ஹெல்த் காலண்டர்சிறப்பு தினங்கள்… சிறப்பு கட்டுரைகள்…

சர்வதேச நோய் தடுப்பு தினம் - நவம்பர் 10

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10-ம் தேதி சர்வதேச நோய்த் தடுப்பு தினம் (World Immunization Day) கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நோய்த்தடுப்பு முறை நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதன் மூலம் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான மரணங்கள் ஆண்டுதோறும் தவிர்க்கப்படுகின்றன. அதேநேரத்தில் 1 கோடியே 87 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படையான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுவதில்லை என்ற கவலை அளிக்கும் புள்ளிவிவரங்களும் உண்டு.

நோய்த் தடுப்பு மருந்துநோய்த் தடுப்பு மருந்தானது ஒரு வகை உயிரியல் தயாரிப்பாக உள்ளது. இந்த மருந்து ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு எதிரான உடலின் நோய்த் தடுப்பாற்றலை வலுப்படுத்தி, அவரை நோயிலிருந்தும், தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தின் அவசியம்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழியாக நோய்த் தடுப்பாற்றல்கிடைக்கிறது. இவ்வாறு குழந்தையின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைந்து, பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்களின் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் குழந்தைக்கு ஓரிரு வேளை தடுப்பு மருந்தை அளிக்கத் தவறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பு மருந்து அட்டவணையைப் பின்பற்றி அதை கொடுக்கலாம். இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையைப் பாதுகாப்பதோடு, பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கலாம்.

நோய்த் தடுப்பு திட்டம்
உலகளவிலான நோய்த்தடுப்பு திட்டம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் 65 சதவிகித குழந்தைகளுக்கே முதல் ஆண்டுக்குள் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு டிசம்பர் 2014-ல் இந்திரதனுஷ் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அனைத்துத் தடுப்பு மருந்துகளையும் அளிப்பதே இதன் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் தடுப்பு மருந்துகளும் அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா?

தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவையே. ஒரு சிலருக்கே வீக்கம், சிவப்பாதல், சிறு காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இந்த பிரச்னைகள் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும். மருத்துவரின் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளால் இந்த பக்க விளைவுகளை சரிசெய்யலாம்.
நோயாளிகளின் கவனத்திற்கு...

* பாதுகாப்பற்ற முறையில் ஊசி மருந்துகளை எடுப்பது தங்கள் உடல்நலத்துக்கு ஆபத்தானது என்பதை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
* மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது ஊசிமருந்து ஏற்றும் நபர்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு வழங்குபவர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும்போது அது குறித்து நோயாளிகளுக்கு எச்சரிக்கை அளிக்க வேண்டும்.
* எந்த ஒரு தடுப்பு மருந்து எடுக்கும் போதும் மருத்துவரைக் கலந்தாலோசித்து அவருடைய ஆலோசனைப்படி தடுப்பு மருந்து அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். இந்த அட்டவணையில் பதிவு செய்து வைப்பதோடு, ஒவ்வொரு முறையும் தடுப்பு மருந்து எடுக்கும் போதும் அதை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

சர்வதேச நிமோனியா தினம் - நவம்பர் 12

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதி சர்வதேச நிமோனியா தினம் (World Pneumonia Day) கடைபிடிக்கப்படுகிறது.
நுரையீரல் அழற்சி என்கிற நிமோனியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அல்லது அந்த நோய்க்கான தடுப்பு, சிகிச்சை மற்றும் எதிர் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கம்.

நோய்க்கான ஆபத்துக் காரணிகள்

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா தாக்கும் ஆபத்து அதிகம். இந்த நோய்த் தொற்றை எதிர்க்கும் அளவுக்கு அவர்களது நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் வளர்ச்சி அடையாததே அதற்கு காரணம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் நோய்களில் ஒன்றாக நிமோனியா உள்ளது.

நோய்த் தடுப்பாற்றல் குறைவாக உள்ள எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்புமாற்று சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய்க்கு வேதிச்சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக ஊக்க மருந்து உட்கொண்டவர்களுக்கும் நிமோனியா ஏற்படும் ஆபத்து உள்ளது.

அறிகுறிகள்

வேகமாகவும், மேலோட்டமானதாகவும் சுவாசம் இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், வேகமான இதயத்துடிப்பு, காய்ச்சல், வியர்வையும் நடுக்கமும்,பசி இழப்பு, நெஞ்சு வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள். இருமும்போது ரத்தம் வருவது, தலைவலி, களைப்பு, குமட்டல், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் ஏற்படுகிறது.

