எழும்பூரின் இன்னோர் அடையாளம்!ரவுண்ட்ஸ்

தமிழகத்தின் மிகவும் பிரபலமான மருத்துவமனைகளில், சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனையும் ஒன்று. குழந்தைகளுக்கான பிரத்யேக அரசு மருத்துவமனையான இது, ‘பேபி ஹாஸ்பிட்டல்’ என்ற செல்லப் பெயரால் பிரசித்தி பெற்றது. மருத்துவமனையுடன் குழந்தைகள் நல ஆராய்ச்சி மையமாகவும் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது.

எழும்பூரின் அடையாளமாக ரயில்வே நிலையம் இருப்பதைப் போல, எழும்பூரின் இன்னொரு அடையாளமாக இருக்கும் பேபி ஹாஸ்பிட்டலை ரவுண்ட்ஸ் வந்தோம்.மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளரான டாக்டர். ஏ.டி.அரசர் சீராளர் மருத்துவமனை பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாய் சேய் நல மருத்துவமனை என பொதுமக்கள் நினைத்துக் கொள்கின்றனர். அது தவறு. எங்களுடையது குழந்தைகள் நல மருத்துவமனை.1948-ம் ஆண்டில் சென்னை பூங்கா நகரில், மெட்ராஸ் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவமனையில் (தற்போதைய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை) ஒரு பிரிவாக செயல்பட்டு வந்தது. அப்போது, குழந்தைகளுக்காக ஒரு வார்டு மட்டும்தான் இருந்தது.

அதன் பிறகு குழந்தைப் பருவத்தினரின் முக்கியத்துவம் உணர்ந்து, 1964-ம் ஆண்டு இந்த இடத்தில் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மருத்துவமனை ஒன்றை கட்டும் வகையில் அரசாணை கொண்டு வந்தது. அதன்படி, மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால், 1968-ம் வருடம் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது 250 படுக்கைகள் மட்டும் இங்கு இருந்தது. அதன் பின்னர், படிப்படியாக வளர்ச்சி பெற்ற இந்த மருத்துவமனையில் தற்போது, சிகிச்சை பெற வரும் குழந்தைகளுக்காக 837 படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சுமார் 50 வருடங்களாக குழந்தைகளுக்கான பொது மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை, தற்போது பல சிறப்பு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நரம்பியல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை, மூளை  இதயம் மற்றும் இதய அறுவை சிகிச்சை, எலும்பியல், நுரையீரல், குடலியல், சிறுநீரகவியல் என பல்வேறு துறைகள் இங்கு அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, நாளமில்லா சுரப்பி முதலான உட்பிரிவுகளும் இங்கு செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக வாழ்க்கைமுறை மாற்றங்களால் சிறுவர், சிறுமியரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் அவல நிலை நீடிக்கிறது. இந்தக் குறைபாட்டைச் சரி செய்ய நீரிழிவு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் எங்களுடைய மருத்துவமனையில் மரபு சார்ந்த நோய்களுக்கான பிரிவு(Rare Genetic Disorder Ward And Preneue Diagnostics Centre) ஆரம்பிக்கப்பட்டது. இதில், குழந்தைகள் பிறப்பதற்கு முன்னால் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே, அதற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்கள் உதவியுடன் சிறப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர், அப்பரிசோதனைகளின் அடிப்படையில், தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலேயே இங்குதான் மிகச்சிறந்த, பெரிய பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மையம் உள்ளது. இதில் அனுபவமிக்க டாக்டர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைப் பிரிவும் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் பிறந்து ஒருநாள் ஆன சிசுவிற்கும் ஹார்ட் சர்ஜரி செய்யும்வகையில் மாடுலர் தியேட்டரும் உள்ளது. தலைசிறந்த மருத்துவர்களும் இருக்கின்றனர்.

சராசரியாக ஒருநாளில் 1,000 முதல் 2,000 குழந்தைகள் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இவர்களில் 40% குழந்தைகள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல சமயங்களில் 873  படுக்கையிலும் குழந்தைகளை அட்மிட் செய்யும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்.

