வரும்... ஆனா வராது....இன்னும் முடியாத எய்ம்ஸ் குழப்பம்!



நாட்டு நடப்பு

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். மத்திய அரசு அதற்கு உத்தரவாதமும் அளித்து, அறிவிப்புகளை மட்டுமே விடுத்து வந்தது. ஆனால், இடம் தேர்வு செய்வது தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்று தமிழக அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர்.

ஒருவழியாக மதுரை தோப்பூர் அருகே இடம் தேர்வாகிவிட்டது என்றும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் தமிழக அமைச்சர்கள் பெருமையுடன் சொல்லி வந்தார்கள். ஆனால், மத்திய அரசிதழில் இன்னும் வெளியிடவே இல்லை என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரூ.1500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் நாளன்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான பிறகு தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

‘தோப்பூரில் எய்ம்ஸ் அமைவதில் தாமதம் ஏற்படக்கூடாது. அங்குதான் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசின் அரசிதழில் வெளியிட
வேண்டும். மத்திய அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர்விடும் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். தோப்பூர் எய்ம்ஸுக்கு தேவையான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.  

இந்த மனுவை அக்டோபர் 9-ம் நாள் விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் மத்திய நிதித்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குநர், தமிழக தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில், ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் வழங்கப்பட்டு அதற்கான பரிசோதனை முடிந்துவிட்டது. அதனால் மத்திய அமைச்சகத்தில் இருந்து வழங்கப்படும் ஒப்புதலை விரைவில் அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி கிடைத்த பின்னர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கும். இருப்பினும் மருத்துவமனை நடைமுறைக்கு வர 2 ஆண்டுகள் குறையாமல் ஆகும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பார்க்கலாம்...!

- அஜி