நாம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்

* முற்றிலும் தாய்ப்பால் ஊட்டியும், போதுமான கூடுதல் உணவு அளித்தும் குழந்தைகளை நிமோனியாவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
* தடுப்பூசி, சோப்பால் கை கழுவுதல், வீட்டுக் காற்று மாசைக் குறைத்தல், எச்.ஐ.வி. தடுப்பு, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்துள்ள குழந்தைகளுக்கு கோட்ரிமோக்சாசோல் நோய்த்தடுப்பு ஆகியவற்றின் மூலம் நிமோனியாவைத் தடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு நோயுற்ற குழந்தைக்கும் சரியான சிகிச்சை கிடைக்க வேண்டும். அந்த சிகிச்சையை ஒரு சுகாதாரப் பணியாளர் மூலமாவோ அல்லது நோய் கடுமையாக இருந்தால் சுகாதார நிலையம் மூலமாகவோ கொடுக்க வேண்டும்.

நிமோனியாவைத் தடுக்க சில ஆலோசனைகள்

* இருமும்போதோ அல்லது தும்மும்போதோ கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
* புகைப்பழக்கத்தால் நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் வைரசுகளையும் எதிர்த்துப் போராடும் உடலின் இயற்கையான பாதுகாப்பு சிதைக்கப்படுகிறது. எனவே, புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

சர்வதேச நீரிழிவு நோய் தினம் - நவம்பர் 14

கணைய நீரை (Insulin) இணைந்து கண்டுபிடித்தவரும் அதை முதன் முதலில் மனிதர்களுக்குப் பயன்படுத்தியவருமான  சர் பிரட்ரிக் பேண்டிங் (Sir Frederick Banting) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் நாள் சர்வதேச நீரிழிவு நோய் தினமாக (World Diabetes Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நீரிழிவு நோயின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தித் தடுப்பு மற்றும் மருத்துவம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.

நீரிழிவு பற்றிய உண்மைகள்

உலகத்தின் நீரிழிவு நோய்த் தலைநகரமாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவில் 2015-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6.92 கோடியாக உள்ளது. நோய் கண்டறியாது 3.6 கோடி மக்கள் வாழ்கின்றனர். பொதுவாக 90 முதல் 95 சதவிகிதம் போ் Type 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் அதிகரித்தல், பசி அதிகரித்தல், பலவீனம், எடையும் தசையும் குறைதல், பார்வை மங்குதல், பாதங்களில் உணர்வின்மையும் கூச்சமும், புண் அல்லது கீறல் மெதுவாக ஆறுதல் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாக உள்ளது.

நோய் தடுப்பு முறைகள்

டைப் 1 நீரிழிவைத் தடுக்க முடியாது. ஆனால் டைப் 2 நீரிழிவை வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலம் தடுக்க முடியும்.
டைப் 2 நீரிழிவைத் தடுப்பதற்கான ஆலோசனைகள்

* பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* உணவில் எண்ணெய் பயன்பாடுகளைக் குறைத்துக் கொள்வதோடு, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளைப் பொரிப்பதை விட ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
* ஒரே நேரத்தில் அதிக உணவை உண்பதைவிட 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் குறைந்த அளவு உணவை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை, மது, கொழுப்புள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
* ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுவது அவசியம்.


சர்வதேச நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் நவம்பர் 13-19

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13 முதல் 19 வரை சர்வதேச நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் (World Antibiotic Awareness Week)கடைபிடிக்கப்படுகிறது.ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்னர் அதுகுறித்த நிபுணத்துவம் வாய்ந்த சுகாதார அலுவலரிடம் ஆலோசனை பெறுவது மற்றும் இந்த மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தொற்றுநோய் ஏற்படும் விதம்

நுண்ணுயிரிகளால் உண்டாகும் தொற்றுநோய்களை, அது ஏற்படும் விதத்தின் அடிப்படையில் 2 வகைகளாகப் பிரிக்கலாம். மக்கள் தான் சார்ந்துள்ள பல்வேறு சுற்றுச்சூழலிலிருந்து ஏதாவதொரு தொற்றுநோய்க் கிருமியால் பாதிக்கப்படுவதை Community Aquired Infection என்கிறோம்.
இதற்கு உதாரணமாக நிமோனியா, இன்ஃபுளூயன்சா போன்ற தொற்றுகளை சொல்லலாம்.

