ஹெல்த் காலண்டர்



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

தேசிய டெங்கு தினம் - மே 16
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் மே 16-ம் நாள் தேசிய டெங்கு தினத்தை(National Dengue Day) கடைபிடித்து வருகிறது. டெங்கு பரவும் பருவம், அதை தடுத்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

Aedes aegypti என்கிற கொசு கடிப்பதன் மூலம் டெங்கு பரவுகிறது. இது வலி தருவது மட்டுமல்லாமல் மரணம் விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்தியாவில் இந்நோய் குறிப்பாக மழைக்காலங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

தடுப்புமுறை

கொசு கடிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வதும், வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தியாவதைத் தடுப்பதும்தான் டெங்குவைத் தடுப்பதற்கான சிறந்த முறைகள்.

* கொசு வலையையும் கொசு விரட்டியையும் பயன்படுத்த வேண்டும்.
* கால்கள் மற்றும் கைகளில் கொசுக் கடியைத் தடுக்கும் வகையில் நீளமான ஆடைகளை அணிய வேண்டும்.
* வீடு மற்றும் நமது சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்க அனுமதிக்கக் கூடாது. பிளாஸ்டிக் கொள்கலன்கள், வாளிகள், டயர்கள், கூலர்கள், செல்லப் பிராணிகளுக்கு நீர்வைக்கும் பாத்திரங்கள், பூந்தொட்டிகள் போன்றவையே வழக்கமாகக் கொசு பெருகும் இடங்களாக இருக்கிறது. எனவே அவற்றை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
* உங்கள் சுற்றுப்புறத்தில் கொசுவைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை தெளிக்கலாம் அல்லது புகையாக பரவச் செய்யலாம்.
* மழைக் காலங்களில் நீண்ட நாட்களாக காய்ச்சல் நீடித்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி, அவருடைய ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் அரசின் கடமை என்றாலும், அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் ஒரு முழுமையான
மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

சர்வதேச குடும்ப மருத்துவர் தினம் - மே 19

ஒவ்வோர் ஆண்டும் மே 19-ஆம் தேதி சர்வதேச குடும்ப மருத்துவர் தினம் (World Family Doctor Day )

அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்குக் குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும் சேவையையும் முதன்மைப்படுத்தும் விதமாக சர்வதேச குடும்ப மருத்துவர் அமைப்பு (WONCA) 2010-ம் ஆண்டில் முதன்முதலாக இந்த நாளை அறிவித்தது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப மருத்துவர்களின் பணி மற்றும் சேவையை உலகளவில் அனைவருடைய கவனத்துக்குக் கொண்டு வருவதோடு, அவர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கச் செய்வது.

அனைத்து நோயாளிகளுக்கும் தனிப்பட்ட, விரிவான மற்றும் தொடர் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் அவர்களுக்கு இருக்கும் முக்கியப் பங்கினை அங்கீகரிப்பது. குடும்ப மருத்துவர்களின் மன வலிமையை அதிகப்படுத்துவதோடு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் - மே 30

சர்வதேச மூளை தண்டுவட மரப்பு தினம் (World Multiple Sclerosis Day)  
ஒவ்வோர் ஆண்டும் மே இறுதி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. நோய் கண்டறிதல், மருத்துவம், ஆதரவு ஆகியவற்றில் மட்டுமன்றி நோயாளிகளின் பயணம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கவனம் செலுத்துவது, நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உண்டாக்குவது, பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைக் குறைப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு மே மாதம் 30-ம் நாள் இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நரம்புகளின் பாதுகாப்பு உறை சிதைவடைந்து, மூளைக்கும் உடலின் பிற பாகங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு அறுந்து போவதால் ஏற்படும் நரம்பியல் கோளாறுகளை இந்நோய் உள்ளடக்கி உள்ளது. இதனால் பேச்சு, பார்வை மற்றும் அசைவுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் இளைஞர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நரம்புகளின் இருப்பிடத்தைப் பொறுத்து இந்நோயின் அறிகுறிகள் மாறுபடுகின்றன. உடல் உறுப்புகளில் பலவீனம் அல்லது மரப்பு, கண் பார்வை மங்குதல், பகுதி அல்லது முழு பார்வை இழப்பு, பேச்சுக் குழறல், தலை கிறக்கம், நடுக்கம், உடல் ஒத்தியங்காமை, உடல் பாகங்களில் கூச்சம், வலி போன்ற அறிகுறிகள் இந்நோயால் ஏற்படுகின்றன.

நோய் கண்டறிதல்ஒரு நரம்பியல் நிபுணர் பல்வேறு சோதனைகள் மூலம் மூளை தண்டுவட மரப்பு நோயைக் கண்டறிகிறார். பாதிக்கப்பட்ட நரம்பு செயல்பாட்டைச் சோதித்து நரம்பியல் ஆய்வு, கண் நோய் மற்றும் பார்வையை மதிப்பிடுவதற்கான கண் பரிசோதனை, இடுப்புப் பகுதியில் துளையிட்டு, மூளை மற்றும் தண்டுவடத்தைச் சூழ்ந்திருக்கும் திரவத்தை அதற்கான ஊசி மூலம் எடுத்து பரிசோதனை செய்தல் போன்றவற்றின் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது.

