ஹெல்த் காலண்டர்



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

சர்வதேச ரத்தம் உறையாமை நோய் தினம்  ஏப்ரல் 17

ரத்தம் உறையாமை என்கிற குருதிக்கசிவு நோய் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17-ம் தேதி சர்வதேச குருதி உறையாமை நோய் தினம் (World Hemophilia Day) கடைபிடிக்கப்படுகிறது.ரத்தத்தின் உறையும் திறனைப் பாதிக்கும் மரபுக் கோளாறே குருதி உறையாமை நோய். இது பெண்களைவிட ஆண்களையே அதிகமாகப் பாதிக்கிறது. இந்நோய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேரில் ஒரு நபரை பாதிக்கலாம்.

நோய் அறிகுறிகள்

எளிதில் காயம் ஏற்படுவது, மூக்கில் நிற்காமல் ரத்தம் வடிவது, பல் மருத்துவ சிகிச்சைகளின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படுதல், மூட்டுகளில் வலி அல்லது வீக்கம், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளது. இந்நோய் பொதுவாக குழந்தைப் பருவத்திலேயே கண்டறியப்பட்டுவிடுகிறது. அரிதாக, சிலருக்கு பெரிய காயங்களின்போதும், அறுவை சிகிச்சையின்போதும் கண்டறியப்படுவது உண்டு. எளிய ரத்தப் பரிசோதனையின் மூலமே இந்நோயைக் கண்டறியலாம்.

ரத்தம் உறையாமை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், ரத்தத்தில் குறைவாக இருக்கிற ரத்த உறைவுக் காரணிகளைத் தொடர்ந்து உடலின் உள்ளே செலுத்துவதின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான முழு வாழ்க்கையையும் வாழலாம்.

சர்வதேச கல்லீரல் தினம் ஏப்ரல் 19

கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19-ம் நாள் சர்வதேச கல்லீரல் தினம்(World Liver Day) கடைபிடிக்கப்படுகிறது. மூளைக்குப் பிறகு உடலில் இருக்கும் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். மிகவும் சிக்கலான செயல்பாடுகளைக் கொண்ட உறுப்பும் கூட! மனிதர்களின் செரிமான மண்டலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மருந்துகள் முதற்கொண்டு நாம் உண்ணும் அல்லது குடிக்கும் எந்தப் பொருளும் ரத்தத்தின் வழியே கல்லீரலுக்குள் செல்வது இயல்பு. இந்த உறுப்பு இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. சரியான முறையில் கவனம் செலுத்தாவிட்டால் கல்லீரல் எளிதாகச் சேதமடைய வாய்ப்புள்ளது.
உடல் உறுப்புகளில் கடுமையாக உழைக்கக்கூடிய கல்லீரல் பின்வரும் பல சிக்கலான வேலைகளைச் செய்கிறது.

* தொற்றுக்களையும் நோய்களையும் எதிர்த்துப் போராடுகிறது.
* ரத்த சர்க்கரையை முறைப்படுத்துகிறது.
* உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
* கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
* ரத்த உறைவுக்கு உதவுகிறது.
* கொழுப்பை உடைத்து செரிமானத்துக்குத் துணைபுரியும் கல்லீரல் பித்த நீரை சுரக்கிறது.

கல்லீரல்நோய் அறிகுறிகள்

கல்லீரல்நோய் தீவிரமாகி, கல்லீரல் சேதமடையும் வரையில் அதன் அறிகுறிகள் வெளிப்
படையாகத் தென்படுவதில்லை. இந்த நிலையில் பசியின்மை, எடை இழப்பு, மஞ்சள் காமாலை போன்ற சில அறிகுறிகள் மூலம் கண்டுகொள்ளலாம்.
கல்லீரல் அழற்சி கல்லீரல் வீங்குவதையே கல்லீரல் அழற்சி என்கிறோம்.

வைரஸ் தொற்று, மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களால் இந்த கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த அழற்சியானது குறைந்த அறிகுறிகளுடனும், அறிகுறிகளே இல்லாமலும் உண்டாகக்கூடியது. இதன் காரணமாக மஞ்சள் காமாலை, பசியின்மை, சோர்வு போன்ற பிரச்னைகள் உருவாகிறது.

