அக்குபங்சர் அ முதல் ஃ வரை



அறிவோம்

‘உடலின் நோய்களைத் தீர்த்து, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் ஓர் எளிய மருத்துவ முறையே அக்குபங்சர். இந்திய அக்குபங்சர் மருத்துவ முறையின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர். பஸ்லூர் ரஹ்மான், டாக்டர். சித்திக் ஜமால் இருவரும் சேர்ந்து உருவாக்கிய அந்த மருத்துவ முறையையே நாங்கள் பின்பற்றி வருகிறோம்’ என்கிற அக்குஹீலர் இராசராசன் இந்த மருத்துவமுறை தோன்றிய வரலாறு, சிகிச்சைமுறைகள் குறித்து
விளக்கமாகச் சொல்கிறார்.

அக்குபங்சரின் கதைசுமார் 4500 வருடங்களுக்கு முன்பான நெடிய பயன்பாட்டைக் கொண்டது அக்குபங்சர் எனும் சீன மருத்துவம். முழுமையான மருத்துவ முறையாகப் பயணித்த சீன அக்குபங்சரும் அதன் தத்துவங்களிலிருந்து விலகியும், பிற மருத்துவ முறைகளோடு சேர்ந்து செய்யும் முறையாலும் வீழ்ச்சியினை சந்தித்தது.

இந்த நிலையிலேயே இந்த மருத்துவமுறை 1980-களில் இந்தியாவில் இலங்கை வழியாக பரவியதாக அறியப்படுகிறது. இந்த நிலையை மாற்றி அதன் தொன்மை தத்துவம் மாறாமல், நம் மரபு தத்துவங்களையும் உள்ளடக்கி இந்திய அக்குபங்சர் எனும் புதிய வடிவில் மாற்றம் பெற்றது. இந்த மருத்துவ முறையைப் பற்றி அறிவதற்கு முன்னர் மரபுவழி வந்த உடலின் அடிப்படைகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்.உடலே மருத்துவர்தான்உடல் தனக்குத் தேவையான எல்லா வற்றையும் தானாகவே அறிவிக்கும்.

உடலின் ஆற்றல் தேவைகளை அறிவிப்பதே பசி, தாகம், ஓய்வு, தூக்கம் போன்றவை. இதனை கவனித்து நாம் செயல்படும்போது உடலின் சமநிலை காக்கப்பட்டு ஆரோக்கிய நிலை தொடர்கிறது. இதுபோன்ற உடலின் அறிவிப்புகளை கவனிக்காமல் செயல்படும்போது உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

இதனையும் உடல் சரி செய்ய மேற்கொள்ளும் முயற்சியே குணமாக்கும் வேலைகளான தலைவலி, வயிற்றுவலி, கட்டிகள், மயக்கம், சளி, காய்ச்சல், இதய படபடப்பு போன்றவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை உடல் எதிர்ப்பாற்றல் எனும் ஆயுதம் கொண்டு சரிசெய்கிறது நமது உடல்.

பசி, தாகம், ஓய்வு, தூக்கம் ஆகிய இந்த நான்கும் உடலின் ஆற்றல் தேவையை அறிவிக்கும் நிகழ்வுகள். அதை நாம் பூர்த்தி செய்யும்போது உடல் ஆற்றலை முழுமையாகப் பெற்று அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது. இதுவே உடலின் ஆரோக்கியமான நிலை என்று
சொல்லப்படுகிறது.

விதிமீறல்களும் மரபுவழி குணமாக்கலும் உடலில் தொந்தரவுகள் ஏற்படும்போது மரபுவழி மருத்துவ முறைகளை நாடும்போது உடலின் குணமாக்கும் பணிக்கு உதவும் வகையிலே அவை செயல்படுகின்றன. அவ்வகை மருத்துவ முறைகளில் முக்கியமானது அக்குபங்சர். அதன் அடிப்படைகளை அறிய உடலின் இயக்கத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வது அவசியம்.

உடல் என்பது ஒன்றல்ல உடலினை தனித்தனி உறுப்புகளாக பார்க்கும் நவீன மருத்துவத்திலிருந்து வேறுபட்டு, உடலினை உறுப்புகள் சேர்ந்து வேலை செய்யும் ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாக பார்க்கும் மரபுவழி அறிவியலே அக்குபங்சர் மருத்துவ முறையின் அடிப்படையாக உள்ளது. உறுப்புகள் ஒன்று சேர்ந்து இயங்கும் கூட்டு இயக்கங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதே
உடல்.

அண்டமே பிண்டம் அணுக்களின் இயக்கமே உடலின் இயக்கம் என்பது அறிவியல்மொழி. அந்த அறிவியலின்படி நம்மைப் போன்ற உயிர்கள் அனைத்துமே அண்டத்தின் ஒரு சிறிய பகுதியே! பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதே அண்டம். இந்த அண்டத்திலுள்ள மனிதன் உட்பட அனைத்து உயிர்களுமே பஞ்சபூதங்களின் கலவையே. ஆகவே, அந்த பஞ்சபூத சக்தி நம் உடல் முழுவதும் பரவியிருக்கிறது. பஞ்சபூதங்கள் சமநிலையில் இருக்கும்போது அண்டத்தின் இயக்கம் சீராகவும், அது சமநிலையிலிருந்து விலகும்போது சீரற்றும் இருக்கும். நமது பிண்டமும் அதிலுள்ள அணுக்களும் அந்த அண்டத்தின் தன்மையையே உள்ளடக்கி இருக்கிறது.

