போலியோ சொட்டு மருந்து தினம் எப்போது?!



செய்திகள் வாசிப்பது டாக்டர்
 
நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் தவணையாக ஜனவரி மாதமும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி மாதமும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிந்த நிலையிலும் சொட்டு மருந்து வழங்கும் தினம் பற்றி இன்னும் எந்த முடிவையும் மத்திய அரசு தெளிவாக அறிவிக்காமல் இருக்கிறது.

போலியோ ஒழிப்புக்கான தொடர் நடவடிக்கைகளின் காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் திடீர் மாற்றமாக சில மாதங்களுக்கு முன்பு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தகவல்கள் வந்தன. அது ஜனவரி மாதத்தில் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவராமலேயே உள்ளது.

ஒருவழியாக பிப்ரவரி 3-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதையும் தற்போது மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. போலியோ சொட்டு மருந்து பற்றாக்குறை காரணமாகவே தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று இதுபற்றி பல யூகங்கள் மீடியாக்களில் வெளிவந்தன. ஆனால், பற்றாக்குறை எதுவும் இல்லை என்று இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கிறது மத்திய அரசு.

‘நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும். அதனால்தான் இந்த தாமதம். இதற்கான தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். அப்போது சிறப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்’ என்று இதற்கு விளக்கம் அளித்திருக்கின்றனர் மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள்.

- அஜி