மச்சங்கள்...மருக்கள்...குழப்பங்கள்....Health and Beauty

மச்சங்கள் அனைவருக்கும் அழகானதாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு மச்சங்கள் முக அழகைக் கெடுக்கும் விதத்திலும், விரும்பத் தகாததாகவும் அமைந்துவிடுகிறது. திடீரென்று மச்சம் புதிதாகவும் தோன்றுவது உண்டு. அதேபோல் மருவும் சிலருக்குத் திடீரென தோன்றி அருெவறுப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்த மச்சங்கள் மற்றும் மருக்கள் தொடர்பான குழப்பங்களுக்கான தீர்வுகள் பற்றி சரும நல மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம் கேட்டோம்.மச்சங்களினால் ஏதும் பாதிப்புகள் உண்டா?‘‘நம் முகத்தில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது ஒரு சில இடத்தில் மிக அதிகமாக சுரந்து அடைப்பை ஏற்படும்போது அந்த இடத்தில் மச்சங்கள் தோன்றுகிறது.

பிறந்த சில குழந்தைகளுக்கு கால் அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து இருக்கும்.  இது அவர்கள் வளர வளர மறைந்துவிடும். கருப்பு தவிர வெள்ளை, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களிலும் மச்சங்கள் காணப்படும். ஆரோக்கியம் என்ற அளவில்மச்சங்களினால் பாதிப்புகள் ஏதும் பெரிதாக ஏற்படுவதில்லை.

ஆனால், மச்சங்களின் மேல் அரிப்போ அல்லது திடீரென்று மச்சத்தின் அளவு பெரிதானாலோ கவனிக்கவேண்டியது அவசியமாகிறது. மேலும் ஓரளவுக்கு மேல் மச்சத்தின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் மரபணுக் கோளாறாகவோஅல்லது சருமப் புற்றுநோயாகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்துக்கு, முதுகுப் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட மச்சங்கள் இருந்தாலோ அல்லது உடலில் பழுப்பு நிற மச்சங்கள் அதிகம் இருந்தாலோ அவற்றைப் பற்றி தெளிவுப்படுத்திக் கொள்வது அவசியம்.’’

மச்சங்கள் புதிதாக தோன்ற ஆரம்பிக்குமா?
‘‘பிறக்கும்போது இருக்கும் மச்சங்கள் தவிர சிலருக்கு வளர்ந்த பிறகும் புதிதாக உருவாகலாம். நமது சருமத்தில் இருக்கும் மெலனின் சுரப்பைப் பொறுத்து அவை திடீரென தோன்றுகின்றன. இந்த வகை மச்சங்கள் வளர்வதாக நினைக்கின்றனர்.

இந்த மச்சங்கள் ஒருவர் வளர வளர அதுவும் பெரிதாகும். சிலருக்கு இது பெரிதாகி கருப்பு நிறத்தில் மருவாக மாறவும் வாய்ப்புள்ளது. இதனால், எந்த பிரச்னையும் இருப்பதில்லை. ஆனால், சிலருக்கு திடீரென்று பெரிதாகும்போது சிகிச்சை தேவைப்படும்.’’

மச்சங்களை நீக்க முடியுமா?

‘‘மச்சங்களை முழுதாக நீக்க முடியும். மச்சங்களை நீக்க லேஸர் முறையைப் பயன்படுத்தலாம். Q switch Nd - YAG Laser முறையில் நீக்கலாம். இதற்கு Radio frequency முறை உகந்ததல்ல. முறையான பிளாஸ்டிக் சர்ஜனிடம் மச்சங்களை அகற்றலாம். ஆனால், மச்சங்களை சரிவர முழுமையாக நீக்காமல் விட்டால் அந்த இடத்தில் காயங்கள், அரிப்புகள் தோன்ற ஆரம்பிக்கும். அதிகபட்சமாக சருமப் புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது.’’
மருக்கள் எதனால் தோன்றுகின்றன?

‘‘பொதுவாக, மருக்கள் குண்டாக இருப்பவர்களுக்கும், நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கும்ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுத்து
மற்றும் அக்குள் போன்ற பகுதிகளில் மருக்கள் வளரும். முதலில் குண்டாக இருப்பவர்களுக்கு பின் கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் அடர் கருப்பு நிறத்தில் மாறும். பின் அந்த இடத்தில் அவர்களுக்கு மருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

இது நீரிழிவின் நோயின் ஆரம்ப கட்டமாகவோ அவற்றின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதாவது பருமன் காரணமாகவும், இன்சுலின் குறைபாடு காரணமாகவும் இவை தோன்றும். உடலில்இருக்கும் இன்சுலின் சுரப்பானது ரத்தத்தில் அதிகமாக இருந்தும், உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காது. இதனால்தான் நீரிழிவுக்காரர்களுக்கும் மருக்கள் தோன்றுகின்றன.’’

