பழங்கள் பலவிதம்



இப்போதெல்லாம் பழக்கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விதவிதமான புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. வாயில் நுழையாத அவற்றின் பெயர்களும், வினோதமான அவற்றின் வடிவங் களும் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது. கூடவே, கொஞ்சம் குழப்பத்தையும் தூண்டுகின்றன. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, நமக்குத் தெரிந்த பழங்களை சாப்பிடும்போது கிடைக்கும் சத்துக்கள் இதிலும் கிடைக்குமா என்று பல சிந்தனைகள் மனதுக்குள் ஓட வெளியே வந்துவிடுகிறோம். அவற்றைப் பற்றி அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!

டிராகன் ஃப்ரூட் (Dragon fruit)
சிவப்பு நிறத்தில் இருக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. இனிப்பு சுவைகொண்ட இந்தப்பழம் மேற்புறம் கரடு முரடாக பார்ப்பதற்கு அன்னாசிப்பழம் போல் இருந்தாலும் உள்ளே மிருதுவாக சதைப்பற்று மிகுந்து இருக்கும்.  அதிகமான நீர்ச்சத்துடைய இந்த பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. கொழுப்பைக் குறைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதால் புற்றுநோய், இதயநோய்க்கு எதிராக வேலை செய்கிறது. உடல்பருமன் குறைக்க விரும்புபவர்களுக்கு டிராகன் ஃப்ரூட் ஏற்றது. செரிமானத்தைத் தூண்டச் செய்வதோடு, பூஞ்சை, பாக்டீரியாக்களையும் அழிக்கக்கூடியது.

ரம்பூட்டான் ஃப்ரூட் (Rambutan fruit)
வைட்டமின் பி-3 அதிகம் உள்ள பழம் இது. உடலின் கொழுப்பு அளவைக் குறைத்து, இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது. இதில் நிறைந்துள்ள B3 வைட்டமின்கள் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு காரணமான அட்ரினல் சுரப்பியின் வேலையைத் தூண்டுகிறது. மேலும், இப்பழத்தில் இருக்கும் நியாசின் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் மிகுந்துள்ளது. உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ரம்பூட்டான் பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, ஆஸ்துமா நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

பெப்பினோ மெலன் (Pepino melon)
பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, பெரு, சிலி நாடுகளில் அதிகமாக விளைகிறது. இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் வைட்டமின் ஏ, சி, கே, பி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்தது. இரும்பு, செம்பு தாதுப்பொருட்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பிற்கு உதவுபவை. இதில் இருக்கும் கால்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகிறது. மேலும் இதிலுள்ள டையூரிடிக் அமிலம் சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவோ, என்னவோ இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சூப்பர் ஃப்ரூட் !

மங்குஸ்தான் ஃப்ரூட் (Mangosteen fruit)

மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் அதிகம் விளையும் பழம் இது. மங்குஸ்தான் பழத்தின் தோல் தடிமனாக இருக்கும். இதை உடைத்தால் இளஞ்சிவப்பு நிறத்தில் சுளைகள் இருக்கும். மங்குஸ்தான் பழம் வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைப் போக்கும். வாய் துர்நாற்றத்தை நீக்கவும் சிறந்த மருந்து. புற்றுநோய்க்கு எதிரானது. உடல் சூட்டைத் தணித்து உடலின் சூட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீர் சுருக்குக்கும், கண் எரிச்சலுக்கும் சரியான மருந்து. மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த இழப்பை குறைக்கவும் உதவுகிறது. இந்த பழத்தின் தோல் பல் வலிக்கும் மருந்தாவதுடன் தொற்று நோய் கிருமிகளையும், பூஞ்சைத் தொற்றுகளையும் அழிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கும் பழம் என்பதுடன், மனநோய்க்கான மருந்தாகவே சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஜபூடிகாபா ஃப்ரூட்(Jabuticaba Fruit)
பார்ப்பதற்கு கருப்பு திராட்சையைப் போலவே இருக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இதை பிரேசிலியன் திராட்சை என்றும் சொல்வார்கள். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த பழம், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கக்கூடிய Anthocyanins மிகுந்தது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இந்தப்பழத்தின் சாற்றையும் உபயோகிக்கிறார்கள். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் அழற்சி நோய்களுக்கும் எதிரானது. ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கும், தொண்டைப் புண்ணுக்கும் மருந்தாகிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.

துரியன் பழம் (Durian Fruit)
மலேசியாவின் பிறப்பிடமான துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிறது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. இதிலுள்ள வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் ரத்தசோகையைப் போக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்குவதால் இளமையான தோற்றத்தை கொடுக்கும். இப்பழத்தில் காணப்படும் ஃபைரிடாக்சின் மன அழுத்தத்தை போக்குவதோடு தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி. கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் துரியன் பழம் சாப்பிடலாம். ஆண்களின் விந்தணுக்களை பெருக்கக்கூடியது.

ஜுஜுபி ஃப்ரூட் (Jujube fruit)
சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பழம் நம்மூர் இலந்தைப்பழம் போலவே சிவப்பான தோற்றத்தைக் கொண்டது. இதனால், சீமை இலந்தை என்றே அழைக்கிறார்கள். இனிப்பு சுவை கொண்டது. மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நியாசின், கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு தாதுப்பொருட்கள் நிறைந்தது. சத்துக்கள் நிறைந்த பழம் என்பதால் சீனாவில் இந்தப் பழத்தை காய வைத்து மருந்தாகவே பயன்படுத்துகிறார்கள். மற்ற சிட்ரஸ் பழங்களைக் காட்டிலும் 20 மடங்கு அதிகமான வைட்டமின் சி கொண்டது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது; கல்லீரல் நோய்களுக்கு எதிரானது; ரத்த சோகையை நீக்குவது; புற்றுநோய்களின் செல்களை அழிப்பது என்று இதன் பலன் தரும் பட்டியல் ரொம்பவும் நீளம். தோல் சுருக்கம், வறட்சியைப் போக்கி முகத்தைப் பொலிவாக்குவதால் சருமப் பராமரிப்பு மருந்துகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்டார் ஃப்ரூட் (Star Fruit)
கோல்டன் க்ரீன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம் இலங்கையில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. திராட்சை மற்றும் ஆப்பிள் போன்று புளிப்பு, இனிப்பு கலந்த சுவையுடையது. ஜெல்லி போன்று வழுவழுப்பாக இருப்பதால் சாலட், ஸ்மூத்தி, ஜூஸ், ஃபலூடா போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் மிகுந்துள்ளதாலும், மிகக் குறைந்த கலோரிகளே இருப்பதாலும் இப்பழத்தை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து மிகுந்த இந்தப்பழம் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு குடலில் சேராமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பெருங்குடலில் வெளிப்படும் நச்சுப்பொருட்களுக்கு எதிராக செயல்பட்டு,  பெருங்குடல் அழற்சியையும் தடுக்கிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடிய பி காம்ப்ளக்ஸ், ஃபோலேட்ஸ், வைட்டமின் B6 போன்றவையும் நிறைந்தது ஸ்டார் ஃப்ரூட். இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத் துடிப்பை சீராக்குகிறது. இப்பழத்தின் சாறினை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.