TAEI-ஐ தொடர்ந்து, இங்கே சிகிச்சை பெற பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்காக, District Early Intervention Centre(DEIC) செயல்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில், மாநிலங்களில் தகுந்த சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்படும் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து, குணப்படுத்தி அனுப்புகிறோம். அது மட்டுமில்லாமல், RBSK என்ற புரோகிராம் மூலம் இந்தியா முழுவதும் இருந்து வருகிற குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சைகள் கிடைக்க வழி செய்கிறோம்.

குழந்தைகளுக்கான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வரும் இங்கு, இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளராக ஒருவர், ரெசிடென்ஷியல் மெடிக்கல் ஆபீசர் ஒருவர், 2 உதவி ரெசிடென்ஷியல் மெடிக்கல் ஆபீசர், சீனியர் புரொபஸர்- 12 அசோசியேட் புரொபஸர்-17, அசிஸ்டென்ட் புரொபஸர்-29, நர்சிங் சூப்ரிடென்ட்-17, நர்ஸ்-230 என ஏராளமானோர் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நிறைய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வரும் பெற்றோர்கள் நேரத்தைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நலவாழ்வு தொடர்பான செய்திகள், குறும்படங்கள் LED டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன. வளரிளம் பருவத்தினருக்கான(12-18 வயது) பிரிவையும், Mobile Human Milk Bank-ஐயும் ஆரம்பிக்க திட்டமிட்டு உள்ளோம்’’ என்கிறார்.

குழந்தைகள் நல மருத்துவர் கராமத் ‘‘கடந்த 9 வருடங்களாக குழந்தைகள் நல பொதுப்பிரிவில்தான் வேலை செய்து வருகிறேன். எத்தனையோ சிறப்புப் பிரிவுகள் மருத்துவமனையில் இருந்தாலும், OP என்கிற இந்த புறநோயாளி வார்டுதான் ரொம்ப முக்கியம். ஏனென்றால், எவ்வளவு ஆபத்தான நிலையில் குழந்தைகள் இருந்தாலும், பொதுப்பிரிவான இந்த OP வார்டுக்கு வந்த பிறகுதான் அவர்கள் எந்த ஸ்பெஷல் வார்டுக்குப் போக வேண்டும் என்பது முடிவாகும். பொதுப்பிரிவில்தான் எல்லாவிதமான அவசர சிகிச்சைகளும் கிடைக்கும்.

டெங்கு, ஃபுளு, நிமோனியா, டைஃபாய்டு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் எதுவாக இருந்தாலும், முதலில் இங்குதான் கொண்டு வருவார்கள்.
ஒரு நாளில் சராசரியாக 1000 முதல் 1,800 குழந்தைகள் புறநோயாளியாக வருகிற சூழலில், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள், ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் யார் யார் எனக் கண்டறிவதுதான் எங்களுக்கு முக்கியம். இதைச் சரியாக செய்தால், மருத்துவத்தில் தாமதத்தால் ஏற்படுகிற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்’’ என்கிறார்.

கங்காதரன் (நலக்கல்வியாளர் & மக்கள் தொடர்பு அதிகாரி)

‘‘ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படுகிற நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, ரத்தசோகை முதலான பிரச்னைகளை சரி செய்ய 2 உணவியல் நிபுணரின் மேற்பார்வையில் தரமாக மருந்துகளும், உணவுகளும் தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்தால் இந்த வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இங்கு அவர்களுடைய உடல் எடை, உயரம் சரி பார்க்கப்படும்.

வயதுக்கு ஏற்ற வளர்ச்சி, எடை இல்லையென்றால் அக்குழந்தைகளை அட்மிட் செய்து கலோரி அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களைக் கொடுத்து கண்காணிப்போம். அவர்கள் இயல்பான நிலையை அடைந்த பிறகு, அவர்களை டிஸ்சார்ஜ் பண்ணி தேவைப்படும் வார்டுக்கு அனுப்பி வைப்போம். இந்த மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கும், அவர்கள் உடன் இருக்கும் தாய்மார்களுக்கும் தேவையான உடைகளை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். இதை ‘ஆத்திச்சூடி’ என்கிற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஓர் ஆண்டாக செயல்படுத்தி வருகிறோம்.’’

