எய்ம்ஸில் என்ன ஸ்பெஷல்?!



நாட்டு நடப்பு

மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருந்த எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு வந்தே விட்டது. இதற்காக மதுரைக்கு அருகே உள்ள தோப்பூரில் ரூபாய் 1500 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.

மற்ற மருத்துவமனைகளுக்கும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் என்ன வித்தியாசம்? என்னென்ன சிறப்பம்சங்களை எய்ம்ஸில் எதிர்பார்க்கலாம், இதனுடைய அத்தியாவசியம், தனிச்சிறப்புகள், நோயாளிகள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் என்னவென்று  சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் செளந்திரராஜன் விளக்குகிறார்...

‘‘அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காசநோய் மருத்துவமனை, எய்ட்ஸ் தடுப்பு மையம் என பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஏராளமான வசதிகள் சென்னை உட்பட பல இடங்களில் உள்ளன. இந்த நிலையில், பல கோடி மதிப்பீட்டில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் வர உள்ளது.

முதன்முதலாக, நமது நாட்டில் டெல்லியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது மதுரை மாவட்டத்தில், AIMS(AllIndia Institutes Of Medical Sciences) அமைக்கப்பட உள்ளது.

தன்னாட்சி அமைப்பு என்ற சிறப்பைப் பெற்ற இம்மருத்துவமனை, மத்திய அரசின் கீழ் தன்னுடைய பணிகளைத் தொடரும். இதன் காரணமாக, எந்தச் சூழ்நிலையிலும், நிதி பற்றாக்குறை மற்றும் நிதிச்சுமை என்பது இதற்கு கிடையாது. இதனால், உச்சகட்ட சிகிச்சைக்குத் தேவையான நவீன கருவிகளை வாங்குவதற்கும், மேல் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதற்கும் ஏற்ற ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மதுரையில் தொடங்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு, மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மேலும் டெங்கு, பன்றிக்காய்ச்சல், நிஃபா வைரஸ் காய்ச்சல் போன்ற புதியபுதிய நோய்கள் சார்ந்த ஆய்வுகள், தொழிற்சாலை கழிவுகளால் நச்சுத்தன்மைக்கு உள்ளாகும் மண், தண்ணீர் போன்றவை பற்றிய ஆராய்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். இங்கு சேரும் மாணவ, மாணவியருக்குத் தரமான ஆராய்ச்சியுடன் சேர்ந்த மருத்துவ கல்வி நிச்சயமாக கிடைக்கும்.

வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் இனி தென் தமிழகத்திலும் சிறப்பாக நடைபெறும். இதய நோய், ரத்த குழாய் அடைப்பு, மூளை செயலிழத்தல், கை, கால்கள் செயலிழப்பு எனப் பலவிதமான நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதுடன், அந்தந்த நோய்கள் என்ன காரணத்தால் வந்தன? எனக் கண்டறிய, தகுந்த பரிசோதனைகள், ஆய்வுகளை மேற்கொள்ள எய்ம்ஸ் ஒரு களமாக திகழும்.
      
உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக எய்ம்ஸ் திகழ்வதால் அதி நவீன உபகரணங்கள் இந்த மருத்துவமனையில் அமைக்கப்படும். எனவே, இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு அனைத்து நவீன வசதிகளும் கிடைக்கும்.

இதனால், மற்ற அரசு மருத்துவமனைகள் போல் எய்ம்ஸ் இருக்காது. முக்கியமாக, இந்த மருத்துவமனை வளாகத்தில் கூட்ட நெரிசல் காணப்படாது. காப்பீடு திட்டங்கள் பல நடைமுறையில் இருந்தாலும், தரமான சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது இன்றும் ‘எட்டாக்கனி’ யாகவே உள்ளது. அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, கண்டிப்பாக இக்குறைப்பாட்டைச் சரி செய்யும்.

இதன் மூலம், வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் தரமான சிகிச்சை முழுமையாக கிடைக்கும்.  
மதுரையில், இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதால், வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்களின் தொடர்பு அதிகரிக்கும். உலக சுகாதார மையம்(World Health Organisation) மற்றும் பன்னாட்டு அங்கீகாரம் இம்மாவட்டத்திற்கு கிடைக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனியார் ஹாஸ்பிட்டல்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, இங்கு வருபவர்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்கும்’’ என்கிறார்.        
                             

- விஜயகுமார்