முதுமையை முடக்கும் மன அழுத்தம்



வணக்கம் சீனியர்

வயோதிக காலத்தில் உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், மனதை பாதுகாப்பாக வைப்பதும் அதிமுக்கியமாக கருதப்படுகிறது. ஏனெனில், முதியவர்கள் நெருங்கிய உறவுகள் இல்லாமல் தனிமைப்படுத்தப்படும்போது டிப்ரெஷன் என்கிற மன அழுத்தம் அவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாக பலவீனப்படுத்தும். இதுபோல் முதுமையில் வரும் மன அழுத்தத்தை சமாளித்து, அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை விவரிக்கிறார் உளவியல் ஆலோசகர் கீர்த்தி பாய்.

‘‘இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரைவிட முதுமைப் பருவத்தினர்தான் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உலக சுகாதார மையத்தின் அறிக்கை ஒன்றும் இதுபற்றி தெளிவாக தெரிவித்திருக்கிறது. தனிமை, உடல்நல பாதிப்புகள், சமூக அந்தஸ்து குறைவது போன்ற தோற்றம் என இதற்கு பல காரணங்களை கூறலாம். இவற்றில் வயோதிகக் காலத்தில் அவர்களுக்கு யாரும் ஆதரவாக இல்லை என்பதுதான்
மன அழுத்தம் ஏற்பட முதன்மையான காரணமாக அறியப்படுகிறது.

தங்கள் வயதையொத்த நண்பர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் இல்லாமல் பலர் இருப்பார்கள் அல்லது வெளியூரிலோ, வெளிநாடுகளிலோ நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். முதியவர்கள் சொல்வதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அது அவர்களது வார்த்தையாகவோ அல்லது அவர்களது உணர்வுகளாகவோ இருக்கலாம். நண்பர்கள், உறவினர்கள் என யாரும் இல்லாமல் தினசரிகளை அவர்களால் கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியாது.

வயோதிகம் காரணமாக ஆண், பெண் என்ற இருபாலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். இதனைப் பல்வேறு அறிகுறிகளால் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஞாபக மறதி, தூக்கமின்மை, பசியின்மை, களைப்பாக உணர்தல், தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களுடன் பேசாமல் இருத்தல், தனிமைப்படுத்தி கொள்ளுதல் இவை அனைத்தும் முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற மன அழுத்தத்திற்கான அறிகுறிகளாக எடுத்து கொள்ளலாம்.

அதிலும் பெண்களைவிட ஆண்கள்தான் முதுமைப் பருவத்தில் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கணவன், தந்தை, அதிகாரி என்ற நிலையில் இருந்து, அவர்கள் தங்களை எந்தக் காரணத்திற்காகவும் மாற்றிக் கொள்வது இல்லை. குடும்பத்திலும், அலுவலகத்திலும் Commanding position என்ற நிலையிலேயே இருக்க விரும்புகின்றனர். மேலும், இவர்களுக்குப் பொறுப்புகள் குறைவு. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகம். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், இவர்கள் ஒருவித ஈடுபாட்டுடன் அதனை மேற்கொள்வார்கள். அது மட்டுமில்லாமல், வளைந்து கொடுக்கும் தன்மையும் பெண்களிடம் காணப்படும்.

கிராமப்பகுதிகளில் வாழ்கிற முதியவர்கள் ஊர் வேலை, கோயில் விழாக்கள் மற்றும் பூஜை முதலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனத் தங்களை எந்த நேரமும் பிஸியாக வைத்துக் கொள்கின்றனர். ஆனால், நகரங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, கிராமத்து முதியவர்களைவிட, சென்னை போன்ற மாநகரங்களில் வசித்து வரும் வயோதிகர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கு குடும்பத்தில் சில வேலைகளைச் செய்யும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். உதாரணத்துக்கு, வங்கிகளுக்குச் சென்று வருவது, கரண்ட் பில் கட்டுவது, பள்ளிக்கூடம் சென்று வரும் பேரன், பேத்திகளைக் கவனித்து கொள்வது, தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட்டை நிர்வகித்தல், தோட்டப் பராமரிப்பு முதலான வேலைகளைச் செய்ய சொல்லலாம்.

எந்த வேலையை முதியவர்களைச் செய்ய சொன்னாலும், அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். மற்ற குடும்ப உறுப்பினர்கள், தங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பற்றியும் மூத்த குடிமக்களிடம் ஆலோசனை கேட்கலாம். இவ்வாறு செய்து வருவதால், முதுமைப் பருவத்தில் ஏற்படுகிற மன அழுத்தத்தைத் தடுக்கலாம்.

உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சை இருப்பதைப்போன்று மனநல குறைபாடுகளை விரட்டவும் சிகிச்சைகள் உள்ளன. எனவே, பிரச்னை இருக்கிறது என்பதை உணர்ந்து உளவியல் ஆலோசகரிடம் முதலில் செல்ல வேண்டும். அப்போதுதான் மன அழுத்தம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். அதன் பின்னர் முதியவருக்கு வந்து இருப்பது மன அழுத்தமா, மறதி நோயா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மன அழுத்தம் என்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மொத்த குடும்பத்துக்குமான ஆலோசனையாக Family counseling செய்துகொள்வது நல்லது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு CBT(Cognitive Behavioral Therapy) கொடுப்பதும் நல்லது. இந்த சிகிச்சைகளை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை மேற்கொள்ளலாம். வயோதிக காலத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அவரவர் உடல்நிலை அடிப்படையில் இந்த சிகிச்சைமுறைகள் அமையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

முதுமைப் பருவத்தினர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை எந்தக் காரணத்திற்காகவும் தவிர்க்க முடியாது. வயதாக வயதாக தங்களுடைய பாத்திரம் மாறுபடுவதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் தந்தையாகவே இருக்க முடியாது, எப்போதும் மேலதிகாரியாகவே இருக்க முடியாது போன்ற நடைமுறை உண்மைகளையும் உணர வேண்டும். முதியவர்கள் தங்கள் வயதை ஒத்தவர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வதும், உரையாடுவதும் நல்ல பலன் தரும்.’’

- விஜயகுமார்