சைக்கிள் நடுக்கம்



வணக்கம் சீனியர்

‘‘தனது விருப்பமின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை Tremor என்று சொல்கிறோம். இது பொதுவாக கைவிரல்களில் ஏற்படும். எந்த வயதினருக்கும் இத்தகைய நிலை ஏற்படும் என்றாலும், வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும். விரல்களில் மட்டுமின்றி கைகள், தலை, முகம், உதடுகள் குரல்வளை, உடல் என எங்கும் இந்த நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவரான மீனாட்சி சுந்தரம். முதியவர்களுக்கு ஏற்படுகிற கைநடுக்கம், அதற்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றி நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

எந்த ஒரு பொருளையும் கையால் சரியாக பிடிக்க முடியாமல் போவது, ஒரு கப் தண்ணீரையோ, தேநீரையோ கைகளில்  பிடிக்க முடியாமல் நடுங்குவது, தன் கையெழுத்தைக்கூட சரியாக போட முடியாமல் தடுமாறுவது, தங்களுடைய பல்வேறு அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தங்கள் தேவைகளையும்  நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிற பல முதியவர்களை நாம் பார்த்திருப்போம். சில நோய்களாலும், சில வகை மருந்துகளாலும்கூட இந்த நடுக்கம் ஏற்படுவதுண்டு. இந்த கைகளின் நடுக்கத்தை Hand tremor என்று குறிப்பிடுகிறோம்.

 கை நடுக்கத்தின் வகைகள் பொதுவாக நம் அனைவருக்கும் கைநடுக்கம் என்றவுடன் நினைவுக்கு வருவது பார்க்கின்ஸன் நோய்தான். ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர் 1817-ல் இந்த நோயைக் கண்டறிந்ததால், அவரது பெயராலேயே  பார்க்கின்ஸன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கைகளின் நடுக்கம் என்பது பார்க்கின்ஸன் வகையாக இருக்கலாம் என்றாலும், எல்லா வகை கைநடுக்கங்களும் பார்க்கின்ஸன் நோய் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக ஆஸ்துமா, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மனநோய், வலிப்பு நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் சாப்பிடுபவர்களுக்கோ அல்லது மேலும் சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் எதிர்விளைவுகளாலும்கூட கைநடுக்கம் வரலாம்.
காரணம் என்ன?

பாதிக்கப்பட்டவரது வயதின் அடிப்படையில் கைநடுக்கத்துக்கான காரணமும் வேறுபடும். 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு, அமைதியாக இருக்கும் நேரங்களிலும் ஏற்படுகிற கைநடுக்கம் பார்க்கின்ஸன் நோயாக (Parkinson’s Disease) இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே,
கவனம் தேவை.

எழுதும்பொழுது மட்டும் ஏற்படும் நடுக்கத்தை Writer’s Tremor அல்லது Writer’s Cramp என்று சொல்கிறோம். இந்த வகை நடுக்கம் 40 முதல் 50 வயதுகளில் தொடங்கி முதுமையிலும் தொடரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

40 வயது வரையுள்ள இளம் வயதினர்களுக்கு சில மருந்துகளின் விளைவுகளாலும், பதற்றத்தாலும்கூட நடுக்கம் ஏற்படலாம். குழந்தைப் பருவம் முதல் அனைத்துப் பருவங்களிலும் மரபணு அடிப்படையிலான காரணங்களால் நடுக்கம் ஏற்படுகிறது. இந்த வகை நடுக்கத்தை Essential Tremor என்று சொல்கிறோம். இந்த வகையில் கை, கால், தலை மற்றும் குரலிலும் நடுக்கம் ஏற்படலாம்.

பார்க்கின்ஸன் பிரச்னை இயல்பாக முதுமையில் வரும் நடுக்கத்தால் எவ்விதமான பாதிப்பும் இல்லை. என்ன மாதிரியான நடுக்கம் என்பதை சரியாக கண்டறிந்து உரிய மருந்து, மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் நரம்பு சார்ந்த நோய்களால் ஏற்படும் பார்க்கின்ஸன் நோய்க்கு உரிய சிகிச்சை பெற வேண்டும்.

தசைகளின் அசைவியக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் இப்பிரச்னைக்குக் காரணமாக உள்ளது. அப்படி ஏற்பட்டால் முதலில் கைகளில் நடுக்கம் ஆரம்பிக்கும். வேலை செய்யும்போது, தூங்கும்போது நடுக்கம் இருக்காது. நாளடைவில் உடல் தசைகளில் இறுக்கம் ஏற்படும்.

இதன் காரணமாக அவர்கள் பொறுமையாக நடப்பது, சட்டையைக்கூட போட முடியாத நிலை, பேச்சு சரியாக வராதது, சாப்பிட முடியாதது போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். ஆனால், அவர்களுடைய மனநிலை நன்றாக இருக்கும். இவர்களது அனைத்து வேலைகளுக்கும் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும்.

எனவே, முதுமையில் உடல் நடுக்கம் அல்லது கைநடுக்கம் வந்த உடனே மருத்துவரிடம் சென்று அது இயல்பான நடுக்கமா அல்லது பார்க்கின்ஸன் நோயா என்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும்.

அதன்பிறகு மருத்துவர் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். இந்நோய்க்கு சில சிறப்பான பரிசோதனைகளும், ஸ்கேனிங் பரிசோதனைகளும் செய்ய வேண்டும். இந்நோய் தீவிரமடைந்து இருக்கையில் நாள்பட்ட நிலையில் சிலருக்கு ஓர் குறிப்பிட்ட நேரத்தில் Deep Brain Stimulation (DBS) என்கிற சிகிச்சை நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கிறது.   

- க.கதிரவன்