வலி நீக்கும் சிகிச்சை



ட்ரிக்கர் பாய்ன்ட் தெரபி

இன்று வேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்ப உலகில், பெருகிவரும் கேஜெட்டுகள் மனிதனின் அன்றாட தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதாக இருந்தாலும், மனிதனின் அதிமுக்கிய தேவையான உடல் அசைவுகள் குறைவதை நாம் அறிந்திருப்போம். ஏன் உடல் அசைவுகள் குறைந்தால் என்ன ஆகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு, இயன்முறை மருத்துவரான பிசியோதெரபிஸ்ட் மணிவேல் சில அறிவியல் ரீதியான உண்மைளை விளக்குகிறார்.

உடல் இயக்கத்திற்கு முக்கிய கருவிகளாக விளங்குவது தசை நார்களும் அதன் கட்டுக்கோப்பை பராமரிக்கும் திசு முடிச்சுக்கள்(Facias)தான். சமீபத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக, தசை நார்களை மட்டும் உற்று நோக்கிய நிலைமாறி, இப்போது அதன்மேல் பொருந்தி உள்ள ஃபேஷியாக்களின் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம். தசை நார்களும். ஃபேஷியாக்களும் ஒருங்கிணைந்தே மனித இயக்கத்தைத் திறன் உள்ள இயக்கமாக மாற்றி அமைக்கிறது. இதைத்தான் மையோ ஃபேஷியா(Myofacia) என்று அழைக்கிறோம்.

* மையோஃபேஷியா மனித வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக பிரதிபலிக்கிறது. உடல் இயக்கத் தன்மையைக் கொண்டே மையோஃபேஷியாக்களின் ஆக்கமும் செயலும் அமைந்துள்ளது.
* உடல் இயக்க குறைபாடுகளின் தாக்கம், இந்த மையோஃபேஷியாக்களை நேரடியாக பாதிக்கிறது. இதன் விளைவாக, ஆங்காங்கே இறுக்கங்கள் சில மையங்களில் குவியத் தொடங்குகின்றன. இவை எரிமலை குமுறுவது போன்ற செயலாகும். இவற்றையே ‘மையோஃபேஷியல் ட்ரிக்கர் பாய்ன்ட்டுகள்’ என்று குறிப்பிடுகிறோம்.

எதனால் மையோஃபேஷியாக்கள் இறுக்கமடைகின்றன?!

* நீர்ச்சத்து குறைபாடுகள், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் மற்றும் B12 போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள்.

* நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் கொழுப்பு மற்றும் பெண்களின் மெனோபாஸ் நிலை போன்ற மெட்டபாலிக் நோய்கள்.

* திடீரென்று ஏற்படும் உடல் இயக்கங்கள், சிறு சிறு காயங்கள், நுண்ணிய அதிர்வுகள், இயக்கமற்ற நிலை மற்றும் ஒரே வேலையை திரும்பத் திரும்ப நீண்ட நேரம் செய்வது (கம்ப்யூட்டர் மவுஸ் இயக்கம், குனிந்து கொண்டே ஸ்மார்ட் போன் உபயோகம்) அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது மற்றும் தவறாக நிலையில் உட்காருவது அல்லது நிற்பது போன்றவற்றால் இந்த மையோஃபேஷியா என்னும் எரிமலை வெடித்துச் சிதறுகிறது. இச்சிதறலே நாம் அன்றாடம் சந்திக்கும் வலிகள் (கழுத்து, முதுகு தண்டுவடம், தோள்பட்டை, முழங்கால் மற்றும் பாத வலிகள் ஆகும்.

* இதனை உணர மறுத்தோ அல்லது உண்மைகள் மறைக்கப்பட்டோ, மேற்கூறிய வலிகள் அனைத்தையும் ஆர்த்ரைட்டீஸ், ஸ்பாண்டீலோஸிஸ் என பல புனைப் பெயர்களைக் கொண்டு சாயம் பூசப்படுகிறது. இதற்காக செய்யப்படும் இயன்முறை(Physiotherapy) சிகிச்சையே ட்ரிக்கர் பாயின்ட் தெரபியாகும்.

* மையோஃபேஷியா ட்ரிக்கர் பாய்ன்ட்டுகளே வலிகளுக்கு 85 சதவீதம் காரணமாக அமைகிறது என்பதனை சமீபத்திய ஜான்ஸ் அமெரிக்க ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை மருத்துவர்களின் ஆராய்ச்சியின் வாயிலாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. உலகெங்கும் 9 மில்லியன் மக்கள் இந்த மையோஃபேஷியல் ட்ரிக்கர் பாய்ன்ட்டுகளால் அவதிப்படுவதாகவும் இவர்கள் மேற்கொண்ட புள்ளி விவரம் கூறுகிறது.

இயன் மருத்துவர்கள் இந்த மையோபேஷியாவில் ஒளிந்துள்ள ட்ரிக்கர் பாய்ன்டுகளை தொட்டுணர்ந்து கண்டறிவதில் வல்லுநர்கள். மேலும் இம் மையோஃபேஷியாக்களில் ஏற்படும் சிதைவுகள் தோற்ற பாங்கு ஒருங்கின்மையுடன்(Postural Deviations) ஒற்றுப்போவதால் மையோஃபேஷியல் ட்ரிக்கர் பாய்ன்டுகள் பற்றிய முழுமையான
தீர்வு மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

வலி நிவாரண சிகிச்சை

* மையோ பேஷியல் ட்ரிகர் பாய்ண்ட் ரிலீஸ் தெரபி எனும் அதி நவீன சிகிச்சை முறையில் கற்றுத்தேர்ந்த வல்லுநர்கள் ஆன இயன் மருத்துவர்கள் இந்த ட்ரிக்கர் பாய்ன்டுகளை செயலிழக்கச் செய்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட மனித கைகளையே பயன்படுத்துகிறார்கள்.
* தனது கற்றுத்தேர்ந்த கைகளால் மிதமான அழுத்தத்தையும் இழுவிசையும் கொண்டு செய்வதால் இவை சாத்தியமாகிறது.
உடல் இயக்க மறுசீரமைப்பு

* இயன் மருத்துவர்கள் தனிப்பட்ட நபரின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு, அவரவர்க்குத் தகுந்தார்ப் போல் நீட்டுவித்தல் (Flexibility) மற்றும் வலிமை (Strength) க்கான உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பார்கள்.

மறுசுழற்சியை தடுத்தல்

* தனி நபரின் உடல் தோற்றத்திற்கு ஏற்றார்போலும், வேலைச் சூழலை கருத்தில் கொண்டும், அவற்றை மேம்படுத்தி தொடர் வேலை விசைகளின் தாக்கத்தை குறைத்து செயலிழந்த ட்ரிக்கர் பாய்ன்ட்டுகளை மீண்டும் எழாமல் இருக்கச் செய்வதே முழுமையாக பலனைத் தரும். மேலே கூறிய மூன்று பகுதிகளையும் ஒருங்கிணைத்த சிகிச்சையை முன் நடத்தி செல்வதன் மூலம் மையோ ஃபேஷியல் ட்ரிக்கர் பாய்ன்ட்டுகளை இயங்கச் செய்து வலிகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

- என்.ஹரிஹரன்