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான ஷர்மிளா.‘‘பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் துறையும் இங்கு இயங்கி வருகிறது.  இந்த துறையில் 4 மருத்துவர்களை கொண்டு 14-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த துறையில் பிறந்த குழந்தைகளை அவர்களுடைய அனைத்து நலன்களும் பரிசோதித்து அது தொடர்பான துறைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் வளர்ச்சி, கண், காது, மூக்கு, தொண்டை போன்ற  உறுப்புகளின் குறைபாடுகள், மூச்சு திறன், இதயம், பிறப்பு உறுப்பு பாதிப்பு போன்ற அனைத்து உறுப்புகளையும் பரிசோதித்து முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உள்நோயாளிகளாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 குழந்தைகள் இதய அறுவைசிகிச்சைப் பிரிவு, இ.என்.டி பிரிவு, கண் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், பல் சிகிச்சை பிரிவு, ஆட்டிசம் குழந்தைகள் நல பிரிவு, எலும்பு போன்ற பிரிவுகள் இந்த மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அந்தந்த பிரிவுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெறுகிறார்கள்.’’இயற்கை மற்றும் யோகா மருத்துவர் லதா‘‘இயற்கை மற்றும் யோகா சிகிச்சை கடந்த 10 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கும் அவர்கள் உடனிருக்கும் தாய்மார்களுக்கும் யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, வாழ்வியல் முறை கற்பித்தல், உணவு பழக்க வழக்கம் குழந்தை வளர்ப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.தேவைப்படுபவர்களுக்கு இயற்கை முறையிலான சிகிச்சையையும் அளிக்கிறோம்.’’

குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் ஜெய்கரன்‘‘பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காப்பீட்டு
திட்டம் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை அளித்து வருகிறோம். இதற்காகவே இந்த மருத்துவமனையில் குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவு சிறப்பாக இயங்குகிறது. இதயத்தின் கோளாறுகள், குறைபாடுகளை கண்டறிந்து சிறப்பான அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை
பெறுகிறார்கள். இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்குள் அவர்களுடைய இதயம் தொடர்பான பாதிப்புக்கு சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். குழந்தைகள் இதய சிகிச்சைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வசதி இல்லை. விரைவில் துவங்கப்படும்.’’

பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர் கமலரத்தினம்‘‘இந்த பிரிவில்குழந்தை பிறந்து 28 நாட்களாகி குறைபாடு உள்ள குழந்தைகளையும், குறைமாத குழந்தைகளையும், எடை குறைந்த குழந்தைகளையும் உள்நோயாளிகளாக வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள் கொண்ட படுக்கைகள் இங்கு உள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கான மூச்சுவிடுதல் திறன், மூளை கோளாறு, உறுப்புகள் செயல்பாடு, இதய பாதிப்பு போன்றவைகளுக்கு இங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிரிவில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறுகிறார்கள்.’’

தாய்ப்பால் வங்கியின் செயல்பாடுகள் பற்றி செவிலியரான சாந்தி விளக்குகிறார்.‘‘2016-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன்முதலில் உருவான தாய்ப்பால் வங்கி இதுவே ஆகும். மாதத்திற்கு 98-க்கும் மேற்பட்ட தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் தானமாக பெறப்படுகிறது. இந்த தாய்ப்பால், தாய் இல்லாத குழந்தைகளுக்கும், தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும், தாய்ப்பால் பற்றாக்குறையான தாய்மார்களின் குழந்தைகளுக்கும் இந்த தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

இங்கு பெறப்படும் தாய்ப்பால் இங்கு உள்ள தாய்ப்பால் சுத்திகரிக்கும் அதிநவீன கருவிகள் கொண்டு தாய்ப்பால் முறையாக பதப்படுத்தி அவற்றை சுத்தப்படுத்தி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் வழங்கப்படுகிறது. தாய்ப்பால் வங்கியில் நாள் ஒன்றுக்கு 10 தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்குகிறார்கள்’’.

