சம்பளத்துடன் 26 வாரம் விடுமுறை!



செய்திகள் வாசிப்பது டாக்டர்

மகப்பேறு கால புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

இந்தியாவில் 1961-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டுவந்த ‘மகப்பேறு நலன் சட்டம்’, பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் பலனளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு, ‘மகப்பேறு நலன் திருத்த சட்டம் 2017’ என்ற பெயரில் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்தச் சட்டத்திருத்த மசோதா, அங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு தற்போது ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜியிடமும் ஒப்புதல் பெற்றுள்ளது.

மகப்பேறு காலத்துக்காக 12 வாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட விடுமுறை காலம், இதன்மூலம் 26 வாரமாக உயர்ந்திருக்கிறது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில், இந்தச் சட்டத்தின்படி முதல் இரண்டு குழந்தைகளுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க அனுமதியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் என்றால் 12 வாரங்கள் விடுப்பு எடுக்கலாம்.

இந்தப் புதிய திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சமாக, 50 அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தூரத்துக்குள் குழந்தைகளைப் பாதுகாக்கும் விடுதிகளை அமைக்க வேண்டும் என்றும், ஒரு நாளைக்கு 4 முறை அந்த விடுதிகளுக்குச் சென்று தனது குழந்தையை கவனிப்பதற்கு நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் மகப்பேறு கால விடுப்பு நாட்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 50 வாரங்களுடன் கனடாவும், இரண்டாவது இடத்தில் 44 வாரங்களோடு நார்வேயும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- க.கதிரவன்