மாத்திரைகள் ஏன் கசக்கின்றன?



டாக்டர் எனக்கொரு டவுட்டு

எல்லா மாத்திரைகளும் ஏன் கசக்கின்றன? கசப்பு சுவை
இல்லாமல் மாத்திரைகளைத் தயாரிக்க முடியாதா?
- பார்த்தசாரதி, தஞ்சாவூர்.

பதிலளிக்கிறார் பொது மருத்துவர் அருணாசலம்.‘‘நோயாளிக்கு நோயின் தன்மையைப் பொறுத்து, காரணம் அறிந்து மாத்திரைகள் தரப்படுகின்றன. சாதாரணமாக திட, திரவ  உணவை உட்கொள்ளும் சக்தி இருப்பவர்களுக்கு மட்டுமே மாத்திரைகள் தரப்படுகின்றன.

கிருமியை உண்டாக்கும் நோய்களுக்கு கிருமி நாசினிகள், உடல் வலி நோய்களுக்கு வலி நிவாரணிகள், காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்துகள் என மாத்திரைகள் முழுக்க முழுக்க நோய் நிவாரணியாகத்தான் பயன்படுகின்றன.

இந்த மாத்திரைகளின் சுவை அதன் மூலக்கூறுகளைப் பொறுத்து அமைகிறது. சில மாத்திரைகள் செயற்கை (Inorganic substances) முறையிலும், சில மாத்திரைகள் இயற்கை (Organic substances) வழியிலான தாவரங்களிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் மூலக்கூறுகளை எடுத்து நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மருந்துகள் எல்லாம் வேதியியல் வினைகளால் சிறு சிறு துகள்களாக இருப்பவைகளை ஒருங்கிணைத்து ஒன்றோடொன்று ஒட்டவைத்து தயாராகின்றன. இதுபோல், பல கட்டமாகத் தயாராகும் மருந்துகளின் மூலக்கூறுகள் இயற்கையாகவே கசப்புச்சுவை உடையதாக இருக்கிறது. அதனால்தான் மாத்திரைகள் கசக்கின்றன.

சில மாத்திரைகள் நோயின் தன்மையைப் பொறுத்து வாயில் போட்டு சப்பி சாப்பிடக் கூடியதாக இருக்கும். மேலும் குழந்தைகளை மாத்திரை சாப்பிட வைப்பதற்காகவும் கசப்பு சுவை தெரியா வண்ணம் மாத்திரைகள் மீது இனிப்புச்சுவை சேர்க்கப்படுகிறது. மாத்திரைகள் கசப்பதற்கும் நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’

- க.இளஞ்சேரன்