பெண்களின் மருத்துவமனை!



ரவுண்ட்ஸ்

சென்னைவாசிகளுக்கு ‘கோஷா ஆஸ்பத்திரி’ என்று அடையாளம் தெரிந்த கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை, சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்பட்டது இன்னும் பலருக்கும் தெரியாது. குறிப்பாக, ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையுடன் இணைந்து இங்கு அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதும் அவ்வளவாகத் தெரியாது.

எனவே, இதன் சிகிச்சை விபரங்களையும் என்னென்ன மாற்றங்கள் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் நடந்திருக்கிறது என்பதையும் அறிய ஒரு காலை வேளையில் ரவுண்ட்ஸ் வந்தோம். மருத்துவமனையின் இயக்குநர் விஜயா நம்மிடம் பேசத் தொடங்கினார்.

‘‘133 வயதைக் கடந்து இன்றும் மக்கள் சேவையில் மகத்தான பணியாற்றுகிறது கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் எல்லா பிரிவு மருத்துவமும் சிறப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக, இந்த மருத்துவமனை பெண்களின் சிறப்பு மருத்துவமனையாக இருக்கிறது. பெண்கள் பொது மருத்துவம், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவம், குழந்தைகள் பொதுநல மருத்துவம் போன்றவை சிறப்பாக இயங்குகிறது.

இம்மருத்துவமனை துவங்கப்பட்ட காலக்கட்டத்தில் திருவல்லிக்கேணியில் பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டனர். அப்போது மருத்துவமனையில் ஆண்கள் மட்டும் மருத்துவர்களாக இருந்தார்கள். அதனால், சிகிச்சைக்குச் சென்ற பெண்கள் கோஷா(பர்தா) அணிந்து சென்றனர். நாளடைவில் அங்கு பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களும் கோஷா அணிந்திருந்தனர். மருத்துவரிடம் சிகிச்சையின் போதும்கூட அவர்கள் கோஷா அணிந்திருந்தனர். இதன் காரணமாகத்தான் கோஷா மருத்துவமனை என பெயர் வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1885-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் மூர்ட்ஸ் கார்டனில் The Royal Victoria gosha Hospital என்ற பெயரில் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது. 1890-ம் ஆண்டு ராஜா வெங்கடகிரி என்பவரால் பிரிட்டிஷ் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் புதிதாக கட்டப்பட்டு இங்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

1921-ம் ஆண்டு அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டது. 1936-ம் ஆண்டில் இத்துடன் குழந்தைகளுக்கான 52 படுக்கைக்கள் கொண்ட கட்டிடம் Prince of wales என்பவரால் துவங்கப்பட்டு குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1948-ம் ஆண்டுதான் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது.

அதன் பின்பு 1950, 1960 ஆண்டுகளில் காது மூக்கு தொண்டை மருத்துவம், ஆரம்ப சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சைகள், பல் மருத்துவம் இங்கு மருத்துவமனையில் துவங்கப்பட்டது. 1953-ல் துவங்கப்பட்ட குடும்ப நலப்பிரிவு 1971-72 ஆண்டுகளில் அறுவை சிகிச்சை அரங்கத்துடன் மேம்படுத்தப்பட்டு, இன்று வருடத்திற்கு 2000-க்கும் மேலாக குடும்ப நல அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறது. 1986-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சிறப்பு சிறுநீரக நோயியல் துறை நிறுவப்பட்டது. அது இன்றளவும் நவீன சிகிச்சைகளோடு சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

1992-ல் Laparoscopy training center நிறுவப்பட்டது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் முறைகளான VIA/VILI மற்றும் Colposcopy nodal center உருவாக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 25 வயது முதல் 65 வயது வரை கர்ப்பப்பை பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய ஆலோசனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 2013-ம் ஆண்டு அன்றைய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், ‘முதன்மை நிலை தனிச்சிறப்பு மையம்’ எனும் கட்டிடம் திறக்கப்பட்டது. 4 தளங்கள் கொண்ட இக்கட்டிடத்தில் பேறு காலப்பிரிவு, ரத்த வங்கி, அவசர சிகிச்சைப்பிரிவு ஆகியவை இயங்கி வருகிறது. செயற்கை சுவாசக்கருவி, ECG. ECHO, USG machine வசதிகள் கொண்ட தீவிர கண்காணிப்பு பிரிவு 5 படுக்கைகளுடன் உள்ளது.

