கப்போ தெரபி



கலர் தெரபி, கப் தெரபி, களிமண் தெரபி இப்படி விதவிதமான தெரபிகள் வரிசையில் புதிதாய்ச் சேர்ந்திருக்கிறது கப்போ தெரபி (Kappo therapy).

ஜப்பானின் செங்கோகு நாகரீக காலத்தில் போர்களில் காயமடையும் ராணுவ வீரர்களுக்கு இந்த சிகிச்சையை அளித்து வந்துள்ளனர். ஜப்பானிய சாமுராய் ராணுவ கலைகளின் அடிப்படையில் பிறந்த கப்போ சிகிச்சையில் இரண்டு முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதில் சாப்போ எனப்படுவது எதிரிகளை தாக்குவதற்கும், அவர்களை அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு நேரெதிரான கப்போ வழிமுறையில் போரில் காயமடைந்த தன் நாட்டு வீரர்களை குணப்படுத்தி காப்பாற்றுகிறார்கள்.

1000 வருடங்கள் பழமையானதும், போர் வீரர்களின் உடல்வலியைப் போக்கும் வல்லமை படைத்ததுமான இந்த கப்போ சிகிச்சையை அகிடோ சாய்காய் என்னும் மூத்த குரு தன் சீடர்கள் மூலம் பரவலாகக் கொண்டு சேர்த்தார்.

இன்று நவீன சிகிச்சைமுறைகள் எத்தனையோ வந்தாலும், பழமையான வழிமுறையான கப்போ சிகிச்சை இன்றுள்ள வாழ்வியல் முறைகளால் பலவிதங்களில் பாதிக்கப்படும் நமது உடலை உடனடியாக குணப்படுத்தவும், புதுப்பிக்கவும் மிகச் சிறந்த சிகிச்சையாக இருப்பதால் உலகம் முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

சரி... இந்த சிகிச்சையை எப்படி செய்கிறார்கள்?

நம் உடலில் உள்ள தசைகள், எலும்புகள் மற்றும் தசைக்கூட்டு அமைப்புகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் மூட்டுகளை அசைத்தும், திருப்பியும், மென்மையான அழுத்தங்கள் கொடுப்பது போன்ற கூட்டுத் தொழில்நுட்பம் மூலம் மூட்டுகளை நீட்சி அடையவும், தசைநார்களை தளர்வடையவும் செய்வதே கப்போ சிகிச்சை முறை.

கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், கைகளாலேயே அழுத்தம் கொடுத்து விரைவில் குணமடையச்செய்வது இச்சிகிச்சையின் கூடுதல் சிறப்பு. இதனால் அடிக்கடி காயம் ஏற்பட்டு போட்டிகளில் விளையாட முடியாமல் வருந்தும் விளையாட்டு வீரர்களிடையே இந்த சிகிச்சை தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

- இந்துமதி