புல் தானாகவே வளர்கிறது



கொஞ்சம் மனசு

போட்டிகள் நிறைந்த உலகில் பதற்றமும், பரபரப்புமாகத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பந்தய ஓட்டத்தின் எதிரொலியாக மன அழுத்தம், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவது, தூக்கமின்மை, துரித உணவுகளை சாப்பிடுவது, உடல்பருமன் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அவதிப்பட்டு வருகிறோம்.‘இந்த டென்ஷன் சூழலிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு நல்ல வழி இருக்கிறது. அதுதான் Relaxation Technique’ என்று ஐடியா கொடுக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள்.

ரிலாக்சேஷன் டெக்னிக்குக்காக ஒருநாளில் நீங்கள் செலவு செய்ய வேண்டியது 10 நிமிடங்கள் மட்டுமே. அது எந்த நேரமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த 10 நிமிடங்களும் அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

‘அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன் பேர்வழி’ என்று தொலைக்காட்சி பார்ப்பது, போனை நோண்டுவது, தூங்குவது, யோசிப்பது எல்லாம் ரிலாக்சேஷன் அல்ல. எதையுமே செய்யாமல்... விழிப்புணர்வோடு அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் ரிலாக்சேஷன் டெக்னிக்.

‘இதுபோல் தளர்வாக அமர்ந்திருக்கும்போது சீரான இதயத்துடிப்பு, சுவாசத்தில் ஒழுங்கு, மன ஒருமைப்பாடு என்று நல்ல மாற்றங்கள் தானாகவே நிகழும்’ என்று பரிந்துரைக்கின்றன Journal of Behavioral Medicine, British Medical Journal போன்ற இதழ்கள். ‘சில நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையை அமைதியாக உற்றுநோக்குங்கள்.

உங்களுடைய முயற்சி, செயல் ஏதும் இல்லாமலேயே பல விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உங்களுக்குப் பொறுமை இருந்தால்... அதற்காக நீங்கள் தயாராக இருந்தால் எல்லாம் தானாகவே நடக்கும்... புல் தானாக வளர்வதைப் போல!’ என்கிறார் ஓஷோ.ஆகவே, அமைதியாக இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்... அற்புதங்களும் நடக்கும், ஆரோக்கியமும் கிடைக்கும்!

- ஜி.ஸ்ரீவித்யா