108 ஆம்புலன்ஸ் தெரியும்...104 24 x 7 மருத்துவ உதவி மையம் தெரியுமா?!



யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்

அவசர கால மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறபோது 108 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் அரசு ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம் என்பது தெரியும். இதேபோன்று 104 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் உடல் நலம், மனநலம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்பதும் தெரியுமா?!

‘‘104 மருத்துவ உதவி சேவை மையம் 30-12-2013 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்குகிற இந்த மையத்தை, 24 மணி நேரமும் தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு மருத்துவம் தொடர்பான தகவல்கள், உடல்நலம் மற்றும் மன நல ஆலோசனைகளைப் பெறுவதோடு, பொதுமக்கள் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த புகார்களையும் தெரிவிக்கலாம். இந்த மையத்துக்கு தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 1300 முதல் 1500 வரையிலான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன’’ என்கிற சிவகுருநாதன், அதன் பல்வேறு செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறார்.

தகவல்கள்

அரசு மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், கண் வங்கிகள், தாய் சேய் நல மையங்கள், விஷ முறிவு சிகிச்சை மையங்கள் மற்றும் தொற்று நோய்கள், பரிசோதனை வசதிகள், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம், முழு உடல் தானம் போன்ற மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தொடர்பான தகவல்களை பெற இந்த மையத்தைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

உதாரணமாக, கண் தானம் தொடர்பான தகவல் பெறப்பட்டவுடன், தொடர்பு கொண்டவரின் அருகிலுள்ள கண் வங்கிக்கு தகவல் பரிமாறப்பட்டு, கண் தானம் செய்பவரின் இல்லத்துக்கு உடனடியாக சென்று, கண் தானம் பெறுவதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை இந்த மையம் செய்து வருகிறது.

இதேபோல 104 மையத்தைத் தொடர்பு கொண்டவர் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து முழு உடல் தானமும் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.

ஆலோசனைகள் நோய் அறிகுறி, அதற்கு உடனடி மருத்துவம் செய்வதற்கு உதவும் மருத்துவ பரிசோதனைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு சிகிச்சை முறைகள், மருந்துகள் தொடர்பான தெளிவுபடுத்தல், மனநலம் மற்றும் அது தொடர்பான தனி நபர் ஐயங்கள் போன்ற மருத்துவம் சார்ந்த ஆலோசனைகளை இந்த மையத்தின் மூலம் பெறலாம்.

மருத்துவர்களின் மறு கருத்து (Second Opinion) மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையம் 24 மணி நேரமும் வயது வரம்பின்றி அனைத்து பாலினத்தவர்களுக்கும் முழுமையான உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இதுவரை பலரின் தற்கொலை எண்ணங்கள் தவிர்க்கப்பட்டு அவர்கள் வாழ்வை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
புகார்கள்

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் சுகாதாரத்துறை தொடர்பான குறைகள் பதிவு செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு
தெரிவித்து அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கான பணியையும் 104 மருத்துவ உதவி சேவை மையத்தின் மூலம் செய்து வருகிறோம்.

மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தேர்வு நேர உதவிமாணவர்களுக்கான தேர்வுகால ஆலோசனைகள், வளரிளம் பருவம் தொடர்பான உடலியல் மாற்றங்கள், உறவுகளிடையே விரிசல், பாலியல் தொடர்பான ஐயங்கள், போதைக்கு அடிமையானதிலிருந்து விடுபடுதல், மூத்த குடிமக்களுக்கான மனநல ஆலோசனை, மகப்பேறுக்குப் பின் ஏற்படும் மனசோர்வு மற்றும் மன அழுத்தம் களைதல் என மாநிலம் தழுவிய 24 மணிநேர மனநல ஆலோசனைக்கான சிறப்பு மையமாகவும் 104 செயல்பட்டு வருகிறது.

இதுவரை 66,330 அழைப்புகள் மனநல ஆலோசனைக்காக பெறப்பட்டுள்ளது. தற்போது அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்கிற மாணவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த சில பிரச்னைகள் உள்ளது. இதற்கு மாணவர்கள் மட்டுமே காரணமல்ல. அந்த மாணவனின் ஆசிரியர், பெற்றோர், உறவினர், நண்பர்கள் மற்றும் அவனைச் சுற்றியிருக்கும் பல்வேறு சூழ்நிலைகளும் சேர்ந்துதான் காரணமாகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற மாணவர்களின் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனைகள் இந்த மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இம்மையத்தை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என்று யார் வேண்டுமானாலும் தொடர்புகொண்டு இது சம்பந்தப்பட்ட ஆலோசனைகளைப் பெறலாம்.  

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிற இந்த ஆண்டுக்கான திட்டத்தை பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் தேர்வு காலத்தின் போது மாணவர்களுக்குரிய சிறப்பு ஆலோசனைகள் மூன்று கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுக்கு முன் தயார்படுத்துதல், தேர்வை எதிர்கொள்ளுதல், தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் என மூன்று பருவங்களாக இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

தன்னம்பிக்கையோடு தங்களைத் தேர்வுக்கு எப்படி தயார்படுத்திக் கொள்வது, தேர்வு காலங்களில் என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொள்வது, மன அழுத்தத்தை நிர்வகிப்பது, உடல் மற்றும் உள்ளத்தின் சோர்வை நீக்கி மனதை உற்சாகமாகவும் உடலை சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்வதற்கு என்ன மாதிரியான பொழுதுபோக்கு யுத்திகளை கையாளலாம், தேர்வுகாலத்தில் உண்டாகும் அச்சம், கவலை, ஏக்கம் போன்றவற்றை எப்படி நிர்வகிப்பது, நினைவாற்றலை அதிகரிக்க என்ன செய்யலாம், தாழ்வு மனப்பான்மை, தனிமை, எண்ணச் சிதறல்கள் போன்ற பிரச்னைகளுக்கு என்ன செய்யலாம் என்கிற இதுபோன்ற ஆலோசனைகள் 104 மையத்தைத் தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

-க.கதிரவன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்