ஆகவே, உடலின் அணுக்கள் பஞ்சபூத சமநிலையில் இருக்கும்போது உடலின் பஞ்சபூத சமநிலை சீராக இருக்கும். இதுவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை நிலை. உடலின் பஞ்ச பூத சமநிலை சீர்கெடும்போது உடலின் இயக்கம் சீர்கெட்டு அதுவே உடலில் நோய் ஏற்பட காரணமாகிறது.
அக்குபங்சர் சக்தி நாளங்கள்அண்டத்தின் பஞ்சபூத சக்தியினை நமது உடலின் மேற்புற தோல்களிலுள்ள சக்தி நாளங்களின் வழியே உடல் பெறு
கிறது. இந்த அக்குபங்சர் சக்தி நாளங்களில் அமைந்திருக்கும் புள்ளிகளே சக்தியினை உடலின் உறுப்புகளுக்கு கடத்துகிறது.
 
இந்த சக்தி நாளங்களில் அமைந்திருக்கும் 361 புள்ளிகளில் 60 புள்ளிகள் ஆற்றலை உட்கிரகிக்கின்றன. மற்ற புள்ளிகள் உட்கிரகித்த புள்ளிகளிலிருந்து ஆற்றலை உறுப்புகளுக்கு கடத்துகின்றன. இந்த புள்ளிகளின் வழியே ஆற்றல் உட்கிரகித்தல் தடைபடுவதே நோய் என்று சொல்லப் படுகிறது. இந்த ஆற்றல் உட்கிரகிப்பு தடைபடுவதற்கு நாம் உடலின் இயக்க விதிகளில் குறுக்கிடுவதே காரணம்.

அக்குபங்சர் எனும் அதிசயம்நமது வாழ்வியல் விதிமீறல்களால் உடலில் செயலிழப்பு நடக்கும்போது, நோயின் வேரினை அகற்றும் வேலையையே நம்முடைய சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து மரபு வழி மருத்துவங்களும் செய்கின்றன. இது உடலின் இயக்கத்துக்கு துணை நிற்கும் பணி.

அந்த வகையில் உடலின் ஆற்றலை உள் வாங்கி கடத்தும் புள்ளிகள் செயலிழக்கும்போது அதனைத் தூண்டி செயல்பட வைப்பதே அக்குபங்சர் என்கிற மரபுவழி மருத்துவ முறை. இது உடல் உறுப்புகளில் உடனடி செயல்பாட்டை ஏற்படுத்தி நோயின் வேரினை அகற்றுகிறது. இதனால் தொந்தரவுகள் நிரந்தமாக சரி செய்யப்படுகிறது.

மாற்று மருத்துவமான மரபு மருத்துவ முறைகள் அனைத்துமே உடலின் இயக்கத்தோடு சேர்ந்து பணிபுரியும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை உடலின் இயக்கத்தை உறுப்புகள் சேர்ந்து இயக்கும் ஒருங்கிணைந்த இயக்கமாக பார்க்கின்றன. இதன்மூலம் உடலின் முழுமையை புரிந்து மிகச்சரியான குணமாக்கல் பணியைச் செய்ய முடியும். இதனால்தான் இதுபோன்ற மரபுவழி மருத்துவ முறைகள் சிறப்பானதாக திகழ்கிறது. 

நோய்களை நீக்கும் அக்குபங்சர் ஒவ்வோர் உடலும் தனித்தன்மையானது. எனவே, அதன் நோயறியும் முறையும், சிகிச்சைமுறையும் தனி நபரின் உடலைப் பொறுத்தே அமைய வேண்டும். இதுவே மரபுவழி மருத்துவ முறைகளின் சிறப்புத்தன்மை. இந்திய அக்குபங்சரின் நோயறியும் முறையும், சிகிச்சை முறையும் தனி நபரின் உடலைப் பொறுத்தே அமைவதால் சராசரிகளைக் கடந்து, முழுமையான குணமளிக்கும் மருத்துவமுறையாகத் திகழ்கிறது.

நோயறியும் முறைகள் நாடி பரிசோதனை உடலின் இயக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தும் முறைகளுள் பிரதானமான ஒன்று நாடி பரிசோதனை. இது நம் இடது, வலது கைகளில் ஓடும் நாடியின் வழியே நோயின் தன்மையறியும் முறை.கேட்டு அறிதல் சிகிச்சைக்கு வரும் நபர்களின் தொந்தரவுகளைக் கேட்டு நோயின் தன்மையறிவதே கேட்டறிதல் முறை.

பார்த்து அறிதல் சிகிச்சைக்கு வரும் நபர்களின் உடலில் வெளிப்படும் அறிகுறிகளைப் பார்த்து நோயின் தன்மையறிவதே பார்த்து
அறிதல் முறை.

சிகிச்சை முறை

நோயின் தன்மையை அறிந்த பிறகு அது தொடர்பான அங்குபங்சர் புள்ளியினைத் தூண்டச் செய்து இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உள்ளது. ஆள்காட்டி விரலைக் கொண்டு அக்கு புள்ளியினைத் தூண்டுவது ஒருமுறை. அக்குபஞ்சர் ஊசியினைக் கொண்டு அக்கு புள்ளியினைத் தூண்டுவது மற்றொருமுறை. ஆற்றலை உட்கிரகிக்கும் தடைபட்ட புள்ளியினைத் தூண்டும்போது அது செயல்பட்டு உடலின் இயக்கத்தை சீர்படுத்துகிறது. இதுவே உடலின் சீரிய பணியாக மாறி ஆரோக்கிய நிலையை எட்டுகிறது. இப்படி உடலெனும் மருத்துவனுக்கு தேவையான ஆற்றலை சீர்படுத்துவதே அக்குபங்சரெனும் மருத்துவமுறை!

- க.கதிரவன்
படம் :ஆர்.கோபால்