இந்த நோயின் சிக்கல்களும் அறிகுறிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளித்தால் இதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம்.

சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினம்- மே 28

மே 28-ஆம் நாள் சர்வதேச பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடவடிக்கை தினம்

அல்லது சர்வதேச பெண்கள் ஆரோக்கிய தினமாக(International Women’s Health Day) அனுசரிப்பது என்று 1987-ல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் மற்றும் சுகாதாரக் குழுக்களால் இந்த சிறப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் பெண்கள் நல ஒருங்கிணைப்புக் குழுக்களும், இனப்பெருக்க உரிமைகளுக்கான உலகப் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் ஒன்றிணைந்து இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

பாலியல், இனப்பெருக்க நல உரிமைகள் போன்ற பெண்களின் நல்வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். பெண்களின் சுகாதாரப் பிரச்னைகள் பற்றி ஒவ்வொருவருக்கும், குறிப்பாக அரசு சார்ந்த தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்டுகிற ஒரு சிறப்பு தினமாக இந்த நாள் திகழ்கிறது.

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள், எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல், கருத்தடை பற்றி அறிந்து கொள்ளுதல், பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்பு வசதி, சுகாதாரத் துறையிலும் பெண்கள் ஆரோக்கியத்திலும் மேம்பாடு, பெண்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க நல உரிமை என்று பெண்களின் நிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

பாலியல் பற்றிய தகவலைப் பெறுவது, பாலியல் கல்வி பெறுவது, தமது இணையைத் தேர்வு செய்வது, பாலுறவில் ஈடுபடுவதா வேண்டாமா என்பதை முடிவுசெய்வது, எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பது, நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது, மகப்பேறு பராமரிப்பைப் பெறுவது, பாதுகாப்பான கருக் கலைப்பு மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பையும் பெறுவது, பால்வினை நோய்கள், பால்வினை தொற்று பற்றிய தடுப்புமுறை, கவனம் மற்றும் மருத்துவத்தை அறிந்து கொள்வது போன்ற அனைத்தும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் சார்ந்த பெண்களுக்கான உரிமைகள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

சர்வதேச புகையிலையற்ற தினம் - மே 31

ஒவ்வோர் ஆண்டும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை அற்ற தினம் (World No Tobacco Day)  கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையின் தீய விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் புகைப் பழக்கத்தை விட்டொழிக்க அவர்களை ஊக்கப்படுத்துவதும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

புகையிலையின் தீய விளைவுகள்

புகையிலையால் ஏற்படும் ஆபத்துக்கள் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. இருமல், தொண்டை புகைச்சல், வாய் துர்நாற்றம், ஆடைகளில் துர்நாற்றம், தோலில் படை, பற்கள் நிறமிழத்தல் போன்ற பிரச்னைகளும், இதய நோய்கள், நுரையீரல் அழற்சி, நிமோனியா, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும், நுரையீரல், தொண்டை, வயிறு, சிறுநீர்ப்பை போன்றவற்றில் புற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் தீவிரமான போதைப் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு பொருளாக உள்ளது. அது சில நாட்களுக்கு உற்சாக உணர்வைத் தரும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல உங்கள் இதயம், நுரையீரல், வயிறு மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நாட்களில் ஒருவர் உடல் மற்றும் உணர்வு ரீதியாக நிக்கோட்டினுக்கு அடிமையாகிய பின்னர் கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

புகை பிடிப்பவராக இல்லாமல் இருந்தாலும், புகைப்பவர்களோடு உங்களுக்கு தொடர்பு உண்டாகலாம். இது எதிர்மறை புகைத்தல் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் மேற்கண்ட பல பிரச்னைகளை உருவாக்கலாம். நேரடி புகைத்தலைப் போன்றே இதுவும் உடல் நலனுக்குத் தீங்கு தருவதுதான்.

புகையிலைப் பழக்கத்தைக் கைவிட சில குறிப்புகள்

நிக்கோட்டின் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு போதைப் பொருள். புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுவது கடினமே. ஆனால், சரியான அணுகுமுறை மூலம் நீங்கள் இதை சாதிக்க முடியும். இப்பழக்கத்தைக் கைவிட மிகுந்த பொறுமையும் மன வலிமையும் தேவை. ஒரு நாளில் முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்த முடியும். புகைப்பதை கைவிடுவதால் ஏற்படும் பின் விளைவுகளையும் நன்மைகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். முழு நம்பிக்கையோடு முயற்சி செய்வது மிகவும் அவசியம்.  

நீங்கள் புகையிலையை விட விரும்புகிறீர்கள். ஆனால் அதை எப்படி தொடங்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் எம்-நிறுத்தம் திட்டத்தில் உடனடியாக இணையுங்கள். இத்திட்டத்தை ஊக்கப்படுத்தவும், மக்களுக்குப் புகையிலையின் தீய விளைவுகள் குறித்து தொடர்ந்து பரவலாக அறிவுறுத்தவும் அஞ்சல் அனுப்பும் நோக்கத்தோடு quittobacco@gov.in என்ற ஒரு தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

 தொகுப்பு: க.கதிரவன்