தடுப்பூசி அவசியம்

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும்போது நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கு மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த நோய்த்தடுப்பு மருந்துகள் நமது உடலின் நோய்த் தடுப்பாற்றலை வலுப்படுத்துவதோடு, நுண்ணுயிர்  தொற்றிலிருந்தும், நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. எனவே தடுப்பூசிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.
ஆன்டிபயாடிக் எதிர்ப்பு

பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்பட்டு அதன் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அதனால் உண்டாகும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சில பாக்டீரியாக்கள் தன்னை உருமாற்றிக்கொள்வதோடு, ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக தக்கவைத்துக்கொண்டு வளரும் திறனைப் பெற்று வருகிறது. இதையே ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் (Antibiotic Resistance Bacteria) என்று அழைக்கிறோம்.

உடலில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு அதிகரிக்கும்போது சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகளால் செயல்பட முடியாமல் போகிறது. இதனால் அதிக சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளை சரியான முறையில் தேவைப்படும்போது மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பிரச்னையைத் தடுக்கலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியவை

* பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள்   வாய்வழியாக உட்கொள்ளும்படி கொடுக்கப்படுகிறது. ஆனால், சில வேளைகளில் நரம்பு மற்றும் தசை வழியாக கொடுக்கப்படும். சில மருந்துகளை தோல் மேல் பூசுவதும் உண்டு.

* வெவ்வேறு வகையான தொற்றுக்கு சிகிச்சையளிக்க வெவ்வேறு வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளன.

* பொதுவாக சுவாச மண்டலத் தொற்றுகள், சளி, சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகின்றன. இதுபோன்று வைரஸால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.

* தேவையில்லாதபோது ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதால் அவை பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனை இழக்கின்றன. அந்த மருந்துகளை எதிர்த்து தன்னை தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றலை பாக்டீரியாக்கள் வளர்த்துக் கொள்வதால், அவற்றைக் கொல்ல முடியாமல் போய்விடுகிறது. இதனால் அந்த பாக்டீரியாக்கள் கடுமையான தொற்றுகளை உருவாக்கி உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அவற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது.

எனவே, இந்த மருந்துகள் பற்றிய சரியான புரிதலை அனைவரிடமும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம். பின்வரும் ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

* சரியான முறையில், சரியான அளவு, சரியான நேரத்தில மருத்துவர் பரிந்துரைத்தவாறே ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நாட்கள் முடிவடையும் வரை அம்மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தக் கூடாது.

* அடுத்த முறை நோய் தாக்கும்போது அதே ஆன்டிபயாடிக் மருந்தை பயன்படுத்த வேண்டாம்.

* ஒரு நோய்க்காக இன்னொருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அதே நோய்க்கு நாம் உட்கொள்ளக் கூடாது.

* பாக்டீரியாவைத் தவிர வைரஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கக் கூடாது.

*தவறுதலாக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்தால் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது சற்று கடினமாகி விடுகிறது. இந்த மருந்துகளை தேவைப்படும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் அந்த மருந்துகள் பாக்டீரியாக்களின் தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுடையவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் - நவம்பர்

நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக (Lung Cancer Awareness Month) அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் என்பது அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படுகிறது.

அதிகளவு புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது நுரையீரலை பாதித்து நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட ரேடான் வாயு, காற்று மாசுபாடு, மரபணுக்களில் இருந்து பல காரணங்கள் உள்ளது. ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்துவிட்டால் இதனை குணப்படுத்துவது எளிது. எனவே, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் அதன் வகைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகளை தெரிந்துகொள்வது இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்கு உதவியாக இருக்கும்.

நோய் அறிகுறிகள்

தொடர்ந்து இருமல், இருமலின்போது ரத்தம் வருதல், மார்புவலி, திடீரென ஏற்படும் எடை இழப்பு அல்லது அதிகளவு சோர்வு, சுவாசக் கோளாறுகள் போன்ற ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மற்ற நோய்களுக்காக கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டிருப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெண்களை பொறுத்தவரையில் மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சமையலறை புகைகூட நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் சமையலறையில் புகையில் கஷ்டப்படுகின்றனர். குறைந்த காற்றோட்டம் கொண்ட சூழ்நிலையில் சமைக்கும்போது அந்த எரிபொருளின் புகை நுரையீரலை பாதிக்கக்கூடும். இதனால் பாதிக்கப்படுவதில் அதிகம்பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர். குறிப்பாக சீனாவின் கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொகுப்பு: க.கதிரவன்