நீரிழிவின் தலைநகரங்கள்...



டயாபடீஸ் மேக் இட் சிம்பிள்

அரசு ஆய்வும் அதிர்ச்சி உண்மைகளும்!


நீரிழிவு என்பது வாழ்நாள் பிரச்னை. இதில் வறுமையும் சேரும்போது பிரச்னை இருமடங்காக உருவெடுக்கிறது. இந்தியாவில், நீரிழிவாளர் ஒருவர் சராசரியாக மருந்து மாத்திரைகளுக்கு தினமும் நாற்பது ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. ஆனால், இந்தப் பணத்தைச் செலவிட முடியாத நிலையில்தான் பெரும்பாலான நீரிழிவாளர்கள் இருக்கிறார்கள்.

இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் அமைப்பும், இந்திய சுகாதார அமைச்சகமும் இணைந்து இந்தியா முழுக்க நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியான உண்மை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபர்களிடம் செய்யப்பட்ட பிரமாண்ட ஆய்வு இது. 54 ஆயிரத்து 128 நபர்களிடமிருந்து ரத்த சாம்பிள்களும் பெறப்பட்டன.

முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளப்படாத பட்சத்தில் நீரிழிவின் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், சமூக பொருளாதார அந்தஸ்தில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நீரிழிவு பற்றியெல்லாம் கவலைப்படக்கூட நேரமோ, வசதியோ இல்லை. அன்றாடக் கஞ்சிக்காக உழைக்கும் இம்மக்கள் பொதுவாக எந்த நோயையும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் கூட, அங்கு கால் கடுக்க நின்று மருத்துவரைப் பார்த்து, மாத்திரைகளைப் பெறும் அளவுக்கு நாளும் பொழுதும் வாய்ப்பதில்லை. உழைத்தால் மட்டுமே அன்றைய உணவு என்கிற நிலையில் இருக்கிற இவர்கள், வாழ்க்கைமுறை மாற்றங்களையும் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது. உழைக்கிற அளவுக்கு ஆற்றல் வேண்டும் என்பதற்காக, இவர்கள் பொதுவாக சாலையோரக் கடைகளில் ஓரளவு விலை குறைவாகக் கிடைக்கிற புரோட்டா மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகளையே சாப்பிடுகிறார்கள். சத்தான சமச்சீர் உணவெல்லாம் இவர்கள் கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும்... நடைமுறையில் சாத்தியம் இல்லையே.

ஏற்கனவே நீரிழிவோடு வாழ்கிறவர்களுக்கு மட்டுமல்ல... புதிதாக நாள்தோறும் நீரிழிவாளர் பட்டியலில் இணைவதற்கும் இதுபோன்ற தவிர்க்க முடியாத வாழ்க்கைமுறையே காரணமாக இருக்கிறது பலருக்கு. குறிப்பாக வறுமைக்கோட்டு மக்கள். இம்மக்களின் உணவு பெரும்பாலும் ஜங்க் ஃபுட் ஆக இருப்பதும், அவற்றுக்கு ஈடான கலோரியை உடற்பயிற்சி மூலம் செலவழிக்க வாய்ப்பில்லாமல் இருப்பதும்தான், பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்குகிறது.

முன்பு நகர்ப்புற மக்களிடமே அதிக அளவு நீரிழிவுப் பிரச்னை இருந்தது. இன்று கிராமப்புற மக்களிடமும் அதிக அளவு நீரிழிவுப் பரவல் உள்ளது. காரணம் என்ன? நாட்டின் பெரும்பாலான பகுதி மக்கள் நடப்பதைக் கைவிட்டுவிட்டனர். சைக்கிள் பயன்படுத்துகிறவர்களும் வெகுவாகக் குறைந்துவிட்டனர். இருசக்கர வாகனங்கள் பெருகிவிட்டன.

வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்பட்டு வரும் மாசு காரணமாகவும் நீரிழிவின் பக்க விளைவுகள் அதிகரிக்கின்றன. இப்படி ஒன்றைத் தொட்டு ஒன்றாக நீரிழிவின் வீரியமும் விளைவுகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
தமிழ்நாடு, இந்திய அளவில் நீரிழிவு பரவலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டுப் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். சமூக பொருளாதார அந்தஸ்தில் தாழ்மட்டத்திலுள்ள நகர்புற மக்களில் 15.5 சதவிகிதத்தினர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கிராமப்புற மக்களிடத்தில் 6.5 சதவிகிதமாக  இருக்கிறது. சமூகப் பொருளாதார அந்தஸ்தில் மேல்மட்டத்திலுள்ள நகர்புற மக்களில் 13.3 சதவிகிதமாகவும், கிராமப்புற மக்களில் 8.3 சதவிகிதமாகவும் உள்ளது.

மற்ற எல்லாத் தரப்பினரையும்விட, நகர்ப்புற ஏழை மக்கள் அதிக அளவு நீரிழிவுப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதற்கு என்ன காரணம்? நகரமயமாதலுக்கும் இதற்கும் பெருமளவு தொடர்பு உண்டு. சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் இதற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. பொருளாதார வசதியின்மைக்கும் இதற்கும் நிறையவே தொடர்பு உண்டு.

கிராமப்புறங்களிலும் நீரிழிவுப் பரவல் வேகம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வந்தாலும், அது இன்னும் நகரத்தின் விகிதத்தை விடவும் குறைவாக இருப்பதற்குக்  காரணங்கள் உண்டு. கிராமங்களில் இன்னும் உடல் உழைப்பும் உடற்பயிற்சிகளும் மீதம் இருக்கின்றன. பாரம்பரிய உணவுப்பழக்கமும் ஓரளவு இருக்கிறது. அங்கேதான் நடந்து செல்கிறவர்களும் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே, நகரத்தின் நாகரிக அம்சங்களை கிராமங்களும் எடுத்துக் கொள்வதைப் போலவே, கிராமத்தின் நல்வழக்கங்களை நகரங்களும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

நகரங்களில் வாழும் விளிம்புநிலை மக்களுக்கு உணவு மிகப்பெரிய பிரச்னை. அதிக கலோரி கொண்ட ஜங்க் ஃபுட் வகைகள் மட்டுமே, அவர்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்கிறது. மருந்து, மாத்திரைகளுக்கு நாள்தோறும் நாற்பது ரூபாய் செலவழிக்க முடியாத நிலையில் இருக்கும் இவர்கள், ஊட்டச்சத்து உணவுகளுக்கு எங்கே செல்வார்கள்? காய்கறிகளையும் பழங்களையும் இவர்கள் கண்ணால் மட்டுமே காண்கிறார்கள். மைதா போன்ற நார்ச்சத்தே இல்லாத சக்கை  பொருட்களால் ஆன உணவுகளே இவர்களுக்கு வாய்க்கின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இம்மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் பாதுகாப்பான உறைவிடம் இல்லாததுதான். இவர்களில் பெரும்பாலானோர் சாலையோரக் குடிசைகளில் வசிப்பதால், வாகனப்புகையால் ஏற்படும் அத்தனை சிக்கல்களுக்கும்
ஆளாகின்றனர்.

விளிம்புநிலை மக்களுக்கு பெருகி வரும் நீரிழிவுச் சிக்கல் என்பது சமூகப் பொருளாதார மட்டத்தில் அதிர்ச்சியடையச் செய்யும் பின்விளைவுகளை உருவாக்கக்கூடியது. இவ்விஷயத்தில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி, முறையான மருத்துவ வசதியும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!

- கே.சுவாமிநாதன்