டியர் டாக்டர்



* தமிழகத்துக்கு வந்திருக்கும் வியட்நாம் அதிர்ச்சி என்ற ‘மீன்லயும் பிராய்லர்?!’ கவர் ஸ்டோரியைப் படித்து ப(வி)யந்து போனேன். கறிக்கோழி சர்ச்சையிலிருந்தே இன்னும் மீளாத நமக்கு, இப்போது மீன் வேறு புதிய பிரச்னையா என்ற கேள்வி எழுந்தது. இன்னும் எதிலெதிலெல்லாம் பிராய்லர் வரப்போகிறதோ?!
- ஜி.கிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

* புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தலாம் என்ற ஆய்வுக்கட்டுரை நிம்மதியைத் தந்தது. விரைவில் நடைமுறைக்கு வந்து நோயாளிகளுக்குப் பயனளிக்கட்டும். மூளை பற்றிய மூன்று பக்க குட்டிகுட்டித் தகவல்கள் சுவாரஸ்யம்!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* அலங்காரத்துக்குப் பயன்படும் அழகான செர்ரியின் ஆரோக்கியப் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்துகொண்டோம். குங்குமம் டாக்டரின் ஒவ்வொரு இதழின் சிறப்பம்சமாக கலக்கும் கவர் ஸ்டோரி, இந்த முறை மீன்லயும் பிரா(ப்ளமா?)ய்லரா என்று நல்ல விழிப்புணர்வுடன் தரப்பட்டிருந்தது. சபாஷ் !
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

* ‘காலையில் வரும் குதிகால் வலி’ காரணம், சிகிச்சை, அதற்கான பயிற்சிகளை படங்களோடு விளக்கமாக சொல்லப்பட்டிருந்த விதம் சூப்பர்....
- வனஜா, கோவைப்புதூர்.

* பெரும்பான்மையான ஜலதோஷத்துக்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை என்பது சற்று அதிர்ச்சியூட்டும் மருத்துவத் தகவல்தான். அதேபோல் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது பற்றிய எச்சரிக்கையையும் பலருக்கும் புரிந்திருக்கும்.
- ஆர்.பெரியசாமி, கோயமுத்தூர்

* பொய் வலி பற்றிய Psychosomatic confusion, பெண்களுக்கு வரும் சிறுநீரகக் கல் அபாயம், புல்லட் ப்ரூஃப் டயட் என பல வித்தியாசமான கட்டுரைகள் ரசித்து வாசிக்க வைத்தன. அப்பா பெருசா.... அம்மா பெருசா... என்ற உளவியல் ஆராய்ச்சி பலே!
- முத்துக்குமார், திண்டிவனம்.

* ‘கொடுக்காப்புளி’யில் இத்தனை நன்மைகளா என்று ஆச்சரியமாக இருந்தது. ‘தேடிப்பிடிச்சாவது சாப்பிடுங்க’ என்ற தலைப்புக்கேற்ப, இனி தேடிப்பிடித்தாவது சாப்பிடப் போகிறோம். சின்ன வயதில் விளையாட்டாக கொடுக்காப்புளியைச் சாப்பிட்ட நம் பால்ய வயது நினைவுகளுக்கும் அழைத்துப் போனது.
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.