மருக்களை நீக்கலாமா?
‘‘மிக எளிதாக மருக்களை நீக்க முடியும். Electrocautery, Radio frequency முறையில் அகற்ற முடியும். லேசர் ட்ரீட்மென்ட்களே இல்லாமல் எளிதாக மருக்களை நீக்கலாம். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு நீக்குவதால் குறைந்தது 5 முதல் 6 வருடங்கள் வரை மருக்களை வராமல் தடுக்க முடியும்.

ஆனால், சிலர் மருக்களுக்கு குதிரை முடி கட்டி இழுத்து விழ வைக்கும் முயற்சியில் இறங்குவர். இது மிக தவறான அணுகுமுறை. இதனால் அந்த இடத்தில் ரணம், தேவையற்ற நோய்த்தொற்றுகள் ஏற்படும்.’’

மருக்களை நீக்குவதால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
‘‘மருக்களில் இரண்டு வகை உள்ளது. இன்சுலின் மாறுபாட்டால் ஏற்படக்கூடிய மருக்கள் தோலின் மேல் வழுவழுப்பாக இருக்கும். இது கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் தோன்றும். பார்ப்பதற்கு அருெவறுப்பை தருமே தவிர இந்த வகை மருக்களினால் எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இந்த மருக்களை அகற்றுவதால் பிரச்னைகள் கிடையாது.

மிகப் பெரிதான மருக்களை அகற்றும்’போது மட்டும் அந்த ரணங்கள் ஆற சிறிது காலம் ஆகும். அப்போது அவற்றை தூய்மையாக வைத்துக்கொள்ளாமல் இருந்தால், அந்த இடங்களில் நோய்த்தொற்றுஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், மற்றொரு வகையான *iral wart என்ற மருக்கள் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. அந்த மருக்கள் மேல் பகுதி சொர சொரப்பாக இருக்கும்.

இவை எளிதில் பரவக் கூடியவை. இதுவும் கழுத்து அக்குள்பகுதிகளில் தோன்றும். ஆனால், இது ஆண்களுக்கு தாடைப் பகுதிகளில் தோன்றினால் அவர்கள் ஷேவ் செய்யும் போது அந்த மருக்களின் மேல் பட்டு மற்ற இடங்களிலும் அதிகமாகப் பரவ வாய்ப்புள்ளது. இந்த வகை மருக்களை கட்டாயம் அகற்றியே ஆக வேண்டும்.’’

உடலினுள் ஏற்படும் மாற்றங்களால் மருக்கள் வருகிறதா அல்லது வெளிக்காரணமா?

‘‘மருக்களைப் பொறுத்தவரை உடல் பருமன் பிரச்னையே பிரதானமான காரணம். சிலர் அழுக்கு சேர்வது, வயதின் காரணமாக மற்றும் பெண்களின் தாலிக்கயிறு ஆகியவற்றால் மருக்கள் தோன்றுவதாக தவறாக எண்ணுகின்றனர்.

ஆனால், குண்டாக இருப்பவர்களுக்குப் பொதுவாகவே பின் கழுத்து மற்றும் அக்குள் பகுதிகள் கறுத்து காணப்படும். இதற்கு அவர்கள் சரியாக சுத்தம் செய்வதில்லை, அதனால்தான் மருக்கள் வருகிறது என்பதில்லை. உடலில் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான இன்சுலின் உடலுக்கு உதவி புரியாததும், உடல் பருமன்பிரச்னையுமே அதற்கு காரணம்.’’

மருக்கள் வராமல் தடுக்க?
‘‘மரபணுக் கோளாறின் காரணமாக மருக்கள் தோன்றினால் அதை வராமல் தடுக்க முடியாது. சாதாரண மருக்கள் என்றால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இவற்றை வராமல் இருக்கச் செய்யலாம். சரியான உடற்பயிற்சியும் முறையான உணவுப் பழக்கவழக்கமும் இருந்தால் மருக்களைத் தடுக்க முடியும். இதன் மூலம் உடல் பருமன் பிரச்னையிலிருந்து தப்பலாம். நீரிழிவுக்கான அறிகுறியாக மருக்கள் இருப்பதால் இவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியம்.’’

- மித்ரா