‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க... ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?!



விநோதம்

தலைப்பைப் பார்த்தவுடன் தேள், பூரான், பாம்பெல்லாம் சாப்பிடும் சீனர்களின் டயட் என்று நினைத்துவிடாதீர்கள். எடை இழப்புக்காக புதிதாக ஃபேஷனாகி வரும் ஒரு சைவ உணவு முறைதான் இது. ஸ்நேக் டயட் உணவு முறையைக் கண்டுபிடித்தவரான கனடாவைச் சேர்ந்த கோல் ராபின்சன் கூறுவதைக் கேளுங்கள்...‘‘பாம்பைப் போல 2, 3 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு, பாம்பைப் போலவே மெல்லிய உடல் வாகைப் பெறுவதுதான் ஸ்நேக் டயட்டின் அடிப்படை.

இந்த ‘ஸ்நேக் டயட்’டை 3 கட்டமாக பிரிக்க வேண்டும். முதல் கட்டத்தில் 48 மணிநேரம் எந்த திட உணவையும் சாப்பிடாமல், ஆப்பிள் சிடர் வினிகரோடு ஸ்நேக் ஜூஸ் மட்டும் சாப்பிடலாம். 1 லிட்டர் தண்ணீரோடு 2 டீஸ்பூன் பிங்க் சால்ட், 2 டீஸ்பூன் செயற்கை உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி உருவாக்கப்பட்டதே ஸ்நேக் ஜூஸ். இரண்டாம் கட்டமாக, ஒரு நாளில் 23 மணி நேரம் 40 நிமிடங்கள் விரதம் இருந்துவிட்டு, மீதி 20 நிமிடங்கள் மட்டுமே உணவுக்கான நேரம்.

அந்த 20 நிமிடங்களில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வகையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும். மூன்றாவது கட்டத்தில், விரதம் முடிந்தபின் எப்போதும்போல வழக்கமான உணவை சாப்பிடலாம். இந்த டயட்டின் அடிப்படை கருத்து, ஒரு நாளின் பெரும்பாலான பகுதி விரதம் இருக்க வேண்டும். அதே நேரே நேரத்தில் அனைத்து கலோரிகளும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதன்மூலம் உடலின் நச்சுக்கள் வெளியேறி, இனிப்புச்சுவைக்கு அடிமையாவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கொழுப்பினை எரிக்கும் இயந்திரமாகவும் உடல் மாறுகிறது’’ என்கிறார் கோல் ராபின்சன். நிறைவாக, ஓர் எச்சரிக்கை... ஸ்நேக் டயட் இந்தியாவில் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று மேலோட்டமாக முயற்சிக்காதீர்கள். எடை குறைப்பு, எடை அதிகரிப்பு என்ற இரண்டு செயல்முறைகளுமே தகுதி பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும். இப்படியெல்லாம் ஒரு உணவுமுறை உலகில் இருக்கிறது என்பதைத் தகவலாகத் தெரிந்துகொண்டால் போதும்!

- இந்துமதி