நோய்களுடனும் வாழ்தல் இனிதே!



கவர் ஸ்டோரி

# Patients Smart guide


இனிது இனிது ஆரோக்கியம் இனிது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. அதனால்தான் ஆரோக்கியம் ஒன்றே சிறந்த செல்வம் என்றார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்களை இளவயதிலேயே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன்பிறகு, வாழ்க்கையே சூன்யமாகிவிட்டது போல பலரும் உடைந்துபோய்விடுகிறார்கள். அப்படி விரக்தி அடைய வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளைக் கையாண்டால் நோய்களுடன் வாழ்தலும் இனிதே என்கிறார்கள் நிபுணர்கள்.
அப்படி என்ன எளிய வழி?

முதியோர் நல மருத்துவர் நடராஜன் பேசுகிறார்.நம் நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட பாதிபேர் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய், சிறுநீரக நோய், ஆர்த்ரைட்டிஸ், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று போன்று, ஏதோவொரு நாள்பட்ட நோயால் பாதித்தவராகவே இருக்கின்றனர். இதுபோன்ற நாள்பட்ட நோய் இருப்பது தெரியவரும்போது, ‘தனக்கு ஏன் இந்த நிலை?’ என்று வருத்தமடைகிறார்கள். ‘இனி வாழ்வதே சிரமம்’ என்ற விரக்திக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

ஒருபோதும் அப்படி வருத்தப்படத் தேவையில்லை. ஆரோக்கியமாக வாழும் முறையில்கூட கட்டுப்பாடுகள் இருக்காது, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் இருக்காது. ஆனால், ஏதாவது பிரச்னை என்று வரும்போதுதான் அது நம் வாழ்க்கையில் பெரிய, சிறந்த மாற்றங்களை உருவாக்குகிறது. ஆமாம்... நோய்களுடன் வாழ்தலும் இனிதே. இதைப் புரிந்துகொள்ள சில எளிய வழிமுறைகளைச் சொல்கிறேன். பின்பற்றித்தான் பாருங்களேன்.
அன்றாட வாழ்வில் சில அம்சங்கள்...

நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் வந்தவர்கள் மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி உணவு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் போன்றவற்றையும் கடை பிடிப்பது அவசியம். மருத்துவர் காலையில் எடுத்துக் கொள்ளச் சொன்ன மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டு ஒட்டுமொத்தமாக இரவி–்ல் எடுத்துக் கொள்ளலாம் என்று கவனக்குறைவாக இருப்பதும் தவறான பழக்கம்தான். ஆரம்ப காலங்களில் ஒரு அட்டவணை எழுதி வைத்துக் கொண்டு அதன்படி குறித்த நேரத்தில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். பின்பு பழகிவிடும்.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் நேரம் தவறி உண்பது, சாப்பிடாமல் இருப்பது, விரதம் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எழுந்தவுடன் டீ அல்லது காபி, காலை உணவு, 11 மணியளவில் பிஸ்கட் அல்லது பால், மதியம் சிறிது அரிசி உணவு நிறைய காய்கறிகள், மீண்டும் 4 மணி அளவில் டீ அல்லது காபி, சுண்டல், காய்கறி சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவாக லைட்டாக சாப்பிடலாம். இடையிடையே பஜ்ஜி, வடை போன்றவற்றை உள்ளே தள்ளக்கூடாது. உடற்பயிற்சி தவறாமல் செய்து வந்தால் சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.பயணங்களில் எப்படி தயார் படுத்திக் கொள்வது?

நீண்ட தூர பயணங்கள் செல்பவர்கள் மற்றும் அதிகநாள் வெளியூர்களில் தங்க வேண்டியவர்கள் முன்னேற்பாடாக, வழக்கமாக தாங்கள் சாப்பிடும் மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே, அவசர தேவைக்கான மாத்திரைகளையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஊருக்குச் சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்தால் அங்கு குறிப்பிட்ட மாத்திரை கிடைக்கவில்லை என்பதற்காக இவர் மாத்திரையே சாப்பிடாமல் இருந்துவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது சர்க்கரை, ரத்தக்கொதிப்பு அளவு அதிகமாகி சிக்கல் ஏற்பட்டுவிடும்.

அதேபோல சளி, இருமல், தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம் போன்றவற்றுக்கான அடிப்படை மாத்திரை மருந்துகளையும் ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும். வெளியூர் செல்வதாக இருந்தாலும் அல்லது வீட்டை விட்டு வெளியே பக்கத்து தெருவுக்கு செல்வதாக இருந்தால் கூட இதுபோன்ற நோயாளிகள் தங்கள் அடையாள அட்டையை சட்டைப்பையில் வைத்திருப்பது அவசியம். அந்த அடையாள அட்டையில்
அவரது பெயர், விலாசம், ரத்த வகை, நோய்கள், நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளின் விவரம், அவருடைய மருத்துவரின் போன் நம்பர், வீட்டு உறுப்பினர்களின் போன் நம்பர் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும்.

ஏனெனில், திடீரென்று ஏதேனும் ஏற்பட்டால் அவரை காப்பாற்றும் நபருக்கு அவரைப்பற்றிய விபரங்கள் உதவி செய்யும். வெளியூர் பயணங்களில் நோயாளி தன்னுடைய மருத்துவ வரலாறு அடங்கிய கையேடை வைத்துக் கொள்ள வேண்டும்.

விசேஷ நாட்களை எதிர்கொள்ளும் வழிநீரிழிவு இருக்கும் நோயாளி ஒருவர் தனக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பண்டிகை விசேஷ நாட்களில் விருந்தினை தவிர்த்துவிட வேண்டும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது அடிக்கடி இல்லாமல் என்றாவது ஒருநாள் விருந்து சாப்பாடு சாப்பிடலாம்.

அதனால், விசேஷங்களில் சாப்பிடும்போது நமக்கு தேவையானவற்றை மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடலாம். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள் கண்டிப்பாக விருந்து விசேஷங்களில் சாப்பிடக்கூடாது. எல்லா நிகழ்ச்சிகளிலுமே இப்போது பஃபே சிஸ்டம் இருப்பதுகூட ஒருவிதத்தில் நன்மைதான். நமக்கு வேண்டியதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம்.

சிலர், இன்று ஒரு ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக்கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தில் இருப்பார்கள். ஸ்வீட் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு எந்த அளவிற்கு உயரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

இந்த எண்ணம் மிகவும் தவறானது. ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், வடை, ஊறுகாய் போன்ற உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வீட்டிலுள்ளவர்களும், நண்பர்களும் வற்புறுத்துகிறார்கள் என்பதற்காக நம் உடலுக்கு வேண்டாததை சாப்பிடக்கூடாது. கண்டிப்புடன் மறுத்துவிட வேண்டும்.

இப்போதெல்லாம் சமூகமே மாறிவருகிறது. எல்லோருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உறவினர் வீடுகளில் அவர்களே சர்க்கரை போடலாமா? வேண்டாமா என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்களின் கட்டாயத்துக்கு ஆளாகி எதையும் சாப்பிடக் கூடாது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உங்கள் நோயின் தன்மையைப் புரிய வைக்க வேண்டியது அவசியம்.

நோயின் தன்மையை பொறுத்து முடிவு செய்யும் பொறுப்பில் நாம்தான் இருக்கிறோம். இதுபோல் நோயாளிகள் அன்றாட வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருந்தாலே நாள்பட்ட நோய்களுடனும் இனிதாகவே வாழலாம்!”

- உஷா நாராயணன்
படம் : ஆர்.கோபால்