இந்த அழற்சியைத் தடுக்க, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கல்லீரல் நோய்களுக்கு ஆயுர்வேத அணுகுமுறையும் சிறந்த பலனளிக்கிறது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும் யோகா, பிராணாயாமம் போன்ற உத்திகளை இந்த அணுகுமுறை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லீரல் சுத்தமடைய சில குறிப்புகள்

* பூண்டு, திராட்சை, கேரட், கீரைகள், ஆப்பிள், முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* ஆலிவ் எண்ணெய், ஆலிவ் விதை பயன்படுத்தலாம்.

* எலுமிச்சைச் சாறு, க்ரீன் டீ பருகலாம்.

* தினை, மரக்கோதுமை போன்ற மாற்றுத் தானியங்கள் நல்லது.

* உணவில் மஞ்சளைத் தேவையான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரலை ஆரோக்கியமாக பேணுவதற்கு சில குறிப்புகள்

* தானியங்கள், பழங்கள், காய்கறிகள், புரதம், கொழுப்பு பொருட்கள் போன்ற அனைத்துவகை உணவுகளையும் போதுமான அளவில் உட்கொள்ள வேண்டும்.

* பயறுகள், பழுப்பரிசி போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளும் நல்லது.

*சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகள் செய்வது போன்ற வற்றின் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

* மது, புகை மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவது கல்லீரலைச் சேதப்படுத்தும் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ளும் முன்னர் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில், தவறான முறையில் மருந்துகளைச் சேர்த்து உட்கொள்வதாலும் கல்லீரல் சேதம் அடையும்.

* வேதிப் பொருட்களை பயன்படுத்தும்போது கவனம் அவசியம்.

* உடல் பருமனானது கொழுப்பு சார்ந்த கல்லீரல் நோய்களை உண்டாக்கும். இதனால் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியம்.  

சர்வதேச மலேரியா தினம் ஏப்ரல் 25

மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி சர்வதேச மலேரியா தினம் (World Malaria Day) கடைபிடிக்கப்படுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கோடு உலக சுகாதார நிறுவனம் பல கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.

அதன்படி மலேரியாவை உண்டாக்கும் காரணிகளையும் மலேரியாவால் ஏற்படும் மரணத்தையும் 90% குறைப்பது, குறைந்தபட்சம் 35 நாடுகளில் மலேரியாவை முற்றிலும் ஒழிப்பது, மலேரியா இல்லாத நாடுகளில் மீண்டும் அந்நோய் உண்டாகாமல் தடுப்பது போன்ற பல முக்கிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நோய் பரவுதல் Anopheles வகை பெண் கொசு கடிப்பதால் மலேரியா உண்டாகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் இந்நோய் பாதிப்பு இருக்கிறது. எனினும் கொசுவின் பெருக்கத்தினால் மழைக் காலத்திலும் அதற்குப் பின்னும் அதிக அளவில் இந்த நோய் பரவுகிறது.

நோய் பாதிப்புகள்

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்படக்கூடிய மரணங்களுக்கு இந்நோய் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவில் மட்டும் இந்நோயால் 77% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் இளம் குழந்தைகளே அதிகளவு மரணமடைகின்றனர்.

பிறரைவிட கர்ப்பிணிகளுக்கு மலேரியாவின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். குறைப்பிரசவம், கரு கலைதல், குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பேறுகால ஆபத்துகள் இந்த நோயால் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. பல நாடுகளில் தேசிய பொருளாதாரத்தின் பெரும் பகுதி இந்த நோய்க்காக செலவு செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

நோய்த் தடுப்புமுறை

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி நோய்ப் பரப்பியைக் கட்டுப்படுத்துவதே இந்த நோயைத் தடுக்கும் சிறந்த வழி. இதில் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட கொசுவலை பயன்படுத்துவது, அறைக்குள் பூச்சி மருந்து தெளிப்பது என்கிற இரண்டு நோய்ப் பரப்பித் தடுப்பு முறைகள் உள்ளது.

