் இல்லாவிட்டால் பிரச்னை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தாலும் ஒரு வகையில் சுகாதாரரீதியாக பிரச்னைதான் என்கிறார்கள். ஆமாம்.... கணிப்பொறி, மொபைல் போன் போல ரூபாயிலும் அதிகப்படியான நோய் பரப்பும் கிருமிகள் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள்.

சில்லறைக் காசுகளும், ரூபாய் நோட்டுகளும் பலதரப்பட்ட மனிதர்களின் கைகளில் புழங்கி வருகிறது. பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, ரூபாய் நோட்டுகள் அதிகம் மாசடைந்து, நோய் பரப்பிக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி ஆய்வு வெளியாகி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையில் 120 நோட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 86 சதவீத நோட்டுகளில், E.Coli உள்ளிட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவமனைகள், வங்கி, மார்க்கெட், இறைச்சி வியாபாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதேபோல் மரபணுவியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிலையத்திலும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.  அதிலும் 78 வகையான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள், ரூபாய் நோட்டுகளில் இருப்பது கண்டறியப்பட்டது. ரூபாய் நோட்டுகளில் உள்ள நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை பூஞ்சைகளாக இருந்தபோதிலும், வயிற்றுக்கோளாறு, காசநோய், வயிற்றுப்புண் ஆகியவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்களும் நோட்டுகளில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சிறுநீரக தொற்று, மூச்சுக்குழாய் தொற்று, தோல் நோய் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவையும் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இதுபோன்ற ஆய்வு முடிவுகளையும், பத்திரிகை செய்திகளையும் சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சகத்துக்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு ஒரு கடிதம் ஒன்றையும் முன்பே எழுதி உள்ளது.

அரசு தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்... அதுவரையிலும் நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சில்லறைக் காசுகள், ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திய பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அப்படியே உணவுப்பொருட்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

- கவிபாரதி