கர்ப்ப காலத்தில் வலிப்பு வரும் பெண்களுக்கான பிரத்யேக பிரிவு, Eclampsia ward 11 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், ஐம்பது படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் தீவிர கண்காணிப்பு மையம் நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது. குறைமாத குழந்தைகள், மிகவும் எடை குறைந்த குழந்தைகள், காமாலையுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு பிறப்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

2016 முதல் இந்த மருத்துவமனை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவனையோடு இணைத்த பிறகு பல்வேறு பொதுப்பிரிவுகள் இந்த மருத்துவமனையில் இணைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் மயக்க மருந்துத்துறை, சிறுநீரக மருத்துவம், பல் அறுவை சிகிச்சை பிரிவு, நுண்ணுயிரியல், நோயியல், உயிர்வேதியியல், ENT, எலும்பியல், தோல், உளவியல், பொது மருத்துவம், பொது அறுவைச்சிகிச்சை, ஆண்மை சிகிச்சைக்கான மருத்துவம், குழந்தையின்மைக்கான மருத்துவம், மாதவிடாய் பிரச்னை மருத்துவம், கார்டியாலஜி, கர்ப்பப்பை சார்ந்த சிறுநீரக சிகிச்சை போன்றவை துவங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

இன்று 675 படுக்கைகளுடன் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு 7500-க்கும் மேற்பட்ட பிரசவம் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் நோயியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை புரிந்திருக்கிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300க்கும் மேற்பட்டவர்களும் புற நோயாளிகளாக நாள் ஒன்றுக்கு 5000-க்கும் மேற்பட்டவர்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் 222-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். 300-க்கும் மேற்பட்ட  செவிலியர்களை கொண்ட மருத்துவமனையாக இருக்கிறது. ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 118 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

தினமும் 300 உள்நோயாளிகளுக்கு சிறந்த முறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனையில் மகப்பேறு பெண்களுக்கான சிறப்புக்கட்டண வார்டும் செயல்படுகிறது. இதற்காக குறைந்தப்பட்ச கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது’’ என்று கூறிய இயக்குநர் விஜயா அவர்கள் தான் பொறுப்பேற்று இருக்கக்கூடிய கர்ப்பப்பை புற்றுநோய் பிரிவு பற்றியும் கூறினார்.‘25 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு முன் கண்டறியக்கூடிய பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

அவ்வாறு கண்டறியப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை ஆரம்பகால சிகிச்சை, அறுவைசிகிச்சைகள் இலவச காப்பீட்டு திட்டம் மூலம் அளிக்கப்படுகிறது. வருடத்திற்கு 20 பெண்களுக்கு மேல் புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த மருத்துவமனையில் உள் நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு இந்த மருத்துவமனையில் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளாகத்தினுள் அம்மா உணவகம் இருப்பதும் உதவியாக இருக்கிறது. தற்போது இங்கு 8 கோடி ரூபாய் செலவில் செவிலியர்களுக்கான பயிற்சி வளாகம் கட்டப்பட்டு வருகிறது’ என்கிறார்.

நோய்குறியியல் துறை மற்றும் உள்நோயாளி உணவு பொறுப்பாளர் டாக்டர் ராஜவேலு இந்திராவை சந்தித்து இரண்டு துறை பற்றியும் விசாரித்தோம்…
‘‘நோய் குறியியலைப் பொறுத்தளவு Pathology, Micro biology, Bio chemistry போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் உள்நோயாளி புற நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை சிறுநீரகம், மலம், திசு, சளி போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு தீர்வுகள் அளிக்கப்படுகிறது.

வைரஸ், டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கான பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை போன்றவை இங்கு செய்யப்படுகிறது. தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுகிறது. இந்தத் துறையில் 17-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கர்ப்பிணிப் பெண்களின் சிரமத்தை உணர்ந்து அவர்களுடைய பரிசோதனைகள் மட்டும் மருத்துவமனையில் தரைத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
250-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. நோயாளிகளின் தன்மைக்கேற்பவும், அவர்களின் ஊட்டச்சத்து தேவைக்கேற்பவும் தயாரிக்கப்பட்டு அவர்களின் படுக்கைக்கே அனுப்பப்படுகிறது. நீராவி உணவுகள், சாதம், காய்கறிகள், பழங்கள், சுண்டல் வகைகள் போன்றவை தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. உணவு தயாரிக்கும் பணியில் 9-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள்.

