மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட் ?!



ஆராய்ச்சி

அதிக ஸ்க்ரீனிங்... அதிக ஆபத்து...

மொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது Journal of medical clinical psychological sceince இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை.

1991ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் பருவ வயதினரின் பொழுதுபோக்கு நேரத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, குறைந்தது 5 மணி நேரமாவது மின்னணு திரைகளை பார்த்தபடி இருந்தோரில் 50 சதவீதத்தினருக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதாக தெரிய வந்தது.

அதேநேரத்தில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக திரைகளை பார்த்தவர்களில் 28 சதவீதத்தினருக்கே இத்தகைய அறிகுறிகள் தோன்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் திரைகளின் முன் தங்கள் நேரத்தை செலவிடுபர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளுக்கான அறிகுறிகளும் அதிகரிப்பதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தாய்ப்பால் எக்ஸிமாவைத் தடுக்கும்

குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரையாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இப்படி செய்வது அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் Eczema என்ற சரும நோய் வருவதைத் தடுக்க உதவும் என்கிறது Jama pediatrics இதழில் வெளியாகியுள்ள ஆய்வு. உலகிலேயே மிகவும் குறைவான காலம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கமுள்ள பிரிட்டனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

13 ஆயிரம் அன்னையர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி தாய்ப்பால் கொடுத்த குழந்தைகளுக்கு அவர்களின் பருவ வயதுகளில் எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராமல் இருப்பதற்கு 54 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலின் பல்வேறு நன்மைகளில் இதுவும் ஒன்று.

உடற்பயிற்சி புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்!

உடல் வலிமையை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகளைச் செய்வது மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்கள் வருவதை 23 சதவீதம் குறைப்பதாக, American journal of epidemiology இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

உடற்பயிற்சி குறித்து செய்யப்பட்ட பெரிய ஆய்வுகளில், 11 ஆய்வுகளை அலசிய ஆராய்ச்சி யாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுமட்டுமல்ல... உடல் பலத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சியால், புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை 31 சதவீத அளவுக்கு குறைக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

- க.கதிரவன்