ஒழியட்டும் பிளாஸ்டிக் அரக்கன்



மகிழ்ச்சி

‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ என்பதை 2018 உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக ஐ.நா. முன்வைத்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு மட்டும் இதி்ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் தீவிர நோய் அபாயங்கள் ஏற்படுவது மட்டுமின்றி சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதை பல்வேறு மருத்துவர்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.

மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவது, கழிவு நீர் பாதைகளும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவது போன்ற பல பிரச்னைகளை சமீபகாலமாக எதிர்கொள்வதற்கும் பிளாஸ்டிக் காரணமாக இருந்துவருவது நாம் அறிந்ததுதான். கால்நடைகள் அதனை உண்பதைப் பார்த்தும் பதறிப் போயிருப்போம்...

பொது நல மருத்துவர் ஜெய்சித்ரா சுரேஷிடம் தமிழக அரசின் இந்த தடை உத்தரவு பற்றியும், தடை செய்யப்பட வேண்டிய அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் ஏன் மோசமானவை என்றும் கேட்டோம்...

‘‘பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கடந்த நூறாண்டுகளாக அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இதன் பயன்பாடு இன்றைக்கு உணவு முறையோடு கலந்திருப்பதுதான் ஆபத்திலும் ஆபத்தாக இருக்கிறது.

பிளாஸ்டிக் ஒரு பெட்ரோலிய பொருள். மேலும் Polycarbonate, Bisphenol A, Polystyrene, Chloride, Polyvinyl chloride மற்றும் Phthalates போன்ற வேதிப்பொருட்களால் பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகிற பிளாஸ்டிக்கின் பயன்பாடு நம்மிடையே மூன்று இடங்களில் பயன்படுகிறது. ஒன்று உணவு பொருட்களோடு இரண்டு ஃபர்னிச்சர் மற்றும் இதர உபகரணங்கள் பயன்பாடு, மூன்று மருத்துவம் சார்ந்த பயன்பாடு. இதில் உணவுப் பொருளோடு பிளாஸ்டிக் இருப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உணவுப் பொருள் பயன்பாட்டில் இரண்டு வகைகளில் இருக்கிறது 1. சூடான உணவு பொருள் 2. குளிர்ந்த உணவுப் பொருள். முக்கியமாக சூடான உணவுப் பொருட்களை திட உணவாகவோ, திரவ உணவாகவோ பிளாஸ்டிக்கை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளும்போது அதில் உள்ள Bisphenol A என்ற ரசாயனமும், Phthalates என்கிற ரசாயனமும் உடலுக்குள் செல்கிறது.

இதனால் ஹார்மோன் மாற்றங்கள், உடல்பருமன், சிறுவயதிலேயே பருவம் அடைதல், ஆண்மைக் குறைவு, இதய நோய், புற்றுநோய், குழந்தையின்மை, கருச்சிதைவு, நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுபோல சூடான உணவுப் பொருள் பிளாஸ்டிக் மீது படுவதால் பாதிப்பு உடனடியாகவும், அதிகளவும் உடல் நலம் பாதிக்கும்.

அதுபோல குளி்ர்ந்த உணவு, தண்ணீர் போன்றவை பிளாஸ்டிக் கொண்டு பயன்படுத்தும்து இதனுடைய பாதிப்புகள் மெதுவாகவும், குறைந்த அளவும் இருக்கும். அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குளிர்ந்த நிலையிலும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்’’ என்பவர் பொதுமக்கள் கவனத்துக்கு சில முக்கிய விஷயங்களை நினைவூட்டுகிறார்.

‘‘காகிதம், துணி, பாக்கு மட்டை, வாழை இலை, சணல் பைகள் கண்ணாடி பாத்திரங்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் மாற்றாக அவசியம் பயன்படுத்த வேண்டும். தேநீர் கடைகளில் குவளைகள், பாக்குமட்டைகளால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது. இதனால் தீவிர நுரையீரல் பிரச்னைகள் சுவாசக் கோளாறுகள், பார்வை கோளாறுகள் வரலாம். தண்ணீர் பாட்டில், உணவு உண்ணும் பாத்திரங்கள் போன்றவை பிளாஸ்டிக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு புட்டிப்பால் பிளாஸ்டிக் அல்லது ரப்பர் நிப்பிளோ கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் பாதிப்புகள் இருக்கிறது. மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்தப்படுவது உயர்தரமான பிளாஸ்டிக் என்றாலும் அதனால் பாதிப்புகள் வருவது உறுதி. ஹோட்டலில் உணவு உண்டாலும், பார்சல் வாங்கினாலும் வாழையிலையில் வாங்குவது நல்லது. இளநீர், பழச்சாறு குடிக்கும்போதும் ஸ்ட்ராவைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’’ என்கிறார்.

அரசின் இந்த தடை உத்தரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்...‘‘பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல பிளாஸ்டிக் பொருட்களின் விலை குறைவாக இருப்பதால் அதன் பயன்பாடும் உற்பத்தியும் அதிகமாக இருக்கிறது.

இதனால் பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் இயற்கை பொருட்களும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களின் விலையும் குறைவாக இருக்க வேண்டும். இலை, மட்டை, மரம், காகிதம் போன்றவற்றை பிளாஸ்டிக்கு மாற்றாக  பயன்படுத்தும் பணியை அரசாங்கமே செய்வது பிளாஸ்டிக் ஒழிப்புக்கு சிறந்த வழியாக இருக்கும்.

அதிகம் பயன்படுத்தி பழக்கப்பட்டு விட்ட நிலையில் உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது சாத்தியமில்லை. ஆனால், முதல்கட்டமாக உணவுப் பொருளோடு கலந்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்டிப்பாக தவிர்த்தாக வேண்டும்.

பிளாஸ்டிக் ஃபர்னிச்சர், மின்சார உபகரணங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மருத்துவத்துக்குப் பயன்படும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் போன்றவைகளுக்கு முறையான மாற்று கண்டறிவது அவசியம். நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகி–்ன்றனர். இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்’’ என்கிறார்.

உறுதியான நடவடிக்கை தேவை!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2002-ம் ஆண்டில் அதற்கான தடை சட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். ஆனால் வெளிப்படையான காரணங்கள் எதுவும் இன்றி அச்
சட்டத்தை திரும்பப் பெற்றார்.

பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு அப்போது ஏற்பட்ட நிலைமை, மீண்டும் வந்துவிடக் கூடாது. இந்த தடை அறிவிப்பை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

‘பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால் அந்த தொழிலை நம்பி இருக்கிற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்’ என்று வணிகர் சங்கங்கள் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த உத்தரவை உறுதியாக செயல்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.

- க.இளஞ்சேரன்

படங்கள்:  ஏ.டி.தமிழ்வாணன்