பூச்சி மருந்து பூசப்பட்ட கொசு வலைகள் போன்ற பிற மலேரியா தடுப்பு கருவிகள் பரவலாகக் கிடைக்கச் செய்தல், உட்புற பூச்சி மருந்து தெளித்தல், தடுப்பு சிகிச்சைகள் போன்ற நடவடிக்கைகள், உலகளவில் மலேரியா நோய்ப் பளுவைக் குறைத்து, உயிர்களைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆனால், இந்த மருத்துவ சேவைகள் தேவைப்படும் பலருக்கு சரியாக கிடைக்காத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு இந்த சிறப்பு தினத்தில் நோய்த் தடுப்புக் கருவிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகள் மற்றும் அவற்றின் மேம்பாட்டுப் பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட நோய்த் தடுப்புப் பணிகளில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது.

பரிசோதனை மூலம் நோயாளிக்கு தொற்று ஏற்பட்டுள்ள இடம், நோயின் வகை, சிகிச்சை தொடங்கும்போது நோய்த் தாக்கத்தின் அளவு, நோயாளியின் வயது, நோயாளி கர்ப்பிணியா என்கிற காரணிகளின் அடிப்படையில்தான் நோயாளிக்கு கொடுக்கும் மருந்துகளின் வகையும், எவ்வளவு காலத்துக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதும் அமைகின்றன. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, அவருடைய பரிந்துரைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயைக் குணப்படுத்தலாம்.

மலேரியாவிலிருந்து உங்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை

* இரவு நேரங்களில் கொசுக்கடியைத் தவிர்க்க வேண்டும்.

* மலேரியா எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

*வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக உள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

* உங்கள் வீட்டு வளாகத்தில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.

*கொசு வலையின் கீழ் உறங்குதல், பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல்,     உடல் முழுமையையும் மறைக்குமாறு நீண்ட ஆடைகளை அணிதல், வீட்டில்
ஜன்னல், கதவு போன்ற இடங்களில் கொசு வலைகளைப் பொருத்துதல் போன்ற     நடவடிக்கைகளால் மலேரியா ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சர்வதேச தடுப்புமருந்து வாரம்  ஏப்ரல் 24-30

நோய்த் தடுப்பு மருந்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்தில் (24 முதல் 30 வரை) சர்வதேச தடுப்பு மருந்து வாரம் (World Immunization Week) கடைபிடிக்கப்படுகிறது.   ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பு மருந்து அந்த நபரின் நோய்த்தடுப்பு மண்டலத்தை ஊக்குவித்து அவரை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. தடுப்பு மருந்து அளிப்பதென்பது பொது சுகாதாரத்துக்கு ஒரு மலிவான முதலீடாக உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மரணங்களில், மூன்றில் ஒரு பகுதியை சரியான தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஐந்தில், ஒரு குழந்தைக்கு ஏதாவது ஒரு முக்கியமான தடுப்பு மருந்து கிடைக்காமல் போகிறது. தொண்டை அழற்சி, தட்டம்மை, கக்குவான், நிமோனியா, போலியோ, ரோட்டோ வைரஸ், வயிற்றுப்போக்கு, ரூபெல்லா மற்றும் டெட்டனஸ் இதுபோன்ற 25 நோய்களை தடுப்பு மருந்துகளால் தடுக்க முடியும்.

2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்தை அளிக்கும் நோக்கத்துடன், 2014 டிசம்பர் 25 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது இந்திர தனுசு திட்டம்.

வானவில்லில் இருக்கும் 7 நிறங்களைப் போல தொண்டை அழற்சி, கக்குவான், டெட்டனஸ், குழந்தைப்பருவ காசநோய், போலியோ, கல்லீரல் அழற்சி மற்றும் தட்டம்மை போன்ற 7 நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தடுப்பு மருந்து அளிப்பதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தடுப்பு மருந்துகளும் தேசிய தடுப்பு மருந்து அட்டவணைப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

 தொகுப்பு: க.கதிரவன்