தங்கள் பயணம் இனிதாகட்டும்



Travel check list

பயணம் என்பது பரவசமான, மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். ஆனால், நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியிருப்பதும், வேலைக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்வதும் சற்று அலுப்பைத் தரக்கூடியதாகவும், ஆரோக்கியத்துக்கு ஊறு செய்வதாகவும் சில நேரங்களில் அமைந்துவிடுவதுண்டு. தினசரி அலுவலகம் செல்வதற்காக மணிக்கணக்கில், மைல்கணக்கில் பயணம் செய்கிறவர்களும் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.இதுபோல் தொடர்பயணத்தில் இருப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பொதுநல மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் கேட்டோம்...

‘‘சுற்றுலா போல தொலை தூரம் மற்றும் நீண்ட நாட்கள் பயணிக்க விரும்புகிறவர்கள் முதலில் பயணத்துக்கு ஏற்றவாறு தன் உடல்நலம் சரியாக இருக்கிறதா என்று தங்களது குடும்ப மருத்துவரை அணுகி தங்களது உடலை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முதியவர்கள், குழந்தைகளுக்கு இந்த பரிசோதனை அவசியமானது.

சென்று அடைய வேண்டிய இடத்தின் தட்பவெட்பம், சூழல், உணவு, ஆரோக்கியம், நோய்ளின் தாக்கம் போன்றவற்றை தெரிந்துவைத்துக் கொண்டு அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிட்டு புறப்பட வேண்டும். செல்லும் இடத்தில் இருக்கக்கூடிய மலேரியா, டைபாய்டு போன்ற தொற்றுநோய்களுக்கான தடுப்பு ஊசிகள் / மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துகொள்வது நல்லது.

சிலருக்கு உள்காது தூண்டுதல் மூலம் பேருந்து பயணத்தின் போது வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். அவர்கள் முடிந்த அளவு வாகனத்தில் முன்பக்கம் அமர்ந்து பயணிக்க வேண்டும். பின் இருக்கைகளைத் தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது இந்த பிரச்னை தொடர்ந்து இருப்பவர்கள் மருத்துவரை அணுகி அதற்குரிய மருந்துகளை பயணத்தின் முன்பே வாங்கி சாப்பிட வேண்டும்.

நீண்ட நேரம் பயணிப்பதால் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய சிலருக்கு கால் வீக்கம் மற்றும் காலில் ரத்தம் உறையக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்படலாம். அதனால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நிற்பது,  நடப்பது, காலை மடக்குவது நல்லது.

நாம் பயணிக்கும்போது அதிகம் பாதிக்கப்படுவது வயிறுதான். அதிலும் குறிப்பாக ஜீரண மண்டலம்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. பயணத்தின் போது மது, புகைப்பழக்கம் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள், கார சாரமான உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிட்டு மிதமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்களில் தோல் உள்ள பழங்களை வாங்கி சாப்பிடலாம்.

சாப்பிடும் முன் அருந்த குடிநீர் மற்றும் உணவு சுகாதாரமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.பயணத்தின் போது மனம் மகிழ்ச்சி அடைவது உண்மைதான். ஆனால், நீண்ட நேரம் தனியாக பயணிக்கும்போது மனம் ஒரு வித சலிப்படையலாம். மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால், நீண்ட நேரம் பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் தனியாக பயணிக்காமல் உறவினர், நண்பர்களோடு சேர்ந்து பயணிப்பது உளவியல்ரீதியாக நல்லது.

தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்வோர் 8 மணி நேரத்துக்கு ஒரு முறை பயணத்தில் இடைவெளிவிடுவது உடலையும், மனதையும் சோர்வடையாமல் காப்பாற்றும். பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது அசௌரியங்களை ஏற்படுத்தும். அதனால், அந்த நாட்களில் பயணங்களைத் தவிர்க்கலாம். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையின் படியே பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

பயணத்தையே தொழிலாக கொண்டவர்கள் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மேற்சொன்ன ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. பயணங்களின் நடுவே உறக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது போன்ற விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்’’ என்கிறார்.

- க. இளஞ்சேரன்