ஸ்மார்ட் போன் டெக்னாலஜி வில்லன்



கவர் ஸ்டோரி

தகவல் தொடர்புக்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், எல்லா வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போனாக மாறியது ஒருவகையில் வரம்... பலவகையில் சாபம். பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சுவாமி, திரைமறைவில் பல பகீர் காரியங்களைச் செய்வதற்கு இணையான வேலையைத்தான் இன்று ஸ்மார்ட்போன்கள் நமக்கு செய்துகொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனால் உடலியல் ரீதியாக, உளவியல்ரீதியாக பல்வேறு ஆபத்துகள் புதிதுபுதிதாக உருவாகிக் கொண்டிருப்பதை நாள்தோறும் ஏதேனும் ஓர் ஆய்வு நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

ஸ்மார்ட்போன் உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சிக்கல்கள் பற்றி பொது மருத்துவர் அர்ச்சனாவிடம் கேட்டோம்...‘‘ஸ்மார்ட் போனை எந்த வயதினர் உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோக்கிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. குழந்தை அழுதால் பெற்றோரே அதன் கையில் ஸ்மார்ட்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதெல்லாம் பெரிய தவறு.

முதல் 3 வருடங்களுக்கு குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போனைக் கொடுக்கவே கூடாது. ஏனெனில், பெற்றோரைப் பார்த்தும், வெளி உலகைப் பார்த்தும் குழந்தை கற்றுக் கொள்ளத் தொடங்கும் வயது அதுதான். அந்த வயதில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளிடம் தொடங்கினால் கற்றல் திறனில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் உபயோகிக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் அதிக வெப்பம் உடலை நிச்சயம் பாதிக்கக்கூடும். ஸ்மார்ட்போன் ரேடியோ அலைகளினால் புற்றுநோய் உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஆண்கள் பெரும்பாலும் பேன்ட் பாக்கெட்டில் மொைபலை வைப்பதால், உயிரணு உற்பத்தி குறையவும் சாத்தியம் உள்ளது. ஹெட்போன் மாட்டிக்கொண்டு மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது, சத்தமாக பாட்டுகேட்பது போன்ற பழக்கத்தால் கேட்கும் திறன் குறைவதுடன் மூளைக்குச் செல்லும் நரம்புகளும் சேதப்படும்.

ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண்களில் உள்ள நீர் வற்றி கண்கள் வறண்டுவிடும். இத்துடன் கண்களில் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு கண்கள் மங்கலாகிவிடுகிற பிரச்னையும் ஏற்படுகிறது. கழுத்தை குனிந்து கைகளை ஒரே நிலையில் வைத்துக்கொண்டு விரல்களால் வேகமாக மெசேஜ் செய்யும்போது கழுத்து எலும்பு, கைவிரல்கள், மணிக்கட்டு என எல்லா பகுதி மூட்டுகளுக்குமே அழுத்தம் அதிகமாகிறது. மணிக்கட்டில் உள்ள நடு நரம்பிலும் அழுத்தம் அதிகமாகி பலவீனமடைகிறது.

இதனால் மணிக்கட்டிலிருந்து தோள்பட்டை வரை குடைச்சல் ஏற்படும். இதற்கு Carpal Tunnel Syndrome என்று பெயர். இதனால் அலுவலகத்தில் எழுதும்போதோ, டைப் செய்யும்போதோ சிரமம் ஏற்படும்.ஸ்மார்ட்போன்களை பாத்ரூம் செல்லும்போதுகூட அதை எடுத்துச் செல்கிறோம். இதனால் பாத்ரூமில் உள்ள கிருமிகள் செல்போனில் பரவக்கூடும். இதனால் தொற்றுநோய்கள் வர நிறைய வாய்ப்புண்டு. கழிவறையைவிட 3 மடங்கு நுண்கிருமிகள் ஸ்மார்ட்போனில் இருப்பதாக ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது.

இளைஞர்களுக்குப் பருவ வயதின் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஆபாச வலைதளங்கள், விளம்பரங்களைப் பார்த்து வழிமாறும் அபாயமும் அதிகம். இதனால் மற்ற தீய பழக்கங்களுக்கும் எளிதில் அடிமையாவார்கள். சிலர் இரவில் தூங்குகிற நேரத்திலும் ஸ்மார்ட்போனிலேயே அதிகம் செலவிடுவதால் தூக்கம் கெட்டு மறுநாள் இயல்பு வாழ்க்கையும், சகமனிதர்கள் உறவும் சிக்கலாகிறது.

