தேசிய வலிப்பு நோய் தினம் (National Epilepsy Day)



சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

ஹெல்த் காலண்டர்


ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 17-ஆம் நாள் வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கும் விதமாக இந்தியாவில் தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வலிப்பு என்பது ஒரு நீடித்த மூளைக் கோளாறு. இதனால் அடிக்கடி கால் மற்றும் கைகளில் வலிப்பு ஏற்படும். மூளை செல்கள் மற்றும் மூளை நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவாகவே வலிப்பு நோய் உண்டாகிறது. இது அனைத்து வயதினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கு வலிப்புநோய் உள்ளது. இவர்களில் 80 சதவிகிதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். வலிப்பு நோய்க்கு சிகிச்சை உண்டு என்றாலும் வளர்ந்து வரும் நாடுகளில் 4-ல் 3 சதவிகிதம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சிகிச்சை சரியாக கிடைப்பதில்லை. இந்தியாவில் ஒரு கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம்.

வலிப்பின் அறிகுறிகள்

திடீரென காலும் கையும் கட்டுப்படுத்த முடியாமல் வெட்டி இழுத்தல், நினைவு இழத்தல், கை மற்றும் காலில் குத்தும் உணர்வு, கை, கால், முகத்தில் தசை இறுக்கம் போன்றவை வலிப்பு நோயின் அறிகுறிகளாக உள்ளது.

வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

பிறப்புக்கு முன்போ, பின்போ ஏற்படும் மூளைச்சிதைவு, மரபுக் கோளாறுகள், மூளைத் தொற்று, பக்கவாதம் மற்றும் மூளைக்கட்டி, தலையில் காயம் அல்லது விபத்து, குழந்தைப் பருவத்தில் நீடித்த காய்ச்சல் போன்றவை வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளது.
வலிப்பைக் கையாள்வதற்கான ஆலோசனைகள்

*வலிப்பைக் கண்டு பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம்.
*வலிப்பு வரும்போது அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கக் கூடாது.
*வலிப்பு வந்தவருக்கு அருகில் இருக்கக்கூடிய கூர்மையான, ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும்.
*கழுத்தில் இறுக்கமாக இருக்கும் ஆடையைத் தளர்த்த வேண்டும்.
*வாயில் இருக்கும் திரவம் பாதுகாப்பாக வெளியேற நோயாளியை ஒரு பக்கமாக மெதுவாகப் புரட்ட வேண்டும்.
*தலைக்கு அடியில் மென்மையான துணி, தலையணை போன்ற ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.
*நாக்கைக் கடித்துவிடக் கூடாது என்று நினைத்து வாயில் எதையும் வைக்கக்கூடாது.
*மருத்துவ உதவி கிடைக்கும்வரை யாராவது உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
*வலிப்பு வந்தவருக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களைக் கவனித்து மருத்துவரிடம் தெரிவித்தால், அவருக்கு சரியான சிகிச்சையளிக்க அது உதவியாக இருக்கும்.
*வலிப்பு வந்தவரை ஓய்வெடுக்க அல்லது தூங்க விட வேண்டும்.
*வலிப்பு நோய்க்கு மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். அதற்கு சிகிச்சையைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதே முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய  ஒன்று.
*வலிப்பு என்று கண்டறிந்தவுடன் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் நிலை மேலும் மோசமாவதைத் தடுக்கலாம். 

வலிப்பு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

*வலிப்பு இல்லாவிட்டாலும் மருத்துவர் ஆலோசனைப்படி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியாக தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும்.

 *மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தை நிறுத்தக்கூடாது. வேறு மருந்தை உட்கொள்ளும் முன்னர், பக்க விளைவுகளைத் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. *வலிப்பு நோயைத் தூண்டும் என்பதால் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சர்வதேச கழிப்பறை தினம் (World Toilet Day)

சர்வதேச கழிப்பறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 2001 நவம்பர் 19-ம் தேதி Jack Sim என்பவரால் உலக கழிப்பறை அமைப்பு (World Toilet Organization) நிறுவப்பட்டது. 2013-ம் ஆண்டு ஐ.நா.பொது சபையில் 122 நாடுகளின் ஆதரவோடு, இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை சர்வதேச கழிப்பறை தினமாக அனுசரிப்பது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2030-ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் கிடைப்பதற்கு, நிலையான வளர்ச்சி இலக்குகளை தீர்மானித்து அதை செயல்படுத்த வேண்டும்.

கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சரியான முறையில் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்து, பாதுகாப்பாக வேறுவகையில் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதை அதிகரிப்பதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் 400 கோடி மக்களுக்குக் கழிப்பறை போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை. உலகில் 3-ல் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை. சுகாதார சீர்கேடுகளால் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் வரை மரணமடைகின்றனர் என்கிறது புள்ளிவிபரம்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கழிப்பறை சார்ந்த சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. பணியிடத்தில் கழிப்பறையும் சுகாதாரமும் இல்லாமல் இருப்பது ஊழியர்களுக்கு வசதியின்மையையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

 இதனால் பணியாளர்களின் வருகை விகிதம், ஆரோக்கியம், மன ஒருமைப்பாடு மற்றும் நிறுவனத்தின் உற்பத்தித் திறனிலும் பாதிப்பு ஏற்படுகிறது. பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மனிதக் கழிவுகளை அகற்றும் முறைநாம் உட்கொள்ளும் உணவும், நீரும் செரிமானம் அடைந்து உடலுக்குத் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் கொடுத்த பிறகு, வியர்வை, சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. இந்த உடல் கழிவுகளை பாதுகாப்பான முறையில், சுற்றுச்சூழல் நலம் குறித்த பொறுப்புணர்வோடு நாம் ஒவ்வொருவரும் அகற்ற வேண்டியது அவசியம்.

*உடல் கழிவுகளை மூடப்பட்ட ஆழமான தொட்டி அல்லது குழிக்குள், மனிதர்களோடு நெருங்கிய தொடர்பில்லாதவாறு, சற்று ஒதுக்குப்புறமாக அமைத்து, சரியான முறையில் சேகரிக்க வேண்டும்.

*சேகரிக்கப்பட்ட அந்த கழிவுகளை அதற்குரிய இயந்திரங்களின் உதவியோடு சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

*அப்புறப்படுத்திய கழிவினை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்து உரம் மற்றும் மின்சாரம் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.

திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, சுகாதாரமான முறையில் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கழிப்பறையை உருவாக்க வேண்டும். மக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் சுகாதாரமான பொதுக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவதோடு, அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்க நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.

கழிப்பறையை பயன்படுத்துவதன் நன்மைகள்

*தனிநபர் அந்தரங்கம் பாதுகாக்கப்படுகிறது.
*சுத்தமும் சுகாதாரமும் மேம்படுகிறது.
*நிமோனியா, புழு உண்டாகுதல், வயிற்றுப்போக்கு போன்றவை தடுக்கப்படுகின்றன.
*பள்ளிகளில் சரியான கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் பள்ளிக்கு வரமறுக்கும் பெண் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கும்.
*திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும்.
*சுத்தம், சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் ஆரோக்கிய வாழ்விற்கான செலவைக் குறைக்கலாம்.
*ஆற்றுநீர், ஏரிநீர், குளத்துநீர் போன்ற நீர் ஆதாரங்களின் சுகாதார சீர்கேடுகளைக் குறைக்கலாம்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் (New Born Care Week)

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 15 முதல் 21-ம் தேதி வரை இந்தியாவில் பிறந்த பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் உயிர் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

இந்தியாவில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் 70 குழந்தைகள் ஓராண்டுக்குள் மரணமடைகின்றன என்கிறது ஒரு புள்ளிவிபரம். பிறந்த குழந்தை இறப்பில் மூன்றில் இரண்டு சதவிகிதம் முதல் வாரத்தில் நிகழ்வதால் குழந்தை பிறந்த தினம் முதல் 4 வாரங்கள் வரை மிக முக்கிய காலகட்டமாக கருதப்படுகிறது.

