நான் புற்றுநோயில் இருந்து மீண்டது இப்படித்தான்!



மனிஷா பர்சனல்

நடிகை மனீஷா கொய்ராலா கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததும் நாம் அறிந்த விஷயம்தான். 2018 நவம்பர் 10-ம் தேதியுடன் புற்றுநோயிலிருந்து அவர் மீண்டு, 6 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த அனுபவத்தை Healed என்ற தலைப்பில் தற்போது புத்தகமாக எழுதியிருக்கிறார்.

‘சுய படிப்பினையையும், இனி எப்படி வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்குவது என்ற பாடத்தையும் புற்றுநோய் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இது பலருக்கும் பலனளிக்கும்’ என்று தனது ட்விட்டரிலும் இதுபற்றி பதிவு செய்திருந்தார்.

‘புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும், பாதிக்கப்பட்டால் பயம்கொள்ளாமல் எதிர்கொள்ள வேண்டிய போராட்ட முறைகள் பற்றியும் மனிஷாவின் அனுபவ வார்த்தைகள் புத்தகத்துக்கு வலிமை சேர்க்கின்றன. அமெரிக்காவில் மேற்கொண்ட சிகிச்சை, அங்கு புற்றுநோய் நிபுணர்கள் கவனித்துக் கொண்ட விதம், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியது, பிறகு தன்னைத்தானே மீட்டுக் கொண்ட போராட்டம் என அழுத்தமாக விவரித்திருக்கிறார்.

சாதாரண பெண்ணாக புற்றுநோய் பற்றி உருவான அச்சம், அதன்பிறகு தைரியமாக எதிர்கொண்ட தொடர் போராட்டங்களைப் படிக்கும்போது பிரமிப்பை உண்டு பண்ணுகிறது. மிகவும் ஏற்றத்தாழ்வான ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திலிருந்து மனிஷா எப்படி வெளியே வந்தார் என்பதை வாசிக்கிறவர்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும்.

அவரது பயணம் மூலம், நமக்கு புற்றுநோயைப்பற்றிய அறிமுகம் கொடுக்கிறாரே தவிர நோயைப் பற்றிய பயத்தை விடுத்து, அந்த போராட்டத்திலிருந்து எப்படி வெளி வருவது என ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது’ என்கிறார்கள் புத்தக வெளியீட்டாளர்கள்.

கொல்கத்தாவில் உள்ள Bangla அகாடமியின் AKSB ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், தங்களுக்குப் பிடித்த பாலிவுட் நடிகையினைப் பார்க்க மனிஷாவின் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது தன் ரசிகர்களைப் பார்த்து நெகிழ்ந்த மனிஷா, ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வருடங்களில், தான் சந்தித்த ஏமாற்றங்கள், போராட்டங்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் தான் கற்றுக் கொண்ட பாடங்களைப்பற்றியும் நடிகையாக தான் கடந்து வந்த பாதையையும் பகிர்ந்து கொண்டார்.

‘முதன்முதலில் எனக்குள்ள புற்றுநோயைப்பற்றி அறிந்தபோது, வாழ்க்கையின் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டதை உணர்ந்தேன். என் வேலையையும் அது பாதித்தது. நான் திருமணம் செய்து கொண்டபோது, என் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் புற்றுநோயைப்பற்றி எனக்குத் தெரியாது. அதன்பிறகு புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட ஆரம்பித்தேன்.

எப்படி புற்றுநோயுடன் நடிப்பு வாழ்க்கை, சமூக வாழ்க்கை இரண்டிலும் உங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது? என்று என்னை ஒருவர் கேட்டபோது, கடுமையான உழைப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை என்று அவருக்கு பதிலளித்தேன். இந்த போராட்ட குணம் புற்றுநோயால் மட்டுமே வந்ததல்ல. சினிமாவில் போராடி வெற்றி பெற்ற அனுபவம்தான் இதற்கு பெரிதும் கைகொடுத்தது.

நேபாள அரச வம்சாவளியான கொய்ராலா குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் நடிப்புப்பயணம் சுலபமாக அமைந்துவிடவில்லை. பல போராட்டங்களுக்கிடையில் 1991-ம் ஆண்டில் ‘சவுதகர்’ திரைப்படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்து 1942 : A Love Story, அக்லே ஹும் அக்லே தும், பாம்பே, காமோக்‌ஷி, தில்சே, மன், லஜ்ஜா மற்றும் கம்பெனி என பல படங்களில் நடித்துத்தான் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டேன்.

2012-ல் தற்காலிகமாக நடிப்புக்கு இடைவெளிவிட்டு, 5 வருடங்களுக்குப்பின் டியர் மாயா, சஞ்சூ படங்களில் மீண்டு வந்திருக்கிறேன்’ என்கிற மனிஷாவின் Healed புத்தகம் 2019 ஜனவரி மாதம் வெளி வர இருக்கிறது. இப்புத்தகத்தை மனிஷாவுடன் இணைந்து பிரபல இந்திய எழுத்தாளரான நீலம்குமார் எழுதியிருக்கிறார்.

நமக்கெல்லாம் ஒரு சின்ன தலைவலி என்றாலே, அப்படியே முடங்கிவிடுவோம். ஆனால், எவ்வளவு பெரிய போராட்டத்திலிருந்து மீண்டு வந்ததோடு, தன்னை சமூக நற்பணிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டு, புற்றுநோயாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மனிஷா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்!

- உஷா நாராயணன்