இங்கு உணவு தயாரிக்கும் பகுதி மிகவும் பாழடைந்துபோய் இருக்கிறது. இதை புனரமைக்கச் சொல்லி PWD துறைக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். விரைவில் பணிகள் துவங்கப்படும் என நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

அதுபோல முக்கியமாக உணவு தயாரிக்கும் இடத்தில் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கென பாத்ரூம் வசதி, கழிவறை வசதி உடை மாற்றும் அறை என எதுவும் இல்லை. இதனால் இங்கு பணியாற்றும் பெண் பணியாளர்களும் ஆண் பணியாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தப் பிரச்னையும் மேல் இடத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார்.

மருத்துவமனையில் 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிவதாகச் சொன்ன செவிலியர் கண்காணிப்பாளர் நாகஜோதியிடம் பேசினோம்...‘‘செவிலியராகப் பணியாற்றுபவர்கள் 24 மணி நேரமும், எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும். எனவே, யூனிஃபார்ம் போட்டுவிட்டால் மனதளவில், உடலளவில் எங்களை நாங்களே தயார்ப்படுத்தி கொள்வோம்.

வீடு, குடும்பம் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள், அவர்களுடைய உடல் நலன் மற்றும் தேவைகள் ஆகியவற்றை கவனிப்பதைத் தவிர வேறு சிந்தனைகளே வராது. டூட்டி நேரம் முடிந்த பிறகோ அல்லது வீட்டிலிருந்து போன் வரும்போதோதான் குடும்பம் பற்றியே நினைப்போம். அதுவும், இது தாய், சேய் நலம் சம்மந்தப்பட்ட சிகிச்சை கொடுக்க வேண்டிய இடம் என்பதால் தானாகவே கூடுதல் கவனம் வந்துவிடும்.

சில குழந்தைகளை உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வருவார்கள். அதுவும் இரவு நேரப் பணியின்போது இதுபோல் நிறைய சம்பவங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. பச்சிளம் குழந்தைகளைப் பராமரித்தல், இளம் தாய்மார்களுக்குக் கவுன்சிலிங் கொடுத்தல் போன்ற முக்கிய வேலைகள் எங்களுக்கு இருப்பதால் ஒரு செவிலியர் விடுமுறை எடுத்தால் கூட, மொத்தமாகவே வேலை தடைபடும்.

எனவே, மற்றவர்களைக் காப்பாற்றுகிற முக்கியமான பொறுப்பை எங்களுக்கு கொடுத்திருப்பதை உணர்ந்து எங்களுடைய உடல்நலனிலும் நாங்கள் அக்கறை காட்ட வேண்டிய நிலையை உணர்ந்திருக்கிறோம். தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே விடுமுறை எடுப்போம். அப்போது உடன் பணியாற்றும் செவிலியர்கள் கூடுதல் சுமையாக இருந்தாலும் எங்களின் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள்.’’

குழந்தைகள் நல மருத்துவர் சத்திய மூர்த்தியிடம் பேசினோம்...‘‘சென்னையில் உள்ள பழமையான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், தற்போது அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு நவீனமாக்கி உள்ளோம். இங்கு மாதத்தில் சுமார் 500 முதல் 600 குழந்தைகள் வரை பிறக்கின்றன. இதுதவிர, குறைப்பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள், எடை குறைவாக உள்ள குழந்தைகள் உட்பட மூச்சுத்திணறல் பாதிப்பு உடைய சிசுக்கள் என ஏறக்குறைய 200 குழந்தைகளை ஒரு மாதத்தில் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர்.

இங்கு சிகிச்சைக்காக சேர்ந்தவர்களை ‘மேல் சிகிச்சை தேவைப்படுகிறது’ என வேறு எந்த மருத்துவமனைக்கும் பரிந்துரைத்து அனுப்புவதில்லை. அதற்கான அவசியம் இல்லாத அளவுக்கு நவீன வசதிகள் இங்கேயே இருக்கின்றன. அதேபோல் பிரசவத்துக்காக சேர்கிற பெண்களை குழந்தை பிறந்த பிறகு, உடனே டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்புவதும் இல்லை.