தொற்று, கருவுக்கும் குழந்தைக்கும் ஆக்சிஜன் குறைவாகக் கிடைத்தல், குறைப்பிரசவம், மகப்பேறில் சிக்கல் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை பிறந்த குழந்தை இறப்புக்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதுபோன்ற குழந்தை இறப்புகளைத் தடுப்பதற்கு தாய்சேய் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வினை தாய்மார்களோடு சேர்த்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தாய்சேய் பராமரிப்பு பின்வரும் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. பேறுகாலத்துக்கு முன்பான பராமரிப்பு - முதல் நிலை (கர்ப்ப காலத்தில் தாய்சேய் நலம் பேணல்) தாய்க்கு டெட்டனஸ் தடுப்பூசி போடுதல், ரத்தசோகை மற்றும் மிகை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் சத்தான உணவு எடுத்துக் கொள்வது, பேறுகாலத்திற்கு ஆயத்தமாதல், ஆபத்தான அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது போன்றவை தாய்சேய் பராமரிப்பின் முதல் நிலை.

பேறுகாலப் பராமரிப்பு - இரண்டாவது நிலைசுகாதாரமான குழந்தைப் பேறு, அதைத் திறனுடன் கையாளுதல், அவசரகால குழந்தைப்பேறு பராமரிப்பை உரிய நேரத்தில் அணுகுதல், கர்ப்ப காலம் மற்றும் பேறுகாலத்தில் கவனம் செலுத்துதல் போன்றவை இரண்டாவது நிலை.

பேறுகாலத்துக்குப் பின் தாய்சேய் பராமரிப்பு - மூன்றாவது நிலைகுழந்தை பிறப்புக்குப் பின் ரத்தக்கசிவு, பிறப்பு பாதைக் காயம், கருப்பை பிறழ்தல் போன்ற சிக்கல்களைக் கண்டறிதல், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆலோசனைகளைப் பெறுதல், பிறந்த குழந்தையின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நலத்தைப் பராமரித்தல் போன்றவை மூன்றாவது நிலை.

கர்ப்பகால ஆலோசனைகள் பேறுகாலப் பிரச்னைகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்துதல், கர்ப்ப காலத்தில் குறைந்தபட்ச அடிப்படை பராமரிப்பு, ஊட்டச்சத்து ஆலோசனை, இரும்பு மற்றும் பிற உயிர்ச் சத்துக்களை வழங்குதல், மருத்துவமனை பேறை ஊக்குவித்தல் அல்லது முறையான பயிற்சி பெற்றவர்களால் பேறுகாலம் பார்த்தல், பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவமனையில் சரியான பராமரிப்பும் சிகிச்சையும் பெறுதல், சரியான நேரத்தில் உரிய தடுப்பு மருந்துகளை பிறந்த குழந்தைக்கு அளித்தல் போன்றவற்றை
கவனத்தில் கொள்வது அவசியம்.

குழந்தைப் பேறுக்குப் பின் நினைவில் கொள்ள வேண்டியவைகுழந்தையைக் கையாளும் முன் சோப்பு அல்லது கிருமிநாசினியால் கை கழுவுதல், குழந்தையின் தலையையும் கழுத்தையும் சேர்த்தவாறு தாங்கிப் பிடிக்கும் நிலைகளை அறிந்து கொள்ளுதல், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய் பாலூட்டல், 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டி அதற்கு பின்னரே திட உணவுகளை கொடுத்தல் போன்றவற்றை நினைவில் கொள்வது அவசியம்.

எடை குறைவான பிறப்புக்கு ‘கங்காரு தாய் பராமரிப்பு’ முறையை பின்பற்ற வேண்டும். அதாவது தாய் தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துத் தன்னுடைய உடலோடு குழந்தையின் உடலுடன் ஸ்பரிசம் ஏற்படும்படி தாய்ப்பால் அடிக்கடி புகட்ட வேண்டும்.

திட உணவு தேவைப்படும்போது அல்லது 24 மணி நேரத்தில் 8 முறை உணவளிக்க வேண்டும். சடங்கு என்ற பெயரில் தாய்ப்பாலுக்குப் பதில் தேன், நீர் அல்லது வேறு பொருட்களைக் கொடுக்கக்கூடாது.

இதனால் குழந்தைக்கு தொற்று ஏற்படலாம். தொப்புள்கொடி விழுந்து காயம் ஆறும் வரையிலான, 1 முதல் 4 வாரங்கள் வரை பஞ்சுக் குளியலே அளிக்க  வேண்டும். கர்ப்ப காலத்திலும் பேறுகாலத்துக்குப் பின்னரும் தாய்க்கு அளிக்கக்கூடிய சிறந்த பராமரிப்பே, பிறந்த குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பராமரிப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தொகுப்பு - க.கதிரவன்