தாய்ப்பாலே தடுப்பூசிதான்!சுகப்பிரசவம் இனி ஈஸி

தாய்ப்பால் மட்டுமே கொடுத்து, ஒரு பெண் தன்னுடைய குழந்தையை 6 மாதம்வரை வளர்க்க முடியும் என்பது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. இயற்கையாகப் பிரசவம் ஆனாலும் சரி, சிசேரியன் என்றாலும் சரி, குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்குத் தாய்-சேய் இருவருக்கும் நல்லது.

தாய்ப்பாலே ஒரு தடுப்பூசிதான்!

மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாக சுரக்கும் ‘சீம்பால்’தான் குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இதுதான். இதில் இம்யூனோகுளோபுலின் ஏ, எம், ஜி, எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் இருக்கின்றன. இவை குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றன. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன.

அடுத்து சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்பக்கட்டத்தில் தேவைப்படுகிற கொழுப்பு அமிலங்களும் சிஸ்டீன், டாரின் ஆகிய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. இதிலுள்ள லைசோசைம் எனும் என்ஸைம் தொற்றுக் கிருமிகளை அழித்துவிடுகிறது.

தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகிறது; குழந்தையின் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஒவ்வாமை ஆவதில்லை. குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தாய்ப்பால்தான் உதவ முடியும். அதுமட்டுமா? அம்மாவுடனான பாசப் பிணைப்பு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம்தான் அதிகம்.

தாய்க்கும் நன்மை தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள்! முக்கியமாக, தாய்ப்பால் தரும்போது குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் பந்தம் உருவாகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்குக் கட்டுப்படுகிறது. கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது.தாய்ப்பால் கொடுப்பதால் சுரக்கும் சில ஹார்மோன்கள் காரணமாக, தாயின் வயிறு சுருங்கி பழைய வடிவத்தைச் சீக்கிரத்தில் பெற முடியும். மார்பகப் புற்றுநோய், சினைப்பைபுற்றுநோய் போன்ற ஆபத்துகள் குறைகின்றன.

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நிறைய பெண்கள் வேலைக்குச் செல்வதால், பலரும் இத்தனை காலம் தாய்ப்பால் தருவதைத் தவிர்க்கின்றனர். பதிலாக, பசும்பால் அல்லது செயற்கைப் பவுடர் பால் தருகின்றனர். இது அம்மாக்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. மருத்துவர் சொன்னால் மட்டுமே குழந்தைக்குப் பவுடர்பால் தர வேண்டும்.

கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டால், வேலைக்குச் செல்லும் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தாய்ப்பால் வழங்கலாம். பாலை Breast pump மூலம் எடுத்து, ஃப்ரீஸரில் பாதுகாத்துவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்குத் தேவைப்படும்போதெல்லாம் அதை எடுத்துக் கொடுக்கலாம். 24 மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் பாலை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து அறை வெப்ப
நிலைக்குக் கொண்டு வந்து குழந்தைக்குப் புகட்டலாம்.

இப்படி முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டியது கட்டாயம். 6 மாதங்கள் முடிந்த பிறகு திட உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்த வேண்டும். அதிகபட்சம் இரண்டு வயது வரை தாய்ப்பாலையும் தர வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு, முதல் 6 மாதங்களுக்குத் தண்ணீர் தர வேண்டியதில்லை.

தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

தாயானவள் உட்கார்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். உட்கார்ந்து கொண்டு கொடுப்பது மிக நல்லது. இது, பால் புரையேறுவதைத் தடுக்கும். குழந்தையைத் தன் மடியில் சாய்த்து, சற்றே செங்குத்தாகவும் மார்பகத்துக்கு மிக அருகிலும் வைத்துக் கொண்டு, தலையை ஒரு கையில் தாங்கிக் கொண்டு, குழந்தையின் நாடி மார்பகத்தைத் தொடுமாறு நிலைப்படுத்த வேண்டும். அப்போது குழந்தையின் காது, தோள்பட்டை, இடுப்பு இம்மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

படுக்கும் நிலையில் பால் தருவதாக இருந்தால், தாயானவள் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு, தன்னைப் பார்க்கும்படி குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் பின்கழுத்துப் பகுதியை ஒரு கையால் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.இந்த இரு நிலைகளிலும், குழந்தை நன்கு வாயைத் திறந்ததும் பால் தர வேண்டும்.

தாயின் மார்புக் காம்பை மட்டுமல்லாமல், காம்பைச் சுற்றியுள்ள கறுப்புப் பகுதியையும் குழந்தை கவ்விக்கொள்ள வேண்டும். இதற்கு உதவும் வகையில் தாயானவள் தன் நான்கு விரல்களை மார்பகத்தின் கீழும், கட்டை விரலை மார்பகத்தின் மேலும் வைத்து அழுத்த வேண்டும். (இப்போது தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே தலையணையுடன் கூடிய ஒரு பிரத்யேக நாற்காலி கடைகளில் கிடைக்கிறது).

ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்கலாம்; இரவில் குழந்தை தூங்கும்போது 3 - 4 மணி நேர இடைவெளியில் தரலாம். குழந்தை ஆரம்பத்தில் ஒவ்வொரு மார்பகத்திலிருந்தும் 5 முதல் 10 நிமிடங்கள்வரை மட்டுமே பாலை உறிஞ்சும். சில நாட்களில் 15 முதல் 20 நிமிடங்கள்வரைத் தொடர்ந்து உறிஞ்சப் பழகிவிடும். குழந்தை எந்த அளவுக்கு உறிஞ்சுகிறதோ, அந்த அளவுக்குத் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

ஒவ்வொருமுறை கொடுக்கும்போதும், ஒரு மார்பகம் மாற்றி மறு மார்பகத்தில் பால் கொடுக்க வேண்டும். குழந்தை தொடர்ந்து மார்பகத்தைச் சப்பிக் கொண்டிருந்தால், குழந்தையின் வாயிலிருந்து முரட்டுத்தனமாக மார்பகத்தை இழுக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், மார்புக் காம்பில் புண் உண்டாகிவிடும். பதிலாக, தாயின் சுண்டுவிரலை மெதுவாக குழந்தையின் வாய்க்குள் நுழைத்து, குழந்தை சப்புவதை மெதுவாக விடுவித்து, குழந்தையை மார்பகத்திலிருந்து நகர்த்த வேண்டும். பிறகு, குழந்தையைத் தோளில் போட்டு, அதன் முதுகை லேசாகத் தட்ட வேண்டும். பாலுடன் விழுங்கப்பட்ட காற்று வெளியேற இது உதவும்.

தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை என்றால்?

தற்போதுள்ள இளந்தாய்கள் தாய்ப்பால் கொடுக்கும்போது பதற்றத்துடன் பரபரப்பாகி விடுகிறார்கள். குழந்தையைச் சரியாகப் பிடித்துக்கொள்ளத் தெரியாமல் பால் கொடுக்கிறார்கள். தங்களின் உணவு விஷயத்திலும் தவறு செய்கிறார்கள். வீட்டு வேலை, அலுவலக வேலை என தங்களை வேகப்படுத்திக் கொண்டு, எந்த நேரத்திலும் ஒருவித மன அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். தேவையில்லாமல் கவலைப்படுகிறார்கள். தேவையான அளவுக்கு உறக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

பிரசவமான சில மாதங்களுக்கு, தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையைத் தூக்கித் தருவது, பால் கொடுக்கும்போது குழந்தையை மாற்றிப் படுக்கவைக்க உதவுவது, டயாபர் மாற்றுவது, குழந்தையைக் குளிப்பாட்டுவது, உடை மாற்றுவது, தொட்டில் ஆட்டுவது எனப் பல வேலைகளில் தாய்க்கு உதவ வீட்டில் அம்மா/பாட்டி இருப்பது நல்லது.

முன்பு கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் இது சாத்தியப்பட்டது. இப்போது தனிக்குடும்ப வாழ்க்கைமுறைதான் பெரும்பாலான வீடுகளில் காணப்படுவதால், தாய்க்கு உதவி செய்து, மனதுக்கு ஆறுதல் அளித்து, தைரியம் கொடுக்கும் ஆட்கள் வீட்டில் குறைந்துவிட்டனர். இதனால், இந்தத் தலைமுறை இளந்தாய்களுக்குத் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்துவிடுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், தாய்ப்பால் சுரக்கும்.

பால் கட்டிக்கொண்டால்?

குழந்தை போதுமான பாலை உறிஞ்சிக் குடிக்கவில்லை என்றால், குழந்தைக்குச் சரியான நிலைகளிலும் இடைவெளிகளிலும் தாய்ப்பால் தரவில்லை என்றால், தாயின் மார்பகத்தில் பால் கட்டிக்கொள்ளும். அப்போது மார்பகம் கனமாகவும் கடினமாகவும் இருக்கும். மார்பகம் வலிக்கும். மார்பகத்தில் வெந்நீர் ஒத்தடம் / ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மருத்துவரின் ஆலோசனைப்படி வலிநிவாரணி மாத்திரைகளையும் சாப்பிடலாம். குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இந்த வலியைக் குறைக்கலாம்.

அரிதாக சிலருக்கு மார்பகத்தில் தொற்று ஏற்பட்டு சீழ் வைத்துவிடும். அப்போது மார்பகம் கடினமாகி, சிவந்துபோகலாம். வலி அதிகமாகி காய்ச்சல் ஏற்படலாம். அம்மாதிரியான நிலைமைகளில், ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்திவிடலாம்.

ஒவ்வொருமுறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னால் தாயானவள் தன் கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதும், தினமும் ஒருமுறை மார்பகங்களைத் தண்ணீரில் கழுவிக்கொள்வதும், சுத்தமான ‘சப்போர்ட்டிவ் பிரா’ அணிந்துகொள்வதும் இந்தத் தொல்லையைத் தவிர்க்க உதவும்.

(பயணம் தொடரும்)