தேவை அதிக கவனம்



பப்பியைத் தாக்கும் பார்வோ வைரஸ்

நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளைத் தாக்கும் பார்வோ வைரஸ் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பார்வோ வைரஸ் உயிரிழப்பையும் ஏற்படுத்தக் கூடியது என்பதால் செல்லப் பிராணிகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பார்வோ வைரஸ்(Parvo virus) என்பது செல்லப் பிராணிகளுக்கு வரும் ஒருவகை வைரஸ் தாக்குதல் நோய். குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகளை பார்வோ வைரஸ் அதிகம் தாக்குகிறது. இதற்காக பிறந்த ஆறாவது வாரத்தில் `சிக்ஸ் இன் ஒன்’ என்ற தடுப்பூசி போடுவது அவசியம். மேலும் குட்டியாக நாய் வாங்கும்போது தாய் நாய்க்குத் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்று கேட்டுவிட்டு அதன் பிறகு வாங்குவதும் நல்லது.

ஒரு வயதிற்கும் குறைவான நாய்களை மட்டுமே 90 சதவீதம் இந்த வைரஸ் தாக்கும். எனவே, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருந்தால், உடனே அருகில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். பருவநிலை மாற்றம் காரணமாக நாய்களுக்கு ஏற்படும் இந்த பார்வோ வைரஸ் தாக்குதல் குறித்து செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

பார்வோ வைரஸ் தாக்கப்பட்டால் தொடர்ந்து வாந்தி எடுத்தல், ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, உணவு உண்ணாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். அப்படியிருந்தால் உடனே அருகில் இருக்கும் கால்நடை மருத்துவரிடம் நாயைக் கொண்டு செல்ல வேண்டும். பார்வோ வைரஸ் தாக்குதலால் நாய்களின் வெள்ளையணுக்கள் குறைந்துவிடும். இதனால் நோய்த்தொற்றுக்கு விரைவில் ஆளாகி உயிரிழப்பும் நிகழலாம். எனவே, கவனம் அவசியம்!

- ஜி.ஸ்ரீவித்யா