மனதை தொலைக்காதீர்கள்!



கவர் ஸ்டோரி

‘நோய் ஆளைக் கொல்வது குறைவுதான். பயம்தான் பெரும்பாலும் கொன்றுவிடுகிறது என்பார்கள். நாள் பட்ட நோய் வந்துவிட்டது என்பது புரிந்துவிட்டால், அதை மனரீதியாக எதிர்கொள்வதற்குத் தயாராவது அவசியம். அப்போதுதான் வாழ்தல் இனிமையாகும்’ என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின்.

‘‘சாதாரணமாக நமக்கு காய்ச்சல் வந்தாலே நம்முடைய முதல் தேவை ஆறுதலான அரவணைப்புதான். அம்மா வந்து நெற்றியில் கை வைத்ததும் அனத்துவது குறைகிறதே அது நமக்குள் இருக்கும் மனக்குழந்தையின் ஆறுதல் தேடும் ஏக்கம்தான். அப்படி இருக்கும்போது தீவிர அல்லது நாள்பட்ட வியாதி இருப்பதைக் கண்டறிந்தவுடனே அந்த நோயைப்பற்றிய ஒருவித அச்சம், மனக்குழப்பம் என ஏற்படுவது இயல்புதான். அந்த மன நிலையை விவரிக்கவே முடியாது.

முதலில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. முதலில் அதை புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளத் தேவையான மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனக்கான எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்தி, தன்னுடைய முழு ஆற்றலையும் அதற்காக பயன்படுத்தத் தொடங்க வேண்டும்.

புற்றுநோய் அதனால் ஏற்படும் உடல் ரீதியிலான பாதிப்புகள், சிறுநீரக பாதிப்பு, உறுப்பு மாற்றத்துக்காக காத்திருத்தல், நாள்பட்ட நீரிழிவு மற்றும் எதிர்பாராத அறுவை சிகிச்சைகளை எதிர்கொள்தல் போன்ற நிலைகளில் சம்பந்தப்பட்டவர்  மட்டுமல்லாது அவர்
களது குடும்ப உறுப்பினர்களும் மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

நாள்பட்ட நோய்கள் நமக்குள் கையாலாகாத உணர்வை ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. எதிர்மறை எண்ணங்களையும் விதைக்கிறது. இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.நாம் நோயாளி என்பதை மறைக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை தீவிர மன அழுத்தத்தில் தள்ளும்  என்பதை நாம் உணர வேண்டும். அதனால் முதலில் நம் ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொண்டு, நம்நிலையை  ஏற்றுக்கொள்வதும், எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று கழிவிரக்கம்  பாராட்டாமல் சூழ்நிலைக்கேற்றவாறு நாம் ஒத்து போவதும் நோயை குறித்த நம் பார்வையை மாற்றும். 

இதேபோல் நோயின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க நம்மை கவனிப்பவரின் பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை குறையத் தொடங்கலாம். இதனால் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக் கொள்ளுதல் என்பது மிகச்சாதாரண நிகழ்வாக மாறலாம். இது போன்ற நிலையில் நோயாளியோ, கவனித்துக் கொள்பவரோ எப்போதும் ஒருவித துயரம் நிறைந்த மன நிலையில் இருக்க நேரிடும்.

நம்மை எப்போதும் பிஸியாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் வைத்துக் கொள்வது, உடல் தோற்றத்தில் புதிய அக்கறை காட்டுவது போன்றவை நம்மை மகிழ்ச்சியாக மாற்றும். இதுவரை உடுத்தாத ஸ்டைலில், நிறத்தில் உடுத்துவது, நம்மை அழகாகக் காட்டும்படி மிதமாக அலங்கரித்து கொள்வதும் நம் எதிர்மறை எண்ணங்களை மாற்றும். புதிய மொழி, புதுபுது கலைகள் கற்றுக் கொள்வது; புது இடங்களுக்கு செல்லும்போது மாறுபட்ட சூழலில் நம் மனம் புத்துணர்வு பெறும். ஒருபோதும் தனிமையில் இருக்காதீர்கள்.

குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் சேர்ந்து இருப்பது உங்கள் துயரத்தை விரட்டும். அதுமட்டுமல்லாமல் துயரம் மிகுந்த நேரங்களில் மன நல ஆலோசனை  பெற்று கொள்வது மன அழுத்தத்தின் தீவிரத்தைக் குறைக்கும்.இறுதியாக உறவினர்களுக்கு சில வார்த்தைகள்...தீவிர நோயில் இருக்கும் ஒருவருக்கு, ‘நம் நாட்கள் எண்ணப்படுகிறது’ என்பதை விடவும் பெரிய பயம் எதுவுமில்லை.

இந்த நேரத்தில்தான் உறவினர்களது நேர்மறையான அணுகுமுறை அவருக்கு தேவைப்படுகிறது. அவரைச் சுற்றி உள்ளவர்கள் இதுவரை அவர் செய்த நற்செயல்களை சுட்டிக்காட்டி பாராட்டும்போது, நோயாளிக்கு தான் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்த உணர்வைத் தரும்.

மாறாக அவரிடம், ‘உங்களுக்கு பிறகு நாங்கள் என்ன ஆவோமோ, இந்த ஒரு கடமையைச் செய்யாமல்  போகிறீர்களே என ஓயாமல் சொல்வது நிம்மதியற்ற இறுதிநாட்களை அவருக்கு தந்து விடும். மரணத்தை  எதிர்கொள்தல் நிறைவேறாத எதிர்பார்ப்புகளை மேற்கொள்தல் போன்றவற்றிற்கு மனநல நிபுணரின் ஆலோசனை மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்!”

- என்.ஹரிஹரன்