புற்றுநோய் சிகிச்சையில் மிகப்பெரிய முன்னேற்றம்!



நிகழ்ச்சி... மகிழ்ச்சி...

புற்றுநோய்க்கு எதிராகப் பணியாற்றி வரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடம் பலவிதங்களில் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மாரத்தான் போட்டி ஒன்றை சமீபத்தில் நடத்தியது. இதன் அறிமுக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மருத்துவமனையின் தலைவரான டாக்டர் சாந்தாவிடம் புற்றுநோய் சிகிச்சையில் தற்போதைய நிலைமை பற்றிக் கேட்டோம்...

‘‘1954-ம் ஆண்டு இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே புற்றுநோயை முழுவதும் ஒழிப்பதற்கான முயற்சிகளில் பல மருத்துவர்
களும், தன்னார்வலர்களும், களப்பணியாளர்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.அப்போதெல்லாம், இந்நோய்க்கான தரமான சிகிச்சைகள் அளிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்போது புற்றுநோய் பற்றிய புரிதலே பரவலாக இல்லை. மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக இருந்த காரணத்தால் புற்றுநோயை தடுப்பதும், வந்துவிட்டால் குணப்படுத்துவதும் அரிதாக இருந்தது.

ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள அபாரமான வளர்ச்சி காரணமாக, புற்றுநோய் பாதிப்பை இப்போது தொடக்க நிலையிலேயே குணப்படுத்த முடியும் என்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறோம். அதிலும், ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு அதனை வென்று வெளியில் வந்தவர்கள் எத்தனையோ பேர் மகிழ்ச்சியோடு இப்போது இருக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் சில பிரபலங்களும் உண்டு.அந்த அளவு வளர்ச்சியை நாம் இப்போது பெற்றிருக்கிறோம். குறிப்பாக, Paediatric cancer என்கிற குழந்தைகளுக்கு ஏற்படுகிற புற்றுநோயை 65 சதவிகிதம் முழுமையாக இப்போது குணப்படுத்த முடிகிறது. இது சிறந்த உதாரணம்.

அதனால் பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புற்றுநோயை நம்மால் முழுமையாக ஜெயிக்க முடியும். ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் புகையிலையினாலேயே 40 சதவிகிதம் ஏற்படுகிறது. அதைத் தடுத்தாலே நாம் இன்னும் சிறப்பான இடத்தை இதில் அடைய முடியும்’’ என்கிறார் நம்பிக்கையுடன்!

- வி.ஓவியா