விஜயலட்சுமி செவிலியர் பொறுப்பாளர் ‘‘கடந்த 30 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறேன். இந்த மருத்துவமனையில் கடந்த மூன்றாண்டுகளாக பணியாற்றுகிறேன். தற்போது செவிலியர்கள் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறேன். இந்த மருத்துவமனையில் 232 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஷிஃப்ட் முறையில் அவர்கள் பணிகள் தொடர்கிறது.

இங்கு பணியாற்றும் செவிலியர்கள் பிறந்த குழந்தைகளின் தாயாகத்தான் கவனித்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகள் என இரு தரப்பு குழந்தைகளையும் அரவணைத்து பாதுகாக்கும் முறையில் இங்கு உள்ள செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தைகளைத் தூக்கும் விதம், தாய்ப்பால் கொடுக்கும் விதம், அவர்களை அணுகும்விதம் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.’’
நோய்க்குறியியல் துறை மருத்துவர் பாப்பாத்தி‘‘குழந்தைகளுக்கு உண்டான அனைத்து நோய்களையும் ரத்தம் மூலமாகவும், அவர்களுடைய சதை மூலமாகவும், குழந்தைகளின் கட்டிகள் மூலமாகவும் கண்டறியக்கூடிய அனைத்துவிதமான தொழில்நுட்பக் கருவிகளும், வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அந்த பாதிப்பின் உண்மை நிலையை கண்டறிவதற்கு குழந்தையுடைய பாதிக்கப்பட்ட பகுதியை அனுப்பி உடனே அதன் முடிவுகளை பெற முடியும். அந்த அளவிற்கு இந்த மருத்துவமனையில்  அதிநவீன தொழில் நுட்பக்கருவிகளைக் கொண்டு நோய் குறியியல் துறை சிறப்பாக இயங்குகிறது.’’

உணவு வசதி ஏற்படுத்தப்படுமா?!

அம்பத்தூரில் இருந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் ஜெயயிடம் பேசினோம்...‘‘எனக்கு முதல் பிரசவம் இது. சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில்தான் பிரசவம் ஆனது.  குழந்தை குறைமாதத்தில் பிறந்து சீரியஸான நிலையில் இருந்ததால், இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பச்சிளம் குழந்தைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்ததால் இன்று ஆரோக்கியமாக உள்ளது. இந்த மருத்துவமனையில் குழந்தையை பாதுகாப்பதற்காக எனக்கும் படுக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு குறையாக உணவு வசதி மட்டும் இங்கு இல்லை. வெளியிலோ அல்லது வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டோதான் சாப்பிடுகிறேன். இங்குள்ள தாய்மார்களுக்கு உணவு வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்’’ என்கிறார்.

சரி செய்யப்பட வேண்டிய குறைகள்

பரந்த நிலப்பரப்பில் விசாலமாக இந்த மருத்துவமனை பசுமையான சூழலில் அமைக்கப்பட்டு இருந்தாலும், ஒன்றிரண்டு குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மருந்து, மாத்திரைகள் வைக்கப்படுகிற ஸ்டோர் ரூம் போதுமான இடம் இல்லாத காரணத்தால், குப்பை கூளமாக காட்சி தருகிறது.
சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் சிறுநீர், மலம் மற்றும் சளி போன்றவற்றின் சாம்பிள் டெஸ்ட் செய்யப்படும் பயோ-கெமிஸ்ட்ரி லேப், மாலிகுலர் பத்லாஜி லேப் போன்ற இடங்களில் விலையுயர்ந்த மைக்ரோஸ்கோப், கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த இடங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை. யார் வேண்டுமானாலும் எப்போதும் வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்ற நிலை உள்ளது.

- விஜயகுமார், க.இளஞ்சேரன்

படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்