வாழ வைக்கும் இலை !



முன்னோர் அறிவியல்

விசேஷ நாட்களில் விதவிதமான பல உணவுப்பொருட்கள் வைத்து விருந்து அளிப்பார்கள். அதையே ‘தலைவாழை விருந்து’ என்று பெருமையோடு குறிப்பிடுகிறோம். என்னதான் சிறப்புமிக்க உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டாலும், அவற்றை தாங்கும் இலையின் பெயரில் அழைக்கப்படுவதே வாழை இலையின் சிறப்பை உணர்த்தும். வெறுமனே உணவு பரிமாறுவதற்கான பொருளாக மட்டுமே அல்லாமல், வாழை இலைக்கென்று எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. உணவியல் நிபுணர் ராதிகா வாழை இலையில் மகத்துவங்கள் பற்றிப் பேசுகிறார்.

‘‘என்ன உணவு சாப்பிட்டாலும் அது வாழை இலையில் சாப்பிடும்போது அதன் ருசி இன்னும் அதிகமாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைக்கு வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறது.

வீடுகளில் விசேஷ நேரங்களில் மட்டும்தான் சாப்பிடுகிறோம், அதை விட்டால் வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடுகிறோம். அதிலும் கூட இப்போது வாழை இலைபோல் பிளாஸ்டிக் இலை புழக்கத்தில் வந்துவிட்டதும், அதனால் நமக்கு நோய்கள் வரும் என்பதும் வேறு கதை.

சரித்திரத்தைப் புரட்டினால் பேரரசர்களும், செல்வத்தில் புரளும் பிரபுக்களும் தங்கத் தட்டில் உணவருந்தியதாக படித்திருப்போம். இந்த காலத்திலும்கூட பெரும் கோடீஸ்வரர்கள் தங்கத் தட்டிலும், வெள்ளித் தட்டிலும் உணவருந்துவதாகக் கேள்விப்படுகிறோம். வெறும் பகட்டு, செல்வச் செருக்கு என்றுதான் அதனை பலரும் நினைப்பார்கள். ஆனால், அது மேலோட்டமான புரிதல்தான்.

தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களாலான தட்டில் சாப்பிடும்போது அது உணவில் இருக்கும் நோய்க்கிருமிகளை நாசம் செய்து நமது உடலுக்கு தடுப்பாற்றல் சக்தியைத் தருகிறது என்பதுதான் அதன் பின் இருக்கும் முக்கிய காரணம். இந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைக் காட்டிலும் பல மடங்கிலும், பல வகையிலும் சிறப்பானது வாழை இலை உணவு என்பதுதான் வாழை இலையின் தனிப்பெரும் பெருமை.

இன்றைய தினம் நம் மக்கள் நோய் வராமல் தங்களை காத்துக் கொள்ள எத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா? மினரல் வாட்டரைக் கூட காய்ச்சிதான் குடிக்கிறார்கள்.

சாதாரண ஜுரம் வருவது போல் தெரிந்தாலே, இருக்கும் அத்தனை சோதனைகளையும் செய்துகொண்டு மருந்தும் கையுமாக அலைகிறார்கள். அத்தனைக்கும் காரணம் நாம் பாரம்பரிய விவசாயத்தையும், உணவையும், உணவுமுறையையும் தொலைத்ததுதான்.

உண்ணும் உணவில் இருந்து அந்த உணவை பரிமாறும் இலை வரை நம்மவர்கள் காரணத்தோடுதான் வகுத்து வைத்திருக்கிறார்கள். அதை நாம் மீட்டெடுப்பதே ஆரோக்கிய வாழ்வுக்குத் தீர்வாக இருக்கும்.

அதற்கு வாழை இலை உணவு மிகச்சிறந்த வழி. விஞ்ஞானப்பூர்வமாக பார்த்தோமேயானால், வாழை இலையின் மேல் உள்ள பச்சையம்(Chlorophyl) உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நன்கு பசியைத் தூண்டுகிறது. ஆரோக்கியமான உடலுக்கு உணவுதானே பிரதானம். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பதற்கு இது ஒன்றே சிறந்த சான்று.

சூடான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்படும்போது, அதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலந்து நம் உடலுக்குள் சென்று சேர்கிறது. பரிமாறப்படும் உணவில் ஏதேனும் கிருமிகள் இருப்பினும், அதை அழிக்கும் திறன் வாழை இலைக்கு உண்டு. அதனால்தான் வாழை இலையை Antibacterial என்கிறோம்.

வாழை இலையில் உள்ள குளோரோபில் அல்ஸர் மற்றும் சரும நோய்கள் வருவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவை எளிதில் செரிக்க உதவும். சூடான பொருள் இந்த இலையில் பரிமாறப்படும்போது உணவின் சுவை இன்னும் கூடும்.

உணவு பரிமாறுவதற்கு முன் இலையில் சிறிதளவு நெய்யை இலை முழுவதும் தடவி, அதன் மேல் சூடான உணவை இட்டு அதன் சூடு தணிவதற்குள் உண்ணும்போது, அல்ஸர் போன்ற வயிற்று நோய்கள் காணாமல் போகும்.

ஆயுர்வேதத்தில் வாத ரோகம் என்பது பல்வேறு நோய்களை குறிக்கும், சாதாரண கை கால் வலியில் ஆரம்பித்து பக்கவாதத்தில் கொண்டு போய் விடக்கூடியது வாதத்தினால் வரக்கூடிய நோய்களே. தினசரி வாழை இலையில் உணவு உட்கொள்ளும்போது நம் நரம்பு மண்டலம் வலுப்பெற்று, இந்த வாத ரோகம் தாக்கும் அபாயமே இல்லாமல் பெரிதளவு தடுக்கப்படுகிறது.

மேலும், நாள்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் புற்றுநோய் போன்றவைகள் நம்மை தாக்கி விடாமலும் வாழை இலை உணவு நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட வாழை இலை உணவை இனிமேலும் தவற விடாதீர்கள்!’’

வாழை இலை குளியல்

வாழை இலையை உடல் முழுக்க கட்டிக்கொண்டு சூரிய ஒளி படும் வகையில் தரையில் விரித்து படுத்துக்கொள்வது வாழை இலை குளியல் ஆகும். சூரியக்கதிர்கள் வாழையிலை மேல் பட்டு உடலுக்குள் செல்லும்.

உடல் வியர்த்து உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது. மேலும் வாழையில் உள்ள Antibacterial மற்றும் பச்சை தன்மை உடலில் உள்ள சரும நோய்களைப் போக்குகிறது. மேலும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது, உடல் பருமன் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கிறது.

தீ விபத்துக்கு...

தீ விபத்தில் மோசமாக காயமடைந்தவர்களை வாழை இலையின் மேல் கிடத்துவதை நாம் அறிவோம். வாழை இலை தீக்காயத்தில் ஒட்டிக் கொள்ளாது என்பது இதற்கு முக்கிய காரணம் என்பதுடன், அது ஒரு நுண்ணுயிர்க் கொல்லி(Antibacterial) யாக செயல்பட்டு தீக்காயத்தின் தொற்றை அதிகரிக்காமல் விரைவான குணத்துக்கு வழி வகுக்கிறது என்பதும் முக்கிய காரணம்.

- க.இளஞ்சேரன்
படம்: ஆர்.கோபால்