டியர் டாக்டர்




விநாயகரோடு மட்டுமே தொடர்புகொண்டது என்று தோப்புக் கரணம் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னணியில் இருக்கும் மருத்துவரீதியான பலன்களைப் படித்துத் தெரிந்துகொண்ட பிறகு, அதன் மீது தனி மதிப்பும் பக்தியும் பெருக்கெடுத்தது. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னணியிலுமே அறிவியல் ரீதியான காரணங்கள் மறைந்திருக்கிறது என்பதற்கான நல்ல உதாரணம் இது.
- சிம்மவாஹினி, வியாசர் காலனி.

ஹேப்பி சம்மர்-2 அட்டைப் படமே செம கூல்... எங்கே தேடிப் பிடித்தீர்கள் இத்தனை அருமையான லொகேஷனை! வெயிலுக்கு இதமாக வந்திருந்த மரமதிகாரமும் பலே!
- இல.வள்ளிமயில், மதுரை.

முதியோர் வாழ்வில் பாலியேட்டிவ் கேர் கட்டுரையைப் படித்தேன். என்னைப் போன்ற முதியவர்களுக்குப் பெரிதும் தெம்பூட்டியிருக்கும் என்று நினைக்கிறேன். முதியோர் மீது மிகுந்த அக்கறை காட்டும் இதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றிகள். நல்வேளைக்கீரை மற்றும் காளான் பற்றிய தகவல்கள் மிகமிக அருமை.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

நீரிழிவு என்ற நோய் இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சி ப்ளஸ் வருத்தம். இளைய தலைமுறைக்கு சரியான நேரத்தில் அபாய மணி அடித்திருக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அசைவம் மற்றும் பால் பொருட்களைத் தவிர்த்து தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடும் வீகன் உணவு முறை பற்றிய கட்டுரை சுவாரஸ்யம். இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிப்பவர்கள் வீகன் உணவு முறைக்கு மாறினாலும் ஆச்சரியமில்லை. 
- ரா.ராஜதுரை, சீர்காழி.

இனிமேல் நம் வீட்டு சமையலில் தினமும் வெங்காய தோசைதான்! பின்னே வெங்காயம்னா சும்மா இல்ல! தங்களின் 41-ம் பக்கம் எடுக்க வைத்த முடிவு இது!
- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.

மகளிர் நலம் காக்கும் விஷயங்களில் குங்குமம் டாக்டர் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொள்வதை நன்றாகவே உணர முடிகிறது. கர்ப்ப கால ரத்த சோகை, மாதவிடாய் அவதிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள், பருத்தொல்லை, வெயில் கால சரும நலம் போன்ற கட்டுரைகள் அந்த அன்பை எங்களுக்குப் புரிய வைத்தது. நன்றி!
- ப.ஸ்ரீவித்யா, திண்டுக்கல்

அட்டைப்படம்: ஆ.வின்சென்ட் பால்