பச்சிளம் குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறன், மூளை வளர்ச்சி போன்றவை எல்லாம் சரியாக உள்ளதா என்பதையெல்லாம் நன்றாக பரிசோதித்து, எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் டிஸ்சார்ஜ் செய்கிறோம். அதன் பின்னரும், குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை, அம்மாவையும், குழந்தையையும் வரச்சொல்லி பரிசோதித்து அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை இலவசமாகக் கொடுத்து அனுப்புகிறோம். இங்கு விரைவில் தாய்ப்பால் வங்கியும் தொடங்க உள்ளோம்’’ என்பவர், சிகிச்சை பெற வருபவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த புறநோயாளி தேவியிடம் மருத்துவமனை பற்றி கேட்டோம்...‘‘நான் மார்ச் மாதம் முதல் இந்த மருத்துவமனையில் புறநோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். என்னுடைய முதல் பிரசவம் என்னுடைய அறியாமையால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக்  கொண்டேன்.

தற்போது இந்த மருத்துவமனை பற்றி கேள்விப்பட்டு இங்கு இரண்டாவது குழந்தையை பெற இருக்கிறேன். இங்கு நான் மருத்துவர்கள் வரச்சொல்லும் தேதிகளில் வந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு சுகப்பிரசவத்திற்கான பயிற்சிகள் வழங்கப்படுவது நம்பிக்கை அளிக்கிறது. இங்கு இலவசமாக ஸ்கேன், ரத்தப்பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் தருகிறார்கள். காலையிலேயே மருத்துவர் சிகிச்சைக்காக வரிசையில் அமர்ந்திருக்கிறேன்.’’
உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ரேவதியிடம் பேசினோம்...

‘‘நான் 9 மாத கர்ப்பிணி. திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் சிகிச்சைக்கு வந்திருக்கிறேன். கர்ப்பிணிகளை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். ரத்த அழுத்தத்தை குறைக்கும் விதத்திலும், அதே நேரம் சத்துமிக்கதாகவும் எனக்கு உணவு வழங்குகிறார்கள். உப்பு குறைவான உணவுகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகள் அதிகம் தருகிறார்கள். கழிவறைதான் கொஞ்சம் சுகாதாரக் குறைவாக இருக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.

நோயாளிகளும் பொது கழிவறைதானே என்று அலட்சியமாக நினைக்காமல், நாம் பயன்படுத்துகிறோம், நம்மைப் போல அடுத்தவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.’’கோஷா மருத்துவமனையில் பிறந்து, இப்போது அங்கேயே பிரசவத்துக்காக சேர்ந்திருப்பதாகச் சொல்லிய சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சாந்தலஷ்மியிடம் பேசினோம்...

‘‘கோஷா மருத்துவமனை

ராசியானது. இங்குதான் நான் பிறந்ததாக அப்பா, அம்மா சொல்வார்கள். அந்த சென்டிமென்ட்டுக்காக நான் கர்ப்பமான போதும் பிரசவத்துக்காக இங்கேயே சேர்ந்திருக்கிறேன். 7 மாதத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது. அதனால் குழந்தையால் பால் குடிக்க முடியவில்லை. இங்கே இருக்கிற செவிலியர்கள் டீஸ்பூனில் பால் கொடுக்கவும், பாலாடையில பால் புகட்டவும் சொல்லிக் கொடுத்து உதவி செய்கிறார்கள். இப்போது என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. 2 வாரத்துக்கு இங்கேயே தங்கி சிகிச்சை பெறச் சொல்லி இருக்கிறார்கள்.’’

மருத்துவமனையைச் சுற்றி வந்த போது புற நோயாளிகளுக்காக மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மருத்துவமனையின் இயக்குனர் விஜயாவிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டோம். ‘புறநோயாளிகளுக்கான குடிநீர் வசதி ஏற்கெனவே இருந்தது. ஆனால், பொதுமக்கள்  அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் அகற்றிவிட்டோம். தற்போது மீண்டும் குடிநீர் வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

- விஜயகுமார், க.இளஞ்சேரன் படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்