இதேபோல், ஆன்லைன் தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்கத்தொடங்கும் பழக்கமும் ஏற்படுகிறது. இந்த ஆபத்திலிருந்தெல்லாம் தப்பிக்கும் வழிவகைகளை யோசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்கிறார் அர்ச்சனா. சமீபகாலமாக ஸ்மார்ட்போனால் அதிகரித்துவரும் மனநல பிரச்னைகள் பற்றி மனநல மருத்துவர் முத்துகிருஷ்ணனிடம் பேசினோம்...
‘‘இளைஞர்கள் ஒருநாளில் 12 மணிநேரம் வரையிலும் ஸ்மார்ட்போனில் செலவிடுவதாக ஒரு சர்வே சொல்லியிருக்கிறது. 60 வினாடிக்கு ஒருமுறைகூட மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறவர்களும் உண்டு.

இவர்களுக்குத் தூங்கும்போதுகூட மெசேஜ் ஒலி கேட்பதுபோன்ற பிரமையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு ஒரு கட்டத்துக்குமேல் அடிமைத்தனமாக மாறிவிடுகிறது. ஒரு நிமிடம் இல்லாவிட்டாலும் பதற்றம் அடைந்துவிடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஏதோ தனிமைப்படுத்தப்பட்டதுபோல் உணரத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த உணர்வு அவர்களை மன அழுத்தத்துக்கும், மனப்பதற்றத்துக்கும் கொண்டு செல்கிறது.

அலாரம், நினைவூட்டல், கலோரிகள் கணக்கு, எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம், தூங்கியிருக்கிறோம் என ஒருநாளில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஸ்மார்ட்போனை சார்ந்து இருப்பதால்தான் இந்த பிரச்னையே உருவாகிறது. இதனால் Obesessive Compulsive Disorder போன்ற மனநலப் பிரச்னைகளுக்கும் உள்ளாகி விடுகிறார்கள்.

எல்லா தொடர்புகளுக்கும் சாட், டெக்ஸ்ட் மெசேஜ், மெயில், வீடியோ என ஸ்மார்ட்போனையே பயன்படுத்துபவர்கள் நேரடியான சமூகத் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில்லை. நேரடி சமூகத் தொடர்பில் இல்லாத இவர்கள், குறிப்பிட்ட சூழ்நிலையில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகின்றனர்.

குடிப்பழக்கம், போதை போன்ற பழக்கங்களுக்கு அடிமையானவர்களைப் போன்றே ஸ்மார்ட்போன் உபயோகத்துக்கு அடிமையானவர்களின் மூளையின் மகிழ்ச்சிக்கு காரணமான மையங்களின் தூண்டுதல்கள் ஒத்துப்போயிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அளவுக்கு மீறிய ஸ்மார்ட்போன் உபயோகத்தால் தூக்கத்துக்குக் காரணமான மூளையின் மெலட்டனின் சுரப்பு குறைகிறது.

தூங்கும் இடம் இருளாகவும் அமைதி யாகவும் இருந்தால்தான் ‘இது தூங்கும் நேரம்’ என்பதை மூளை உணர்ந்து கொள்ளும். சிலர் படுக்கையிலும் போர்வைக்குள்ளும் மொபைல் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கலாம். இதனால் மொபைலில் இருந்து வெளிப்படும் நீலக்கதிர்களால் குழப்பமடையும் மூளை அமைப்பு மெலட்டனின் சுரப்பை நிறுத்திவிடும். சரியான நேரத்தில் தூங்கும் பழக்கம் மாறிவிடுவதால் பின்னர் தூக்கமின்மை(Insomnia) நோயை ஏற்படுத்தும். மூளையைச் சுருங்கச்செய்து நினைவுத்திறனும் மழுங்கிப் போய்விடும்.

நினைவாற்றல் குறையக்குறைய கல்வித்திறன், செயல்திறன் குறையத் தொடங்கும். நினைவிலிருந்து தகவல்களை மீட்டெடுக்க தடுமாற்றம் ஏற்படுவதால் வேலையில் செயலாற்றலுக்குப் பெரும்தடை அமைந்துவிடுகிறது என்பதை எல்லோரும் உணர வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார்.

 - உஷா நாராயணன்